Monday 27 October 2014

ஜாதகமும் பரிகார வழிபாடுகளும்.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  பரிகார வழிபாடுகள் பற்றிய முழுதகவல்களை ஜாதகர்களுக்கு தெரிவிக்கும் பதிவு இது.  திரு கீரனூர் நடராஜன் அவர்கள் இயற்றிய ஜாதக அலங்காரம் என்னும் நூல் ஜோதிடர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறது.  இந்த அறிவுரை 11 வது பாடலாக இடம் பெற்றுள்ளது. 

' பிரம்மதேவர் அவரவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப அவரவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்.  பிரம்மதேவர் விதித்த அந்த விதி என்னவென்று எடுத்தியம்புவதே ஜாதகமாகும்.  ஜாதகத்திலுள்ள பன்னிரண்டு பாவங்களை கொண்டு அவர்வர்களுக்கு இப்பிறவியில் நடக்கவிருக்கின்ற நன்மை என்ன/ தீமை என்ன/ என்று பெரியோர்கள் கண்டறிந்து கூறியிருக்கின்றனர்.  நன்மை வருமானால் அதை எடுத்து சொல்லி, மனிதர்களை ஆனந்தப்படுத்துவதற்கும், தீமை வருமானால் அதற்கான பரிகாரத்தை எடுத்து சொல்லி மனிதர்களை ஆற்றுப்படுத்துவதற்கும், ஜாதக கணிதத்தை பெரியோர்கள் வகுத்துரைத்துள்ளனர் '.

இதிலிருந்து பரிகாரங்களை எடுத்துரைப்பதும், அதற்கு வழிகாட்டுவதும் ஒரு ஜோதிடரின் கடமையென புரிந்துகொள்ளலாம்.  நல்வினைகளை ஜாதகர்கள் தானே அனுபவிப்பர்.  இந்த நல்வினை பயன்களை முழுமையாக தடையின்றி பெற குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும், பிதுர் வழிபாடும் முறையாக செய்து வருதல் வேண்டும்.  இது எல்லோருக்கும் பொதுவானது.  தீவினை பலன்கள் தரக்கூடிய ஜாதகங்களை இருவகையாக பிரிக்கலாம்.  அவை..............

1.  தீவினை பலன்கள் அனுபவித்தே ஆக வேண்டிய ஜாதகங்கள்.
2.  பரிகார வழிபாடுகளால் தீவினைகளை குறைக்கவும், தவிர்க்கவும் வழிவிடக்கூடிய ஜாதகங்கள்.

முதல்வகை ஜாதகங்களுக்கு பாக்கியஸ்தானம் முற்றிலுமாக கெட்டுப்போயிருக்கும்.  இவ்வகை ஜாதகர்களுக்கு எவ்வித பரிகார வழிபாடுகளும் செல்லுபடியாகாது.  எனவே அவர்கள், முன் சொல்லப்பட்டதுபோல் குலதெய்வவழிபாடையும், இஷ்டதெய்வவழிபாடையும், பிதுர் வழிபாடையும் தவறாது செய்து வருதல் வேண்டும்.  பிதுர்வழிபாடு விடுபட்டு போயிருப்பின் திலஹோமம், அல்லது குறிப்பிட்ட சில ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விடுபட்டு போன பிதுர் வழிபாட்டு குறையை நிவர்த்தி செய்துகொள்ளலாம்..

இரண்டாம் வகை ஜாதகங்ளில் பாக்கிய ஸ்தானம் நல்ல முறையில் அமைந்திருக்கும்.  இவ்வகை ஜாதகங்களை இரு வகையாக பிரிக்கலாம்.

1.  சுப கிரகங்கள் நல்லயோகம் தரும் நிலையில் இருந்தும், அவற்றில் தாமதம், அல்லது தடை ஏற்படும் வகையில் அமைந்திருப்பது.
2.  ஜாதகத்தில் நல்லயோகம் கிடைக்கும் நிலை இருந்தும் அசுப கிரகங்களால் தடுக்கப்படுவது.

