Tuesday 26 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ............. பகுதி எண் 04. ........ எது முதலில் நடக்கும்?



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ", .............  பகுதி எண் 04. ........  எது முதலில் நடக்கும்?  .......  பாரம்பரிய முறையிலான பதிவு.  ...............  கிரகங்களின் இரட்டை வேஷங்களில் இது சற்று வித்தியாசமானது.  ஒரே நேரத்தில், இரு ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, பலவிதமான பலனை தரும் நிலையில் இருக்கும் ஒரு கிரகம், எந்த ஸ்தானாதிபத்யப்படி, எந்த பலனை முதலில் கொடுக்கும் என்பதை, உதாரணத்துடன் பார்க்கும் பதிவாக இது அமைகிறது.

சந்திர சூரியர்களுக்கு, ஒரு ஸ்தானம் மட்டுமே சொந்த ஸ்தானமாக அமைந்துள்ளது.  ராகு, கேதுக்களுக்கு சொந்த ஸ்தானங்களே இல்லை.  செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோருக்கு தலா இரண்டிரண்டு ஸ்தானங்கள் சொந்தமாக அமைகிறன.  வ்வாறு அமைந்துள்ள சில ராசிக்கட்டங்களை இப்போது பார்க்க இருக்கிறோம்.  ................  மகர லக்னம்,  லக்னத்தில் சுக்கிரன்.  மகரத்திற்கு சுக்கிரன் யோகாதிபதி.  அதாவது 5, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி.  வேறு அவயோகம் தரும் ஆதிபத்யங்கள் எதுவும் சுக்கிரனுக்கு இல்லை.  விரைவில் சுக்கிரதசை நடப்புக்கு வர இருக்கிறது.  அப்போது என்ன நடக்கும்? என்பதை சுருக்கமாக பொதுவாக பார்க்கலாம்.  1.  புதிதாக தொழில் தொடங்கலாம்.  தொழில்ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  2.  மேற்கல்வி பயில தொடங்கலாம்.  வித்யாஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  3.  திருமணம் செய்துகொள்ளலாம்.  களத்திரஸ்தானத்திற்கு சுக்கிரனின் சுப பார்வை.  4.  புத்ரபாக்கியம் உண்டாகும்.  புத்ரஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  அனைத்தும் நற்பலன்களே.  சுக்கிரதிசையில் சுக்கிரபுக்தி 3 வருஷம் 4 மாதங்கள் நடப்பிலிருக்கும்.  இக்காலகட்டத்திற்குள், மேற்கண்ட பலன்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும்.  ....................  இப்போது ராசிக்கட்டதாரரின் கேள்வி என்னவென்றால்.........  எது முதலில் நடக்கும்?  அடுத்து எது நடக்கும்?  என் வாழ்க்கையை நான் எப்படி திட்டமிட்டுக்கொள்வது?  என் தலைவிதி எதை முதலில் ஒப்புக்கொள்ளும்படி அமைந்துள்ளது?  இவையெல்லாம் நல்ல யோகபலனாக இருப்பதால், எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறேன்.  அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

தொழில் தொடங்கினால், கல்வி கற்பதில் சிக்கல் எழலாம்.  கல்வி முதலில் கற்க தொடங்கினால், திருமணம் தள்ளிப்போய்விடும்.  திருமணம் செய்துகொண்டபின் குடும்ப தலைவராகி, அதன் பின் மாணவன் பொறுப்பேற்றுக்கொள்வது நல்லதல்ல.  இப்படிப்பட்ட பலவித பலன்கள் தந்து, இருஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரன், சில ஜோதிடர்களை நன்றாகவே குழப்பிவிட்டுவிடுவார்.  இக்குழப்பமும் நீங்க, நம் ஜோதிட சாஸ்த்திர ஞானிகள், தெளிவான பாதையமைத்து தந்திருக்கிறார்கள்.

