Monday 12 October 2015

சாபங்களும் வரமாகலாம். ........ ஜோதிட சூட்சும செய்தி.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  தோஷங்களும் யோகமாகலாம். 
சாபங்களும் வரமாகலாம்.  ........ ஜோதிட சூட்சும செய்தி................  பாரம்பரிய முறை.............................  என் குருனாதர் எனக்கு உபதேசித்தது என் நினைவுக்கு வந்தது.  அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சாபங்களும் வரமாகலாம்......................................  ராமாயணத்தில், தரசரதன் வழக்கப்படி காட்டுக்கு வேட்டையாட சென்றான்.  வேட்டையில் தவறுதலாக ஒருவண் மீது அம்பை எய்துவிட்டான்.  அவனுடைய பழுத்த முதிய பெற்றோர்கள், தன் மகன் பிரிவால் வாடி வருந்தி உயிர் நீத்தனர்.  உயிர் விடும் தறுவாயில், " நாங்கள் எப்படி மகனை பிரிந்து தவித்து உயிர் விடுகிறோமோ அதுபோல், நீயும் உயிர் பிரியும் தறுவாயில் மகனை பிரிந்து தவிப்பாய் ", என்று சாபமிட்டுவிட்டனர்.   ஒரு புறம் இந்த சாபத்திற்கு வருந்தினாலும், இன்னொரு புறம் மகிழ்ச்சியடைந்தான் தசரதன்.  பல ஆண்டுகளாக புத்ரபாக்கியம் இன்றி வருந்திவந்த தசரதன், இந்த சாபத்தின்படி, உயிர் பிரியும் நேரத்தில் பிள்ளைகளை பிரிய வேண்டும் என்றால், பிள்ளைகள் பிறந்தால்தானே அவர்களை பிரிய முடியும், எனவே நிச்சயமாக பிள்ளைகள் பிறக்கும், என்றெண்ணி, மகிழ்ச்சியடைந்தான்.  முதிய பெற்றோர்கள் இட்ட சாபம் ஒருவகையில் தசரதனுக்கு, வரமாகி புத்ரபாக்கியத்தை தந்துவிட்டது.  உடனே அயோத்தி திரும்பிய தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து, ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னரை பெற்றான்.  இப்படி சாபமே வரமாக மாறும் நிகழ்வு தசரதன் வாழ்க்கையில் மட்டுமல்ல.  நம் வாழ்க்கையிலும் அபூர்வமாக நடப்பதுண்டு.  இனி அது எப்படி என்று ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.

தோஷங்களும் யோகமாகலாம்.....................................  என் குருனாதருக்கு சேவகம் செய்து வாழ்ந்துவந்த காலத்தில் அவரை சந்திக்க ஒரு ஜாதகர் வந்தார்.  அவரிடத்தில் " உங்கள் ஜாதகப்படி உங்கள் குழந்தை உங்களுக்கு விரோதியாகவே வாழும், " என்று அவரை ஆறுதல் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், குருனாதர் வருத்தமாக சொன்னார்.  அதற்கு வருத்தப்பட வேண்டிய ஜாதகரோ, அளவிலா ஆனந்தம் அடைந்து, என் குருனாதர் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.  அவருக்கு பல ஆண்டுகளாக புத்ரபாக்கியம் இல்லாமல் தவித்து வந்திருக்கிறார்.  விரோதியாக இருந்தாலும், குருனாதர் வாக்குப்படி பேர் சொல்ல பிள்ளை பிறக்கும் என்பது அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது.  ஏற்கனவே அவர் சந்தித்த பல ஜோதிடர்கள், அவருக்கு புத்ரபாக்கியமே கிடைக்காது என்று கூறியிருக்கிறனர்..  மனைவியின் பொருந்தாத ஜாதகத்தை, அதற்கு காரணமாக காட்டியிருக்கிறனர்.  அத்துடன் மனவிக்கு புத்ரபாக்கியமும் இல்லை என்றும் விவரித்துள்ளனர்.  அவையெல்லாம் சரியே.  அவருக்கு அமையும் மனைவி பொருந்தாதவளாகஃ இருப்பால் என்பதை ஜாதகம் நன்றாகவே காட்டிக்கொடுக்கிறது.  ஜாதகர் பொருத்தம் பார்க்காமல் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.  அதற்குண்டான கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இருப்பதை காணலாம்.  இனி ஜாதகத்தை விரிவாக ஆராய்வோம்.