இவ்விருவகையான ஜாதகர்களுக்கும் இருவகையான பரிகார வழிபாடுகள் உள்ளன.  இவற்றை முறையாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  மாற்றி செய்யும்போது பலன் ஏறுக்கு மாறாக அமைந்துவிடும்.  எந்த வகை வழிபாடாக இருந்தாலும். அவ்வழிபாடு மனமொன்றி செய்தலும் அவசியம். மேற்கண்ட இருவகை ஜாதகங்களுக்கும் திருக்கோவில் பரிகார வழிபாடு, மற்றும் அதற்கேற்ற தான தருமங்கள் செய்தல் அவசியம்.  திருக்கோவில் பரிகார வழிபாடால் பரமாத்மாவை வணங்குகிறோம்.  தானதருமங்களால் இவ்வுலக ஜீவாத்மாக்களுக்கு உதவுகிறோம்.  இதை ஜாதகர்கள் மறந்துவிடலாகாது. மேலும் முதல்வகை ஜாதகர்கள் வழிபடும்போது, நல்லயோகங்களை விரைந்து தடையின்றி வழங்கியருளுமாறும், இரண்டாம் வகை ஜாதகர்கள் யோகங்கள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கியருளுமாறும் வேண்டிக்கொள்ளவேண்டும்.  இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வழிபடுவது சாலச்சிறந்தது.  இதன் பின்பு தொடர்ந்து செய்யக்கூடிய வழிபாடுகளில் வித்தியாசங்கள் உள்ளன.  முதல்வகை ஜாதகங்களுக்கு, நவரத்தினகற்கள், எந்திரம் ஆகியவற்றின் துணையால் நல்ல யோகங்களை தாமதமின்றி, தடையின்றி விரைவாக கிடைக்கும்..  இதே நவரத்தினகற்கள், எந்திர வழிபாடை இரண்டாம் வகை ஜாதகங்களுக்கு பரிகார வழிபாடாக மேர்கொண்டால், அசுபகிரகங்களின் சக்தி அதிகரித்து, பலன் எதிர்வினையாகிவிடும்.  இரண்டாம்வகை ஜாதகங்களுக்கு, வீட்டிலேயே ஜாதகர் ஹோமம் செய்து வழிபடுவதே சிறந்தவழியாகும்..

கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு.  ஜனன ஜாதகத்தில் ஒரு நல்ல யோகம் இல்லையென்றால், என்ன வழிபாடு செய்தாலும் நல்லது நடந்துவிடாது.  ஆனால் ஏமாற்றி பிழைக்கும் சில ஜோதிடர்கள், இல்லாததை வரவழைத்துவிடலாம் என்றும் மந்திர, எந்திர வழிபாடு செய்யலாம் என்றும் தந்திரம் புரிந்து பணம் பறித்துவிடுகிறார்கள்.  இம்மாதிரியான ஜோதிடர்களிடம், ஜாதகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  எனவே நல்ல அனுபவமுள்ள, மனிதநேயமுள்ள ஜோதிடரை அணுகி, சரியான வழிகாட்டுதலுடன், பரிகார வழிபாடுகளை நிறைவேற்றி வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.  இறைவன் திருவருள் புரிவானாக.  நன்றி.  வணக்கம்.

Sunday 19 October 2014

ஸ்ரீபைரவர் வழிபாடும் ஜோதிடமும்



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வ்ணக்கம்.   ஸ்ரீபைரவருடைய அவதார தினமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தை புராணங்கள் எடுத்து சொல்கிறன.  எனவே வருடந்தோறும் அன்னாளை ஸ்ரீபைரவாஷ்டமி என திருக்கோவில்களில் கொண்டாடுகிறார்கள்..  இதனால் இந்த நாளை மாதந்தோறும் நினைவுகூறும் வகையில் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீபைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.  புராணப்படி மட்டுமல்ல.  ஜோதிடப்படியும் இந்த தினம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகிறது. 