இரண்டு ஸ்தானங்களை சொந்தமாக பெற்றிருக்கும் கிரகங்களுக்கு, அவைகளில் ஒரு ஸ்தானம் நிச்சயம் மூலத்திரிகோணமாக இருக்கும்.  ஆட்சி பலத்துடன், மூலத்திரிகோண பலமும் அந்த ஸ்தானம் அடைவதால், அது இன்னொரு ஸ்தானத்தை விட வலுவுள்ளதாக இருக்கும்.  எனவே இந்த ஸ்தானத்திற்குரிய காரகத்துவங்களையே, சம்பந்தப்பட்ட கிரகம் முதலில் கொடுக்கும்.  சுக்கிரனுக்கு, ரிஷபம் ஆட்சிவீடு.  துலாமோ ஆட்சி மற்றும் மூலத்திரிகோணவீடு.  எனவே சுக்கிரன் முதலில் துலாத்திற்குரிய காரகத்துவ பலனை தருவார்.  அதன்பின் ரிஷபம் என்னும் ஆட்சிவீட்டுக்குரிய பலனை தருவார்.  அதன்பின் தன் பார்வையால் தரக்கூடிய பலனை தருவார்.  இப்போது அதை வரிசைப்படுத்தலாம்.  ராசிக்கட்டதாரர் முதலில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்.  அதன்பின் மேற்கல்வி பயிலலாம்.  இவ்விரணடையும் ஒரு சேர ராசிக்கட்டதாரர் செய்ய இயலாது.  ஆகையால் கல்வி பயில மாலை நேரக்கல்லூரி அமையுமா? அல்லது அஞ்சல் வழிக்கல்வி அமையுமா? என்று ஆராய வேண்டும்.  கல்லூரி யோகத்தை தரக்கூடிய குரு கெட்டுப்போயுள்ளார்.  விரயம், திரிதியம் என்ற இரு அசுப ஆதிபத்யங்களை பெற்று, சஷ்டமத்தில் பகையாகி, வக்கிரமடைந்துள்ளார்.  மேலும் கேதுவுடன் இணைந்து, சூரியனின் பாப பார்வையும் பெற்கிறார்.  எனவே மாலை நேர கல்லூரி அமைவது கடினம்.  அஞ்சல் வழிக்கல்வி தரக்கூடிய புதன் 6 என்ற அசுபஸ்தானத்திற்கும், 9 என்ற சுபஸ்தானத்திற்கும் அதிபதியாகியுள்ளார்.  செவ்வாயின் சுபாவ அசுப பார்வை கிடைக்கிறது.  புதனின்    இவ்விரு ஸ்தானாதிபத்யங்களில் எது முதலில் முனைப்பாக செயல்படும்?  இதற்கும் மூலத்திரிகோணமே தீர்வு தரும்.  புதனுக்கு கன்னி மூலத்திரிகோணம் என்பதால், முதலில் 9 என்ற சுப ஸ்தானாதிபத்யம் செயல்படும்.  எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு த்டையில்லை.  புதன் லாபஸ்தானத்தில் சமம்.  எனவே பாக்கிய ஸ்தானத்தின் துணைகொண்டு, புதனின் சஷ்டமாதிபத்ய பலனை, தெய்வீக பரிகார வழிபாடு செய்து குறைத்துக்கொள்ள முடியும்.  எனவே அஞ்சல் வழிக்கல்வி கை கொடுக்கும்.  இந்த கல்வி 3 வருஷத்திற்குள் முடிந்துவிட வேண்டும்.  காரணம் சுக்கிரபுக்தி முடிவதற்குள் திருமணம் நடந்து, புத்ரபாக்கியமும் கிடைத்தாக வேண்டும்.  கிடைக்கும்.  இதில் சந்தேகமில்லை.  இதுவே, இறைவன் ராசிக்கட்டதாரருக்கு எழுதிய தலைவிதியாக அமைகிறது.

