Friday 30 January 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.....பகுதி....4



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 4.  வர்ணங்கள் பிறப்பை ஒட்டி அமைவதில்லை.  தான் மேற்கொள்ளும் கர்மாவை பொறுத்தே அமைகிறது.  துரோணாச்சாரியார் பிறப்பாலும், மேற்கொண்ட கர்மாவாலும் பிராமனர்.  ஆனால் அவர் மகன் அஸ்வத்தாமன் பிறப்பால் பிராமணர் என்றாலும் மேற்கொண்ட கர்மாவால் க்ஷத்திரியரானார்.  விஸ்வாமித்திரர் பிறப்பால் க்ஷத்திரியர்.  மேற்கொண்ட கர்மாவால் பிராமணரானார். இவற்றை ஆமோதிப்பது போல் திருவள்ளுவரும் " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், அதன் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான், " என்று குறள் எழுதியிருக்கிறார்.   இக்காலத்தில் இந்த வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கப்படவில்லை என்றாலும், ஜோதிடத்திற்காக ஜோதிடர்களாகிய நாம் அதை ஜாதகத்தை பொறுத்தவரை பின்பற்றியாக வேண்டும்.  அப்போதுதான் நவரத்தின கற்கள் சம்பந்தமான ஜோதிடகணிப்பு செய்ய முடிவதுடன், அவையும் பலிதமாகும்.  இனி வர்ணத்திற்கு தகுந்தவாறு வைரக்கற்கள் எவ்வாறு அமைகின்றன? என்று பார்க்கலாம். 

பிராமண வர்ணத்தார், ஒளி ஊடுருவும் தன்மையுடைய, வெண்மையான வைரத்தையும், க்ஷத்திரிய வர்ணத்தார், சிகப்பு, பிங்க் கலந்த செம்பு வண்ண வைரத்தையும், வைசிய வர்ணத்தார், லேசான மஞ்சள் கலந்த வைரத்தையும், சூத்திர வர்ணத்தார், கருப்பு மற்றும் கருமை படர்ந்த வைரத்தையும் அணிய வேண்டும்.  வைரத்துக்கும், செய்யும் தொழில் என்று சொல்லகூடிய கர்மாவுடன் தொடர்புடைய வர்ணத்துக்கும் தொடர்புடைய காரணத்தால், வர்ணம் மாற்றி வைரத்தை அணியும் போது செய்யும் தொழில், நடத்தை, செயல்பாடுகள் ஆகியவற்றில் பெரும் குழப்பம் விளைந்து விடும்..  வைரம் என்றாலே பளபளப்பாக கண்ணடி போல் இருக்க வேண்டும் என்றும், அதை அணிந்தால் பகட்டாகவும், கௌரவமாகவும் இருக்கும் என்றும் எண்ணும் எண்ணத்தை ஜாதகர்கள் கை விட்டு விட வேண்டும்.  அதுபோல் ஆண்குழந்தை பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பும் பெண்கள் கருவுறும் காலத்தில் வைரம் அணியக்கூடாது.  காரணம், சுக்கிரன் பெண்கிரகம்.  வைரமானது சுக்கிரனின் சக்தியை ஈர்த்து, பெருக்கி தருமாதலால், கருவில் இருக்கும் சிசுவுக்கு பெண் தன்மை அதிகரித்து விடும்.  ஆகவே வைரத்தை அணியுமாறு ஜாதகர்களுக்கு அறிவுறுத்துவதில் ஜோதிடர்களும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

 வைரம் முதன்முதலாக தோன்றியதற்கும், ஜோதிடத்தோடு தொடர்புடைய ஒரு ருசிகரமான புராண வரலாறு உள்ளது.  தேவலோகத்தை ஆள்பவன் இந்திரன்.  இந்திரன் என்பது தேவலோக ராஜபதவியின் பெயராகும்.  யார் வேண்டுமானாலும், தகுதி படைத்தவர்கள் இந்திரனாகலாம்.  ஒரு முறை இந்திர பதவியில் இருந்த யாரோ ஒரு இந்திரன், த்வஸ்தர் ஆதித்யா என்பவரின் மகனை கொன்றுவிட்டார்.  ஆகவே இந்திரனை பழிவாங்க அவர் விருத்திராசுரனை  உருவாக்கினார்.  இந்த விருத்திராசுரன் ராகுவின் சக்தியாக, கும்பராசியில் சதய நக்ஷத்திரத்தில் உருவானவன்.  காலபுருஷ தத்துவப்படி கும்பராசி, விருத்தியை தரும் லாபஸ்தானமாகும்.  எனவே அவனுக்கு விருத்திரன் என பெயர் வந்தது.  அந்த நேரத்தில் சூரியனுக்கு இந்திரபதவி கிடைத்து இந்திரனாக இருந்தார்.  எனவே சூரியனை எதிர்க்க, சூரியனை விட சக்தி வாய்ந்த ஜென்ம பகைவனான ராகுவின் சக்தியாக விருத்திராசுரனை த்வஸ்தர் ஆதித்யா உருவாக்கினார்.  இங்கே ராகு எனும் இருள் கும்பராசியில் உருவாக, சூரியன் எனும் ஒளியாகிய பகல் சிம்மராசியில் உருவாகும் என்பதை கவனிக்கவேண்டும்.  சூரியனுக்குரியது சிம்மராசி.  காலப்போக்கில் விருத்திராசுரன் எனும் ராகுவுக்கும், இந்திரன் எனும் சூரியனுக்கும் போர் மூண்டது.  இதில் விருத்திராசுரன் எனும் ராகுவின் பலம் ஓங்கியது.  ஜோதிட விதிப்படி ராகு எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசியின் எதிர்ராசி பலனை ஈர்த்துவிடுவார்.  ராகுவிடம் சூரியன் தோற்று கிரகணத்துக்கு உள்ளாவதும் இந்த தத்துவ அடிப்படையிலாகும்.   ஒரு போர் நடக்கும் போது அதற்கான வியூகம் வகுப்பது தனிக்கலையாகும்.  இந்திரனுக்கும், விருத்திராசுரனுக்கும் நடந்த போரின் போர்க்கள வியூகத்தை திருமால் வகுத்தார்.  அது ஜாதககட்டம் போன்ற அமைப்பில் இருந்தது.  சூரியனாகிய இந்திரன் சிம்மராசி பகுதியிலிருந்து, தனக்கு நேர் எதிரிலிருந்த கும்பராசியின் பகுதியிருந்த விருத்திராசுரனாகிய ராகுவை எதிர்த்தார்.  விருத்திராசுரனாகிய ராகுவை வீழ்த்த சூரியனாகிய இந்திரன், ததீசிமகரிஷியின் முதுகெலும்பிலிருந்து உருவாகக்கூடிய வஜ்ராயுதத்தை பெறவேண்டும் என திருமால் உபதேசித்தார்.  வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருளாகும்.  அவ்வாறே சூரியனாகிய இந்திரன் வைர ஆயுதத்தை பெற்று ராகுவாகிய விருத்திராசுரனை வீழ்த்தியதாக புராணம் சொல்கிறது.  இவ்வாறாக முதன்முதலாக வைரம், ததீசிமகரிஷி முதுகெலும்பிலிருந்து தோன்றியதாகும்.  [ [ [ தொடரும் ] ] ].................



vv

No comments:

Post a Comment