காலபுருஷ தத்துவப்படி, ஸ்ரீபைரவருடைய ஜென்ம மாதமாகிய கார்த்திகை எட்டாமிடமாகிறது.  அதாவது விருச்சிக ராசி.  ராசியாதிபதி செவ்வாய் என்பதால் ஸ்ரீபைரவர் செவ்வாய்க்குரிய வழிபடும் தெய்வமானார்.  மேலும் எட்டாமிடத்திற்குரிய காரகத்துவம் பெற்றவர் சனிபகவான்.  எனவே சனிக்குரிய வழிபடும் தெய்வமாகவும் ஆனார்.  செவ்வாய்க்குரிய தெய்வமாக ஸ்ரீமுருகப்பெருமானும், சனிக்குரிய தெய்வமாக ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகிய தெய்வங்களை ஜோதிடனூல்கள் குறிப்பிடும்போது, ஸ்ரீபைரவரையும் குறிப்பிட ஒரு காரணம் உள்ளது.  செவ்வாய், சனி இருவரும், ஸ்தானாதிபத்தியப்படியும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையிலும் முழு சுபராக இருப்பின் முறையே, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்த்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகியோர் வழிபடும் தெய்வமாவர்.  செவ்வாயும், சனியும், ஸ்தானாதிபத்தியத்தாலும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையாலும் அசுபத்தன்மை பெற்றால் ஸ்ரீபைரவர் வழிபடும் தெய்வமாவார். எனவே அவரது அவதாரம், காலதத்துவபுருஷப்படி அஷ்டமஸ்தானத்திலும், சந்திரனின் அஷ்டம்திதியிலும், அதுவும் தேய்பிறையிலும் நிகழ்ந்தது.  தாய், தந்தை எனப்படும் இரு கிரகங்களும் அசுபத்தன்மையோடு இருப்பதை பார்க்கமுடிகிறது.

சிற்ப சாஸ்த்திரங்கள் ஸ்ரீபைரவரை அஷ்ட சக்திகளாக பிரித்துள்ளது.  மூலசக்தி ஸ்ரீகாலபைரவர்.  ஜோதிட சாஸ்த்திரமோ ஸ்ரீபைரவரை நவசக்திகளாக பிரித்துள்ளது. ஒவ்வொரு சக்தியும், ஒவ்வொருகிரக அம்சம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது.  அதன் பட்டியலை கீழே காணலாம்.

1. சூரியன்        -   சுவர்ணாகர்ஷணபைரவர்   
2. சந்திரன்        -  கபால பைரவர்                    
3. செவ்வாய்      - சண்ட பைரவர்                  
4. புதன்           - உன்மத்த பைரவர்                 
5. குரு           - அசிதாங்க பைரவர்               
6. சுக்கிரன்        - ருரு பைரவர்                  
7. சனி           - குரோத பைரவர்                 
8. ராகு           - சம்ஹார பைரவர்                  
9. கேது          - பீஷண பைரவர் 

சனியும், செவ்வாயும், தனித்தனியாகவோ, அல்லது இணைந்தோ, மேலும் வேறு கிரகத்துடன் கூட்டு சேர்ந்தோ கெடுபலனை தருமானால், கூட்டு சேர்ந்த கிரகம் எதுவோ அதற்குரிய அம்ச ஸ்ரீபைரவரை வணங்கவேண்டும்.  இதனால் கெடுபலன் குறையும். 