சுக்கிரனை போன்ற நிலையில் லக்னம் அமையும் போது மற்ற கிரகங்களும் இதே முறையில்தான் பலனை தருகிறன.  இரு சொந்த ஸ்தானங்களில் ஒன்று அசுபஸ்தானமாக அமைந்து, அது மூலத்திரிகோணமாகவும் இருந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு, அசுபபலன் முதலில் நடக்கும்.  இப்படி ஸ்தானங்களுக்கு ஏற்றவாறு வேஷங்களை மாற்றிக்கொள்ளும் கிரகங்களை பற்றி நாம் இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது.  எனவே மேலும் தொடர்வோம்.  நன்றி வணக்கம்.  .................  தொடரும்.  ............................ 
            

Wednesday 20 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ". .......... பகுதி எண். 03. .......... கிரக பார்வைகள்



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ".  ..........  பகுதி எண். 03.  ..........  கிரக பார்வைகள் .............  ஒரே கிரகம் தன்னுடைய பார்வையை சுப பார்வையாகவும், அசுப பார்வையாகவும் தருவதை பற்றிய பதிவு.  ..............  பாரம்பரிய முறை.  ............................

ஒரு ஜாதகர்..................  அவருக்கு கடகலக்னம் என்று வைத்துக்கொள்வோம்.  குரு மகரத்தில் இருக்கிறார்.  இந்த ஜாதகர் 4 ஜோதிடர்களை சந்திக்கிறார்.  முதலாமவர், " குரு சஷ்டமாதிபதி.  எனவே லக்னத்தை குரு பார்ப்பது ஆகாது.  வரும் குருதிசை கஷ்டம்தான் ", என்கிறார்.  இரண்டாமவர், " குரு பாக்கியாதிபதி.  எனவே அவர் லக்னத்தை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம் " என்கிறார்.  மூன்றாமவர், ம்.  ம் ஹூம் அதெல்லாங்க் கெடையாது.  குரு நீசம்.  பார்வைல நீசமிருக்குமில்ல.  அதோடு எல்லாம் முடிஞ்சி போச்.............  இனிமே அவ்ளோதான் " என்கிறார்.  நாலாமவரோ, "  ஐயய்யய்யே ..........  அதெல்லாம் தப்பு.  குரு சுபகிரகம்.  அவர் இருக்குற எடத்தைதான் கெடுபார்.  பார்க்கிற எடம். பவுனு, பவுனு மாதிரி." என்கிறார்.  இவற்றையெல்லாம் கேட்டு குழம்பிப்போன ஜாதகரின் பார்வை எப்படியிருக்கும்?  ஐயோ பாவம்.  இந்த ஜோதிடர்கள் சொன்னதில் யார் சொன்னது சரி? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.  அதற்கு முன் கிரக பார்வைகள் சம்பந்தமாக நமது ஜோதிட சாஸ்த்திரங்கள் சொல்லும் ஒரு சில விதிகளை கவனத்தில் கொள்வோம்.

01.  ஒரு கிரகம், தன் சொந்த ஸ்தானத்தை பார்க்குமானால், அந்த சொந்த ஸ்தானத்தை அந்த கிரகம் வலுப்படுத்தும்.  .............

02.  ஒரு கிரகம் சுபாவ சுபத்தன்மை கொண்டதாக இருந்து, ஒரு சுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த ஸ்தானத்தை அந்த கிரகம் வலுப்படுத்தும்.  அதே நேரம் ஒரு அசுப ஸ்தானத்தை பார்க்குமானால், அந்த ஸ்தானத்தை வலுவிழக்க செய்யும்.  ........... 

03.  ஒரு கிரகம் சுபாவ அசுபத்தன்மை கொண்டதாக இருந்து, ஒரு அசுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த கிரகம், அந்த ஸ்தானத்தை வலுப்படுத்தும்.  அதே நேரம் ஒரு சுபஸ்தானத்தை பார்க்குமானால், அந்த ஸ்தானத்தை வலுவிழக்க செய்யும்.