களத்திரத்தில், ராகுவுக்கு குருபார்வை இருந்தாலும், நீசமாக இருப்பதால், இவருடைய மனைவிக்கு, கருச்சிதைவு இருமுறை ஏற்பட்டிருக்கிறது.  சுபகரமான உச்சசந்திரன், உச்சகுரு பார்வை, சுக்கிரனுடன் இணைந்ததால் காதல் வசப்பட்டிருக்கிறார்.  களத்திரஸ்தானாதிபதி, செவ்வாய் லாபத்தில் அமர்ந்து, " இருதார தோஷத்தை ", உருவாக்குகிறார்.  அதாவது ஒரு மனைவி இருக்கும் போதே இன்னொரு மனைவியுடன் வாழும் நிலை.  இந்த தோஷமே அவருக்கு புத்ரபாக்கிய யோகத்திற்கு வழி வகுத்துவிட்டது.  தோஷம் யோகமானது......  [ அதாவது சாபம் வரமானது ]  முதல் மனைவி மூலம், குழந்தை இல்லாத நிலையில் இவர் இரண்டாம் மனைவி மூலம் குழந்தை பெறவேண்டும் என்பது ஜாதக அமைப்பு.  புத்ரஸ்தானாதிபதி புதன் 6 ஆமிடத்தில் செவ்வாய் சாரத்தில் இருக்கிறார்.  செவ்வாய் களத்திர ஸ்தானாதிபதியாகி, லாபத்தில் இருக்கிறார்.  புதன் விரோதியாக வாழ இருக்கும் குழந்தையை செவ்வாய் மூலம் தரும்.  செவ்வாய் குழந்தையை, தன் இருதார தோஷந்த்தின் மூலம், இன்னொரு மனைவியை தந்து, அவள் மூலம் குழந்தையை தரும்.  காரணம் செவ்வாய் புதன் சாரம்.  இந்த கணக்கீடுகளை கவனித்த என் குருனாதர் ஜாதகருக்கு பிள்ளைவரத்தை தன் அருள்வாக்கால் தந்துவிட்டார்.  குரு இளைய மனைவி ஸ்தானத்தை பார்வையிடுவதால், வரும் பெண் நல்லவளாக, எல்லோருக்கும் பிடித்த வண்ணம் இருப்பாள் என்பதால், ஜாதகரை என் குருனாதர் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள சொல்லி அறிவுருத்தினார்.

இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்படுதல் வேண்டும்.  முதல் திருமணம் காதல் திருமணம் என்பதால், பொருத்தம் பார்க்கப்படவில்லை.  ஒருவேளை பொருத்தம் பார்க்கப்பட்டிருந்தால், இருதார தோஷ நிவர்த்தி நடந்திருக்கும்.  இதனால், வாழ்க்கையில் அவருக்கு இரண்டாம் தாரமே இல்லாமல் போயிருக்கும்.  இந்த தோஷம் நிலுவையில் இருந்த காரணத்தால், அதுவே புத்ரபாக்கியத்திற்கு வழி வகுத்திருக்கிறது.  புத்ரபாக்கியம் தடையின்றி கிடைக்கும் பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொண்டால், ஜாதகருக்கு நிச்சயம் குழந்தை உண்டு என்பதே என் குருனாதரின் கணிப்பு. 

இதிலிருந்து நான் கற்ற பாடம்....................... ஒரு ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும் அதுகூட அபூர்வமாக சில நேரங்களில் வாழ்க்கையில் அளவிலா மகிழ்ச்சியை தரும் யோகத்திற்கு காரணமாக அமைந்துவிடலாம்.  எனவே தோஷம் என்றவுடன் உடனே பரிகாரத்தில் இறங்கிவிடாமல், இன்னும் சற்று கவனமாக ஆராய்தலே நன்று.  நன்றி.  வணக்கம்.                  

Sunday 4 October 2015

அந்தணன் இருக்குமிடம் பாழா?............................பகுதி 3



அமரர் பி.எஸ்.ஐயர் ஜோதிட ஆராய்ச்சி மையமும், உலக தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையும் இணைந்து நடத்திய 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பட்ட விழா மலரில் இடம் பெற்ற எளியேனின் கட்டுரை இது. ................... இறுதி பகுதி.

எனவே 2 ஆமிடத்திற்குரிய குடும்ப நிதி நிர்வாக உபகாரகனான குரு இருக்குமிடத்தை முதல் ஸ்தானமாக கொண்டு அதன் 2 ஆமிட நிலையை கொண்டு பலன் சொல்ல வேண்டும்.  .............சரி....... லக்னம் வலுவிழந்தால், சந்திராலக்னம் கொண்டு பலன் சொல்லலாம்.  சந்திரால்க்னம் வலுவிழந்தால், உபகாரகனை கொண்டு பலன் சொல்லலாம்.  உபகாரகனும் வலுவிழந்திருந்தால் என் செய்வது? என்ற கேள்வி எழலாம்.  உபகாரகன் நீசம், அஸ்தங்கம் போன்ற நிலைகளில் சிக்கி இருந்தால் என்ன செய்வது?................. அபூர்வமாக ஒரு சில ஜாதகங்களுக்கே இந்த நிலை ஏற்படும்.  பெரும்பாலும் உபகாரகர்களை கொண்டு பலன் சொல்லும் அளவுக்கு வலுவிழந்த ஜாதகங்கள் வருவதில்லை.  உங்கள் அனுபவத்திலும் இதை சோதித்து பார்க்கலாம்.  இப்படி உபகாரகர்கனை கொண்டு பலன் சொல்லும் ஜாதகங்களுக்கு, 2, 5, 9, 10, 11 ஆகிய ஸ்தானம் சம்பந்தப்பட்ட பலன் சொல்ல குரு பெருதும் உதவுகிறார்.  எனவே அந்தணன் எனப்படும் குரு இருக்குமிடம் பாழ் என்று உடனடியாக முடிவுக்கு வந்துவிடமுடியாது. 