1.  ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவதால் பொருளாதார சிக்கல்கள் தரக்கூடிய கெடுபலன் குறையும்.  இவருக்குரிய ஸ்தலம்.  கும்பகோணம் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் கோவில்.  2.  ஸ்ரீகபாலபைரவரை வணங்குவதால், மனதில் ஏற்படும் உளைச்சலும், அதனால் ஏற்படக்கூடிய சித்தப்பிரமை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  திருவிற்குடி, திருப்பூந்துருத்தி.  3.  ஸ்ரீசண்ட பைரவரை வணங்குவதால் போட்டி, பொறாமை, கடுமையான எதிரிகள் தொல்லை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில்.  4.  ஸ்ரீஉன்மத்த பைரவரை வணங்குவதால் அரைகுறை ஞானசூன்யம், மற்றும் பித்துபிடித்த நிலைக்கு ஆளாகும் நிலை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  திருவீழிமிழிலை.  5.  ஸ்ரீஅசிதாங்கபைரவரை வணங்குவதால், தொழிலில் காணப்படும் படைப்புத்திறன் குறைதல், மந்தனிலை ஆகியன குறையும்.  ஸ்தலம்.  சீர்காழி ஸ்ரீசட்டனாதர் ஆலயம்.  6.  ஸ்ரீருருபைரவரை வணங்குவதால், கற்பித்தல், மற்றும் கற்றுகொள்ளல் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகளுக்கான கெடுபலன் குறையும்.  ஸ்தலம், திருமருகல், ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவில்.  7.  ஸ்ரீகுரோதபைரவரை வணங்குவதால் காரணமின்றி விளையக்கூடிய, கோப, ஆவேச குணங்களால், அடுத்தவர்கள் தரும் துன்பங்கள் குறையும்.  ஸ்தலங்கள்.  திருவிசைனல்லூர், திருனறையூர்.  இவ்விரண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ளன.  8.  ஸ்ரீசம்ஹாரபைரவரை வணங்குவதால் பூர்வபாபகர்ம வினையால் விளையாக்கூடிய துன்பங்கள் குறையும்.  ஸ்தலங்கள்.  திருவெண்காடு, கொல்லிமலை, வைரவன்பட்டி.  9.  ஸ்ரீபீஷணபைரவரை வணங்குவதால், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பயங்கர கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  ராமேஸ்வரம், பிரான்மலை.

உங்கள் ஊருக்கு அருகில் உல்ல ஸ்ரீசிவபெருமான் கோவிலில் மேற்கண்ட ஸ்ரீபைரவ மூர்த்தங்கள் இருப்பின் அங்கேயே வழிபாடு செய்யலாம்.

மேற்கூறிய சிவஸ்தலங்களில், அந்தந்தந்த பைரைவருக்கு தனிசன்னதிகள் உள்ளன.  ஸ்ரீபைரவருக்குரிய அம்சமறிந்து, அந்த அம்ச கிரகத்துக்குரிய பரிகாரவழிபாடுகளை ஸ்ரீபைரவருக்கு செய்யவேண்டும்.  பொதுவாக மேற்கூறப்பட்ட எல்லா கெடுபலனுக்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்கலாம்.  சனி, செவ்வாய் தனித்தனியாகவோ, இணைந்தோ, மற்ற கிரகத்துடன் கூட்டணி கொண்டோ உருவாக்கும், கண்டம், தீராதநோய், கட்டுப்படாத கடன்சுமை, வம்புவழக்குகள், எல்லா முயற்சிகளிலும் ஏற்படும் தடை ஆகியவற்றிற்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்குவது சிறப்பு.  மேற்கூறப்பட்ட கெடுபலன்கள், அதை உருவாக்கும் கிரகங்கள், அதற்குரிய ஸ்ரீபைரவர் வழிபாடு ஆகியவற்றை நாமே சுயமாக அறிந்துகொள்ளவும், அதற்குரிய வழிபாடுகளை செய்யவும் முயற்சிக்காமல், நல்ல அனுபவமுள்ள ஒரு ஜோதிடரின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.  அதற்கு ஸ்ரீபைரவர் திருவருள் புரிவாராக.  நன்றி.  வணக்கம்.   

Thursday 16 October 2014

உத்தவ கீதையும் ஜோதிடமும்

     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா அர்ஜ்ஜுனனுக்கு சாரதியாக வந்து உபதேசித்தது " பகவத் கீதை,".  அது போல் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தனது சாரதியான உத்தவருக்கு உபதேசித்தது " உத்தவ கீதை,".  அதிலிருந்து ஜோதிடம் சம்பந்தமான ஒரு சுவாரஸ்யமான தகவல்..........................

     பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், தான் ஒரு சக்கரவர்த்தியாக வேண்டும் என்பதற்காக ராஜசுய யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.  யாகத்துக்கு உண்டான திரவியங்களை மற்ற அரசர்கள் தர வேண்டும்.  அத்துடன் தருமருக்கு அடிமை எனும் வகையில் சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் தருமருடன் போர் புரிய வேண்டும்.  தோற்றால், தோற்றவன் தருமருக்கு அடிமை.  வென்றால் வென்றவன் சுதந்திரமாக தருமருக்கு நட்பு அரசனாக  இருக்கலாம். அந்த வகையில் தருமருக்கு ஏகப்பட்ட திரவியங்கள் சேர்ந்து விட்டன.  இனி யாகம் செய்யவேண்டியதுதான் பாக்கி. 

     தனது தம்பியும் ஜோதிடக்கலை வல்லுனருமாகிய சகாதேவரை  அழைத்து யாகத்துக்கான நல்ல நாள் குறிக்க சொன்னார்.  நல்ல நாளும் குறிக்கப்பட்டது.  யாகத்துக்கு தலைமை தாங்க ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அவரும் வந்தார்.  யாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  ஆனால் அதனால் கிடைத்த பலன் என்ன?  தருமர், தன் தாயார் மற்றும் குடும்பத்தாரோடு, உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி காட்டில் அலைய நேர்ந்தது.  இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உத்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.

     உத்தவரின் கேள்வி::::::::::::::::::::::::::" ஐயனே, உலகித்தில் மிகச்சிறந்த ஜோதிடக்கலை வல்லுனராகிய சகாதேவர், நாள் குறித்தாரே! அந்த நாள் குறையுடையதா?சகாதேவர் ஜோதிடக்கலைக்கு துரோகம் செய்துவிட்டாறா?  நீங்கள் தலைமை தாங்கினீரே!  அவர்களுக்கு நீங்கள் அருள் புரியாமல் விட்டு விட்டீர்களா? எதனால் இப்படி நடந்தது?

     ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பதில்:::::::::::::::::::::::::::::::  நாளும் சுபகரமானதே.  என் அருளும் குறைவிலாததே.  ஆனால் ராஜசுய யாகம் என்ற நல்ல காரியத்துக்கு, தருமர் திரட்டிய திரவியங்கள் பாப சம்பந்தப்பட்டவை..  போரில் அனேகம் பேர் இறந்தனர்.  பல அரசர்கள் வேதனையுடன் திரவியங்களை தந்தனர்.  இப்படி பாவப்பட்ட வழியில் கிடைத்த திரவியங்களை கொண்டு என்னதான் நல்ல நாள் பார்த்து { இது ஜோதிடர் தவறல்ல },  நல்ல காரியம் செய்தாலும், அது உடனே பலனளிக்காது.  அதற்கென்று பலன் உண்டு அது தாமதமாக கிடைக்கும்.  என் அருளும் அப்படித்தான்.

     உத்தவர்:::::::::::::::::::::::::::::::::::::::ஐயனே, மிகச்சிறந்த ஜோதிடரான சகாதேவருக்கு, தருமர் காடு போவார் என்று முன்னமே தெரியாதா?

     ஸ்ரீ கிருஷ்ண பர்மாத்மா::::::::::::::::::::::::::::::::::::::::::::::இது சகாதேவன் { ஜோதிடர் } செய்த தவறு.  அண்ணன் நாள் பார்க்க சொன்னான்.  யாகத்துக்குண்டான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த சகாதேவன், எப்படியும் யாகம் நடக்கப்போகிறது என்ற எண்ணத்தில், நாள் குறித்தான்.  அவன் , அண்ணனுக்கு தம்பியாக இருந்து நாள் குறித்தானே தவிர, ஜாதகருக்கு ஒரு ஜோதிடராக செயல்படவில்லை.  செயல் பட்டிருந்தால், தருமனுக்கு தற்போது சக்ரகர்த்தி ஆகும் யோகம் உள்ளதா? என ஆராய்ந்திருப்பான். 