மேற்கண்ட விதிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கிரகமும், தன் பார்வையில் ஒரே நேரத்தில், சுபத்தன்மையும், அசுபத்தன்மையும் கொடுத்து இரட்டை வேஷங்களை மிக அழகாக் போடுகிறது.  ................  உதாரணத்த்ற்கு முதலில் கடக லக்ன ராசிக்கட்டத்தை எடுத்துக்கொள்வோம்.  கணித்துப்பார்க்க எளிதாக இருக்கும் பொருட்டு, ராசிக்கட்டம் இணைக்கப்பட்டுள்ளது.  .................  கடகலக்னம்.  குரு சிம்மத்தில் இருப்பு.  அவர் பார்வை தனுசில் பதிகிறது.  தனுசு குருவின் சொந்த ஸ்தானம்.  அதே நேரம் ராசிக்கட்டத்திற்கு சஷ்டமம்.  இப்போது குருவுக்கு தன் சொந்த ஸ்தானத்தை வலுப்படுத்த வேண்டிய கடமை இருப்பதால், தன் பார்வையில் சுபத்தை தர இயலாது.  எனவே அவர் அசுபபார்வை பார்த்து தன் சொந்த ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார்.  இதனால் இந்த பார்வையை பொறுத்த மட்டில், குருவின் பார்வை சஷ்டமாதிபதி பார்வையாக அமைகிறது.  இதே குருவின் பார்வை அஷ்டமத்திலும் விழுகிறது.  அது குருவுக்கு சொந்த ஸ்தானமல்ல.  எனவே அந்த ஸ்தானத்தை தன் அசுப ஆதிபத்ய பார்வையால் வலுப்படுத்த வேண்டும் என்ற கடமை குருவுக்கு இல்லை.  எனவே அஷ்டமத்தை குரு பார்க்கும் பார்வை ஒரு சுபாவசுப கிரகத்தின் சுப பார்வையாகி, அஷ்டமத்தை வலுவிழக்கசெய்யும்.  குருவின் பார்வை 10 லும் பதிவதை பார்க்கலாம்.  இந்த ஸ்தானமும் குருவின் சொந்த ஸ்தானமல்ல.  எனவே குரு தன் இயல்பான சுபாவசுப பார்வையால், அந்த ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார்.  ஆக தனுசின் மீது விழும் குருவின் பார்வை சஷ்டமாதிபதி பார்வை.  அதாவது அசுப பார்வை.  கும்பம், மேஷம் ஆகிய ஸ்தானங்கள் மீது விழும் குருவின் பார்வை சுபாவசுப பார்வை.  இதிலிருந்து குரு போடும் இரட்டை வேஷம் புரிகிறது.  .................  இனி செவ்வாயை கொண்டு அதன் இரட்டை வேஷ பார்வையை பார்க்கலாம்.

கணித்து பார்க்க எளிதாக இருக்கும் பொருட்டு விருச்சிக லக்ன ராசிக்கட்டம் இணைக்கப்பட்டுள்ளது.  செவ்வாய் மேஷத்தில் இருக்கிறார்.  அவரது பார்வை விருச்சிகத்தில் பதிகிறது.  இப்போது செவ்வாயின் பார்வை லக்னாதிபதி பார்வையாகும்.  அது விருச்சிகத்தை வலுப்படுத்தும்.  இது சுப பார்வை.  இதே நேரம் செவ்வாயின் பார்வை கடகத்திலும், துலாமிலும் விழுகிறது.  இது சுபாவ அசுபர் பார்வையாகும்.  இப்படி ஒவ்வொரு கிரகமும் தன் சொந்த ஸ்தானத்திற்கு தகுந்தாற்போல் ஒரு பார்வையும், மற்ற் ஸ்தானங்களுக்கு தகுந்தாற் போல் ஒரு பார்வையும் கொண்டுள்ளன.  இதில் அதிசயம் என்னவென்றால், எந்த கிரகமும் தனக்கிருக்கும் இரு சொந்த ஸ்தானங்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதில்லை.  அதில் ஒன்று சுபமாகவும், இன்னொன்று அசுபமாகவும் இருக்கலாம்.  ஒரே நேரத்தில் இரு ஸ்தானனகளையும் பார்த்தால், பார்வையின் தன்மையை தீர்மானிப்பதில் குழப்பமே மிஞ்சும்.   மீண்டும் சந்திப்போம்.  நன்றி வணக்கம்.  ..........................  தொடரும்.  ..................

Monday 18 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ...... பகுதி எண் 02. ........... யோகாதிபத்யமும் பாதகாதிபத்யமும்.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ", ......  பகுதி எண் 02.  ...........  யோகாதிபத்யமும் பாதகாதிபத்யமும்.  ................  சென்ற பதிவில் சனி ஒரு சுபஸ்தானத்தில் இருந்தபடி செயல்படும் விதத்தை கணித்துப்பார்த்தோம்.  ................  இனி இந்த பதிவில் ..................

ராசிக்கட்டம் எண் 1 ல் சனி ஒரு அசுபஸ்தானத்தில் தனித்திருந்து செயல்படும் விதத்தை கணித்துப் பார்ப்போம்.  சனி அஷ்டமத்தில் நட்பு.  யோகத்தை தரும் கிரகம் அசுபஸ்தானத்தில் இருந்தால், அதன் யோகாதிபத்யம் பங்கப்படும்.  பாதகாதிபதி அசுபஸ்தானங்களில் இருந்தால் செயல்பட மாட்டார்.  அந்த வகையில் சனியின் பாதகாதிபத்யமும் பங்கப்படும்.  ஆக இரு துணை ஆதிபத்யங்களும் செயலிழந்துவிடும்.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 மட்டும் சனி இருக்கும் அஷ்டமத்திற்கு தகுந்தாற்போல் அசுபபலன்களை தரும்.  9 ஆமிடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிப்பதற்கு வாய்ப்பே இல்லை.  ஆகவே வரும் துன்ப துயரங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.  செவ்வாய் குரு, சுக்கிரன் ஆகிய புக்திகளின் போது அசுப பலன் மிக அதிகமாக நடக்கும்.  புதன் நீசம் பெற்றிருப்பதால் சனியுடன் இணைந்து அசுபத்தையே தருவார்.  அஸ்தங்கதம் அடைந்திருந்தால், சூரியன் சுபஸ்தானாதிபதி என்பதால், புதாதித்ய யோகம் ஏற்பட்டு சனியின் அசுப பலன்கள் கட்டுப்படுத்தப்படும்..  சூரிய புக்தியில் ஓரளவு நற்பலன் நடக்கும்.  சந்திர புக்தியில், சந்திரனின் சுபபார்வை 9 ஆமிடத்தில் விழுவதால், சந்திரனால், தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிக்கும் நிலை ஏற்படுகிறது.  ஆகவே அப்போது மட்டும், இறைவழிபாடு செய்து சுபபலன்களை கூடுதலாக பெறமுடியும்.