     ஆகவே ஒரு நல்ல காரியத்திற்கு நாள் பார்க்கும் போது, நல்ல யோகம் வந்து விட்டதா? என பார்க்கவேண்டிய அவசியமாகிறது.  இந்த பொறுப்பு, ஜாதகருக்கும், ஜோதிடருக்கும் உண்டு.  அதே போல் மிக நுணுகி ஆராய்ந்து நல்ல நாள் பார்த்தாலும், அதிலும் ஒரு குறை ஏற்படுகிறது என்றால் அது ஜோதிடர் தவறு இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த விஷயத்தில் நாம் கூட நம்மை அறியாமல் தவறு செய்திருக்க வாய்ப்பு உண்டு.   

Monday 13 October 2014

'அபிஜித்' என்பது நக்ஷத்திரமா? முஹூர்த்தமா?



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ' அபிஜித் ' என்ற சொல் இந்திவ வானவியலோடும், இந்திய வேத ஜோதிடத்தோடும் எவ்வகையான தொடர்பு கொண்டுள்ளது என்று விவரிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.  எனவே கட்டுரையின் முதல் பகுதி 1.  அபிஜித்தும் வானவியலும் என்றும், இரண்டாவது பகுதி 2. அபிஜித்தும் ஜோதிடவியலும் என்றும் தலைப்பிடப்பட்டு, பதிவிடப்படுகிறது. இக்கட்டுரை உருவாவதற்கு தங்களது மதிப்புயர்ந்த கருத்துகளை வழங்கிய ஜோதிட நண்பர்கள் திரு ரஞ்சித்பாபு, திரு. பவளக்கண்ணன், திரு அஸ்ட்ரோ ராஜசேகரன். திரு மணிகண்டன் பாரதிதாசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இக்கட்டுரை உருவாவதற்குரிய காரணங்கள்.

1.  முன்னொரு காலத்தில் அபிஜித் என்ற நக்ஷத்திரம் ஜோதிடத்தில் 28 வது நக்ஷத்திரமாக கருதப்பட்டு வந்தது.  தசாபுக்தி கணிதம் அதற்கேற்ப இருந்தது.  ராகு கேதுக்கள் கிரக அந்தஸ்து பெற்றபின் இந்த அபிஜித் விலக்கப்பட்டு மீதி 27 நக்ஷத்திரங்களை கொண்டு ; விம்சோத்தரி ' தசாபுக்தி கணிதம் உருவானது, என்ற ஒரு கருத்து கூறப்படுகிறது.

2.  தற்போதும் இந்த அபிஜித் நக்ஷத்திரம் முஹூர்த்த வேளை குறிக்கும்போது கணக்கிடப்படுகிறது.  உத்திராடத்தின் கடைசி பகுதியும், திருவோணத்தின் தொடக்கப்பகுதியும் இணைந்ததுதான் அபிஜித் நக்ஷத்திரம் என்றும் கூறப்படு.  அபிஜித் என்பதை இந்திய வேத ஜோதிடமானது ஒரு சுபவேளையாக கூறுகிறது.  இந்த சுபவேளையை ஜோதிடவியல் சாஸ்த்திரம் ' அபிஜித ' என்று பெயரிட்டுள்ளது.  இதுவும் அதுவும் ஒன்றா என்று சிந்திப்போம்.

அபிஜித்தும் இந்திய வானவியலும்..............

அபிஜித் என்பது ஒரு நக்ஷத்திரகூட்டத்தில் இருக்கும் மிக ஒளி பொருதிய நக்ஷத்திரமாகும்..  இதை மேல்னாட்டவர் ' வேகா ' என்கிறனர்...  .  வடதுருவத்தில் கோடை காலத்தில் தலைக்கு மேல் உச்சியில் தெரியக்கூடியது.  குளிர்காலத்தில் வடதுருவத்தின் வடதிசையில் சற்று தாழ்வாக தெரியக்கூடியது.      எனவே ஜோதிடவியலுக்கும் இந்த 28 வது நக்ஷத்திரம் எனப்படும் அபிஜித்துக்கும் சம்பந்தமில்லை.   இதை நம் ஜோதிடவியல் ஏன்? 28 வது நக்ஷத்திரமாக பட்டியலில் சேர்க்கவில்லை என்பதைபற்றி இனி சிந்திப்போம்.