ராசிகட்டம் எண் 2 , சனி அசுபஸ்தானமாகிய 6 ல் உச்சம்.  அஷ்டமாதிபதியுடன் இணைவு.  சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பார்வை.  சனி 6 ல் இருப்பதால் அதன் யோகாதிபத்யம் பங்கப்படும்.  அதுபோல், அதன் அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகளும் பாதிக்கப்படும்.  பாதகாதிபத்ய கிரகம் அசுபஸ்தானகளில் இருந்தால் பாதகாதிபத்யம் செயல்படாது.  ஆக எந்த கோணத்தில் பார்த்தாலும் சனிக்கு சுபத்தன்மையே தென்படவில்லை.  9 ஆமிடம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தெய்வீக பரிகார வழிபாடுகளும் செல்லுபடியாகாது.  சந்திரனின் சுப பார்வை மட்டுமே சற்று ஆறுதல்.  ஆகையால் சந்திரபுக்தியில் மட்டும் வழிபாடுகள் பலிக்கும்.  மொத்தத்தில் சனியால் ஏற்படும் துன்பங்களை இந்த ராசிக்கட்டதாரர் அனுபவித்தே ஆகவேண்டும்.  வேறு வழியில்லை.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகள் பலன் தரும்போது, எதிர்மறையாகவே தரும்.  இந்த ராசிக்கட்டத்தை பொறுத்தவரை சனி ரிஷபத்திற்கு யோகாதிபதியாக இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது.  செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் முறையே, களத்திரம், லாபம், லக்னம் ஆகிய சுப ஆதிபத்யங்கள் பெற்றிருந்தாலும், அந்த சுபங்களை செயல்படுத்த முடியாது.  காரணம் 6 ல் அஷ்டமாதிபதியுடன், சுபாவ அசுப பார்வை பெற்ற சனி எல்லாவற்றையும் தடுத்துவிடுவார்.  எனவே செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அசுபஸ்தானங்களான, முறையே விரயம், அஷ்டமம், சஷ்டமம் ஆகிய ஸ்தான பலன்களையே சனியுடன் இணைந்து அவைகள் தரும்.  மற்ற சுபஸ்தானாதிபத்ய கிரகங்களின் நன்மை கூட சனியால் தடை செய்யப்படும்.  இது சனிதிசை மற்றும் புக்தி நடக்கும் போது மட்டுமே.  மற்ற நேரங்களில் நிலைமை மாற்றம் பெறும்.

இனி ராசிக்கட்டம் எண் 3 ஐ பார்க்கலாம்.  இதில் யோகாதிபதியான சனி, பூர்வபுண்ணியாதிபதியாகிய புதனுடன் இணைந்துள்ளது.  புதனின் இன்னொரு ஆதிபத்யமும் சுபமே.  அசுபஸ்தானாதிபதிகளின் தொடர்பு எதுவும் இல்லை.  ஆக சனி முழுசுபத்தன்மையுடன் இருந்தாலும், இன்னொரு புறம் பாதகாதிபத்யம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  சனியின் துணை ஆதிபத்யங்களில் ஒன்றான யோகாதிபத்யம், புதன் என்னும் பூரண சுப ஆதிபத்யம் பெற்ற கிரகத்துடன் கூடியிருப்பதால், சனி தன் திசையில் ராசிக்கட்டதாரரை தன் சுபயோக பலனால், அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று எல்லையில்லா ஆனந்தம் தந்துவிடுவார்.  சனியின் இன்னொரு துணை ஆதிபத்யமான பாதகதிபத்யம், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய அசுபஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்து கெடுதல் செய்ய வேண்டும்.  ஆனால் 9 ஆமிடம் குறையற்ற முழு சுபத்துடன் விளங்குவதால், மிக மிக எளிதாக சனியின் பாதகாதிபத்யத்தின் தீமையை பெருமளவு குறைத்துக்கொள்ளலாம்.  தெய்வீக பரிகார வழிபாடுகள் செய்தால், தெய்வம் தானே விரைந்துவந்து ராசிகட்டதாரருக்கு அருள் புரிய காத்திருக்கிறது.  எனவே ராசிகட்டதாரர் சனிதிசை முழுதும் வாழ்வில் குறையின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்.  இதை ராஜயோகம் என்றும் சொல்லலாம்.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகள் கூட நன்மைகளை குறையில்லாமல் அள்ளி வழங்கும்.

கிரகங்கள் தான் பெறுகின்ற ஆதிபத்யத்தால் மட்டுமல்ல, பார்க்கின்ற பார்வையிலும், அந்த பார்வைகளை பெறுகின்ற தன்மையிலும் கூட இரட்டை வேஷம் போடுகின்றன.  இதை பற்றி அடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.  நன்றி.  வணக்கம்.  .......................... தொடரும்  .............................. 
      

Friday 15 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ........... பகுதி எண் 01 [ யோகாதிபத்யமும், பாதகாதிபத்யமும் ]



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ",  ........... பகுதி எண் 01 [ யோகாதிபத்யமும், பாதகாதிபத்யமும் ] .............  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஒரு கிரகம் சுபம் , அசுபம் ஆகிய இரண்டு வகையான ஆதிபத்யங்கள் பெற்று, ஒரே நேரத்தில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருந்து செயல்படுவது இரட்டை வேஷமாகும்.  யோகாதிபத்யம் என்ற சுப ஆதிபத்யம் பெற ஒரு கிரகம், ஒரே நேரத்தில், கேந்திராதிபத்யமும், திரிகோணாதிபத்யமும் பெற வேண்டும்.  அந்த வகையில் ரிஷப, துலாத்திற்கு சனியும், கடக, சிம்மத்திற்கு செவ்வாயும், மகர, கும்பத்திற்கு சுக்கிரனும் யோகாதிபதியாகிறார்கள்.  அதே நேரம் ரிஷபம், சிம்மம், கும்பம் ஆகியன ஸ்திர ராசிகள் என்பதால், அதன் ஒன்பதாமிட ஆதிபத்யம் பெறும் கிரகங்கள் முறையே சனி, செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதியும் ஆகிறார்கள்.  இவற்றில் கேந்திராதிபத்யம், திரிகோணாதிபத்யம் ஆகியவை அடிப்படையிலேயே கிரகங்கள் பெறுகின்ற சுபஸ்தானங்கள்.  எனவே இவை அடிப்படை ஸ்தானாதித்யங்களாகிறன.  ஆனால் யோகாதிபத்யமும், பாதகாதிபத்யமும், அவைகளுக்கு வாய்த்த துணை ஆதிபத்யங்களாகும்.  இப்படி சுபம், அசுபம் ஆகிய இருவகை ஆதிபத்யங்களையும் பெறும் இக்கிரங்கங்கள் எப்போது? சுபமாகவும், எப்போது? அசுபமாகவும் செயல்படும் என்பதே சூட்சுமமாகும்.  புரியாத வரை சூட்சுமம்.  புரிந்துவிட்டால் பகிரங்கம். ........................  புரிந்துகொள்வோம்.

அடிப்படை ஆதிபத்யங்களை இந்த கிரகங்கள் தனித்து நின்று செயல்படுத்தும்.  ஆனால் துணை ஆதிபத்யங்களை இந்த கிரகங்கள் ஒரு துணையோடுதான் செயல்படுத்தும்.  இதை சற்று விரிவாக பார்க்கலாம்.  ............  ரிஷபலக்னத்திற்கு சனி எவ்வாறு செயல்பட்டு பலன் தருவார்?  சனி கெடாமல், அதாவது அசுபஸ்தானங்களை அடையாமலும், அசுபஸ்தானாதிபத்யம் பெற்ற சூரியனிடம் அஸ்தங்தம் அடையாமலும் இருக்கும்போது, 9, 10 ஆமிடத்து அதிபதியாக செயல்படுவார்.  ரிஷபலக்னத்திற்கு  சனி, ,ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் மீனம் ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போது 9, 10 ஆமிடத்து அதிபதியாக செயல்படுவார்.  9, 10 ஆமிடத்ததிபதி என்பது அடிப்படை ஆதிபத்யங்கள்.  எனவே ஜனன ஜாதகத்தில் இங்கெல்லாம் சனி தனித்திருக்கும்போது சுபபலன் தரக்கூடியவராகிறார்.  சனி திசை, சனி புக்தியின் போதும் இந்த ராசிகள் சனியிடமிருந்து சுபபலன்களையே பெற்றுத் தருகின்றன.