அபிஜித்தும் ஜோதிடவியலும்.............

இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கன நக்ஷத்திரங்கள் உள்ளன.  அந்த நக்ஷத்திரங்களிடையே நமது சூரிய மண்டலம் அமைந்துள்ளது.  சூரியமண்டலத்திலுள்ள அனைத்து கிரகங்களும் சுற்றி வரும் சுற்றுப்பாதையில் ஒரு சில நக்ஷத்திரங்கள் உள்ளன.  அவைகளே அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களாகும்..  இவையனைத்தும் இரவில் சந்திரனின் பின்புலத்தில் தெரியக்கூடியவை. எந்த கிரகமும் அபிஜித் என்று வானவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நக்ஷத்திர கூட்டத்தின் பக்கம் செல்வதேயில்லை.  அதனால் சந்திரனின் பின்புலத்தில் அபிஜித் தோன்றாமல் வடதுருவம் பக்கம் தோன்றுகிறது.  எனவே இந்திய ஜோதிடவியலானது 27 நக்ஷத்திரங்கள் பட்டியலில் இன்னொரு நக்ஷத்திரமாக அபிஜித்தை சேர்க்கவில்லை.

மேற்கண்ட கருத்துக்கு ஆதரவாக இரு புராண நிகழ்வுக்ளை சொல்லலாம்.  1.ஸ்ரீமுருகப்பெருமானை வளர்த்த காத்திகைபெண்களை கார்திகை நக்ஷத்திரமாக மாறி, வானில் நிலையாக இருக்குமாறு ஸ்ரீசிவபெருமான் அருள்புரிந்தார்.  இந்த கார்த்திகை நக்ஷத்திரம் பூமியின் ஓடு பாதையில் அமைந்ததாலும், சந்திரனின் பின்புலத்தில் தெரிவதாலும், இந்திய ஜோதிடவியல் 27 நக்ஷத்திரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டுள்ளது.  2.  இதேபோல் துருவன் என்னும் பக்தனை துருவ நக்ஷத்திரமாக மாறி வானில் நிலைத்து இருக்குமாறு திருமால் அருள் புரிந்தார்.  இந்த துருவ நக்ஷத்திரம் வடதுருவத்தில் இன்றும் உள்ளது.  ஆனால் இது 27 நக்ஷத்திரங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  இந்த துருவ நக்ஷத்திரமும் இறைவன் அருளால் தோன்றியதேயாயினும், பூமியின் ஓடு பாதையில் இல்லாததும், சந்திரனின் பின்புலத்தில் தென்படாததாதுமே காரணம்.


  அஸ்வினி முதலான 27 நக்ஷத்திரங்களில் சிலவற்றை நாம் அடையாளம் கண்டு இரவில் வானத்தில் பார்த்தாலும், சந்திரனின் பின்புலத்தில் எந்த நக்ஷத்திரம் இருக்கிறதோ, அதுவே அன்றைய தின நக்ஷத்திரமாகும்.  எனவே அன்று ஒரு குழந்தை பிறந்தால்,  ஜனன ஜாதகத்தில் அன்றைய நக்ஷத்திரம் ஜென்ம நக்ஷத்திரமாகிறது.  அபிஜித் ஜென்ம நக்ஷத்திரமாவதில்லை. இப்படி ஜாதகத்தில் இடம் பெறாத நக்ஷத்திரம் எவ்வாறு தசாபுக்தியில் பழங்காலத்தில் இருந்தது என்று கூறமுடியும்?  எனவே அபிஜித் நக்ஷத்திரங்களின் பட்டியலில்  இருந்தது என்றும், விம்சோத்தரி தசாகணித காலம் தொடங்கியபோது விலக்கப்பட்டது என்பதும் எற்புடையதல்ல.  மேலும் பூமியின் ஓடுபாதையில் இடம் பெறாததும், சந்திரனின் பின்புலத்தில் தோன்றாததுமான அபிஜித் என்ற வட துருவ நக்ஷத்திரம் எவ்வாறு உத்திராடத்திற்கும், திருவோண்த்திற்கும் இடையில் வரும்?  எனவே இதுவும் ஏற்புடையது அல்ல.  இவையெல்லாம் என் தனிப்பட்ட கருத்தாகும்.    அப்படியானால் தற்போது ஜோதிடனூல்களில் குறிப்பிடப்படும் அபிஜித் என்பது எது? என்று இனி பார்க்கலாம்.

அபிஜித் என்பது வடமொழிஸ்சொல்..  இதன் தமிழாக்கம் பார்க்கலாம்.  'அபி' என்றால் தைரியமான என்று பொருள்.  'ஜித்' என்றால் வெற்றி என்று பொருள். இரண்டையும் இணைத்தால் நிச்சயமான வெற்றி எனக்கொள்ளலாம். இன்னேரத்தில் செய்யப்படும் எல்லா சுப காரியங்களும் நிச்சயம் வெற்றியடையும்.  இதை அபிஜித் முஹூர்த்தம் என்று ஜோதிடவியல் சொல்கிறது.  முகூர்த்தனிர்ணயம் என்னும் காலவிதானம் என்னும் நூல் இதைபற்றி சொல்வதை பார்ப்போம்.........................

சூரியன் நடுப்பகலில் உச்சியில் இருக்கும்போது, [ 1.5 நாழிகை வேளை ] அபிஜித் முஹூர்த்தம்.  எல்லா தேசங்களுக்கும் இது ஏற்கத்தக்கது.  ஆகையால் அபிஜித் முகூர்த்தத்திலே சௌளம், உபனயனம் மாத்திரம் நீக்கி, மற்ற எல்லா சுப காரியங்களும் செய்யலாம்.

பொதுவாக நடுப்பகல் என்றால் 12.00 மணி என்று கொள்வது தவறாகும்.  அன்றைய தின அகசை இரண்டாக பிரித்து, வரும் நாழிகையை மணி, நிமிடங்களாக மாற்றி அன்றைய தின சூரிய உதய நேரத்தோடு கூட்ட வேண்டும்.  இந்த கூட்டுதொகை நடுப்பகலாகும்.  இதற்கு முன் உள்ள 18 நிமிடங்களும், பின் உள்ள 18 நிமிடங்களும் அபிஜித் எனும் சுபவேளையாகும்.  அபிஜித் முஹூர்த்தம் என்னும் 1.5 நாழிகை என்பது 36 நிமிடங்களாகும்.

உபனயனத்திற்கு, பூராடம், உத்திராடம், அபிஜித் ஆகியவை ஆகாது,  என்று சில நூல்கள், ஆகாத நக்ஷத்திரங்களை குறிப்பிடும்போது அதனுடன் அபிஜித்தையும் சேர்த்துவிடுகிறது.  எனவே அபிஜித் என்றால் நக்ஷத்திரம் என்று சொல்லிவிடுகிறனர்.  ஜோதிடனூல்கள் கூறும் இந்த அபிஜித்தை நடுப்பகல், உச்சிவேளை என கொள்ளவேண்டும். 

கால புருஷதத்துவப்படி, மேஷம் உதயராசி, துலாம் அஸ்தமனராசி,  இடையில் உள்ள மகரம் நடுப்பகல் ராசி.  இந்த நடுப்பகலில் உச்சிவேளை என்பது உத்திராடத்தின் கடைசி பகுதியும், திருவோணத்தின் தொடக்கப்பகுதியும் ஆகும்.  இந்த இரு நக்ஷத்திரங்களுக்கும் இடையே உள்ள காலம் 'அபிஜித்' எனப்படுகிறது.  ஆனால் இத்தனைக்கும் மேலாக ' நக்ஷத்திர சிந்தாமணி ' எனும் மிக பழைமையான நூல், அபிஜித் நக்ஷத்திர பலனை கிரக வாரியாக சொல்லியிருக்கிறது.  இது எப்படி? என்பதுதான் புரியாத புதிராகவே இருக்கிறது.