ஒரு கிரகம் தன் துணை ஆதிபத்யத்தை செயல்படுத்த முனையும் போது, துணைக்கு இன்னொரு ஆதிபத்யமுள்ள கிரகத்துடன் இணைந்துகொள்ளும்.  ரிஷபலக்னத்திற்கு சனி தன் துணை ஆதிபத்யமான பாதகாதிபத்யத்தை, செயல்படுத்த இன்னொரு அசுப ஆதிபத்ய கிரகத்துடன் இணையும்.  பாதகாதிபத்யம் அசுப ஆதிபத்யம் என்பதால், துணைக்கு வருவது அசுப ஆதிபத்யம் கொண்ட கிரகமாகவே இருக்கும்.  அதன்படி ரிஷபலக்னத்திற்கு சனிக்கிரகம் திசை, அல்லது புக்தி நடத்தும்போது, சனிக்கு துணையாக இணையும் திசானாதன், அல்லது புக்தினாதன் 6, 8, 12 ஆகிய ஸ்தானாதிபத்யம் கொண்டவராக அமைந்தால், சனி பாதகாதிபதியாக செயல்பட்டு சொல்லொணாத துன்பத்தையும் துயரத்தையும் தந்துவிடுவார்.  இதே பாதகாதிபத்யத்தை சனி தனித்திருந்து செயல்படுத்தாது.  ஜனன ஜாதகத்தில் ரிஷபலக்னத்திற்கு சனி, 6, 8, 12 ஆகிய ஸ்தானாதிபதிகளுடன் இணைந்திருந்தால், சனி பாதகாதிபதியாகவும், கேந்திர திரிகோணாதிபதிகளுடன் இணைந்திருந்தால், யோகாதிபதியாகவும் செயல்படுவார்;  சனி 6, 8, 12 ஆகிய இடங்களில் தனியாகவோ, அல்லது வேறு கிரகத்துடன் இணைந்தோ இருந்தாலும், அதன் பாதகாதிபத்யம், யோகாதிபத்யம் எனப்படும் இரு துணை ஆதிபத்யங்களும் கெட்டுப்போகும்.  அடிப்படை ஆதிபத்யங்களான, 9 மற்றும் 10 ஆகிய ஆதிபதியங்கள் சனி இருக்கும் அசுப ஸ்தானத்திற்கு தக்கவாறு எதிர்மறையாக செயல்படும்.   இதே விதிமுறைபடி சிம்மத்திற்கு செவ்வாயும், கும்பத்திற்கு சுக்கிரனும் செயல்படுவர்.  இனி ரிஷபலக்னத்திற்கு, சனி இரட்டை வேஷம் போடும், ஒரு உதாரண ராசிக்கட்டத்தை பார்க்கலாம்.  ...........

சனி கெடாமல் தனித்திருக்கிறார்.  9, 10 ஆம் ஸ்தானாதிபதியாகி, லாபத்தில் இருப்பதால், சனி நற்பலனை அள்ளி வழங்குவார்.  சனிதிசை, சனிபுக்தியிலும் இதேபலன் நடக்கும்.  சனி யோகாதிபத்யம் என்னும் துணை ஆதிபத்யம் பெற்று, தனக்கு துணையாக வரும், சுபஸ்தான புக்தினாதர்கள் மூலமும் நற்பலனை அள்ளி வழங்குவார்.  சனிதிசையில், புதன், சந்திரன், சூரியன் ஆகியோருடைய புக்திகள் யோகமுடையதாக இருக்கும்.  அதுபோல் சனி பாதகாதிபத்யம் என்னும் துணை ஆதிபத்யம் பெற்று, தனக்கு துணையாக வரும் அசுபஸ்தானாதிபதிகள் மூலம் கெடுதல் செய்ய தவறமாட்டார்.  சனிதிசையில் சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகியோருடைய புக்திகளில் அசுப பலன்கள் அதிகம் விளையும்.  இந்த அசுபங்களை, சனி மற்றும் புக்திநாதர்களுக்குரிய வழிபாட்டு தெய்வங்களின் பரிகார வழிபாடுகளை செய்துகொண்டு எளிதில் நிவாரணம் அடையலாம்.  சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகியோருக்கு, சுபஸ்தானாதிபத்யமும் இருக்கிறதே! என்ற கேள்வி எழும்.  சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகியோரின் இரட்டை வேஷதன்மை பற்றி பின்னர் வரும் கட்டுரைகளில் விரிவாக பார்க்கலாம்.   மீண்டும் சந்திப்போம்.  நன்றி வணக்கம்.  ...............  தொடரும்.  ............... .