இந்த கட்டுரைக்கு சம்பந்த்மில்லாத ஒரு சந்தேகம் இந்த கட்டுரையை படிக்கும் போது சிலருக்கு எழலாம்.  அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று சிந்திக்கும் இந்த கட்டுரையில், சந்திரனையும் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கிறது.  லக்னம் வலுவிழந்தால் பலன் சொல்ல சந்திராலக்னம் கை கொடுக்கும்.  சந்திராலக்னம் வலுவிழந்தால் உபகாரகன் கை கொடுப்பார்.  சந்திராலக்னம் வலுவிழக்கிறது என்றால், சந்திரனும் வலுவிழந்தார் என்று ஆகிறது.  சந்திராலக்னத்திற்கு அடுத்தபடியாக உபகாரகனை பார்க்கும் போது அது சந்திரனாக இருந்தால் என்ன செய்வது?  உதாரணத்திற்கு குடும்பம், வாக்கு, நிதி, நேத்திரம் என்ற வரிசையில், குடும்பத்திற்கு உபகாரகன் சந்திரனாவார்.  லக்னப்படியும், சந்திராலக்னப்படியும் பலன் சொல்லமுடியாத சூழ்னிலையில், குடும்ப உபகாரகனாக வலுவிழந்த சந்திரன் இருக்குமிடத்தை எவ்வாறு முதல் ஸ்தானமாக கொள்ள முடியும்?  இப்படிப்பட்ட சூழ்னிலையில் குடும்ப உபகாரகனாக புதனை கொள்ள வேண்டும் என்று பிருஹத் பராச்சாரியம் சொல்கிறது.  அதுபோல், 4 ஆமிடத்தை கொண்டு தாயார் நிலை அறிய முற்படும்போது, லக்னமும், சந்திராலக்னமும் வலுவிழந்திருந்தால், உபகாரகனாக சந்திரன் இருக்குமிடத்தை முதலாக கொள்ள முடியாது.  சந்திரன் வலுவிழந்து போவதால் சந்திராலக்னம், முதலாம் ஸ்தானம் என்ற அந்தஸ்து பெறும் வாய்ப்பை இழக்கிறது.  இன்னிலையில் உபகாரகன் இருக்குமிடம் முதல் ஸ்தானம்கா கொள்ளவேண்டுமென்றால் சுக்கிரனை, தாயாருக்கு உபகாரகனாக கொள்ள வேண்டும்.  பெரும்பாலும் சந்சிராலக்னத்திற்கு வலுவற்ற நிலை ஜாதகங்களுக்கு ஏற்படுவதில்லை.  ஏதேனும் ஒரு வகையில் அது வலுப்பெற்று விடும்.  அதை நுட்பமாக கவனிக்க வேண்டியது ஜோதிடர்களாகிய நமது பொறுப்பு.  இனி கட்டுரையின் கடைசி பகுதிக்கு செல்வோம்.

குரு நீசம், அஸ்தங்கம் பெறுவதாலும், மற்ற கிரகங்களைப்போல் அசுபஸ்தானாதிபத்தியம் பெறும்போதும், தானிருக்கும் இடத்தை பாழ் செய்தாக வேண்டும்.  இது குருவின் குறையல்ல.  " காரகோ பாவநாஸ்தி ", என்ற அடிப்படையில் 2, 9, 10, ஆகிய ஸ்தானங்களை பகுதியாக மட்டுமே பாழ் செய்வார்.  5, 11 ஆகிய இரு ஸ்தானங்களை மட்டுமே முழுமையாக பாழ் செய்வார்.  குரு புத்திரகாரகன் என்பதால் 5 ஆமிடத்தின் ஒரு காரகத்துவமாகிய புத்ர காரகத்துவத்தை மட்டுமே பாழ் செய்வார் என்று சொல்கிறார்கள்.  குருவின் பொதுவான முக்கியமான காரகத்துவம் புத்ரபாக்கியம் என்று கூறப்படுகிறது.  ஆனால் 5 ஆமிடத்திற்கு குருவே முழுக்காரகன்.  5 ஆமிடத்திற்கு உபகாரகர்கள் இல்லை.  எனவே குரு 5 ல் அமர்ந்தால் அதை முழுமையாக பாழ் படுத்துவார். 

இந்த விஷயத்தில் நாம் மகளிர் ஜாதகத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.  மகளிருக்கு புத்ரபாக்கிய ஸ்தானம் 9 ஆமிடமாக அமைகிறது.  எனவே குரு 9 ல் அமர்ந்தால் மகளிருக்கு புத்ரபாக்கிய காரகத்துவத்தை பாழ் செய்துவிடுவார்.  அப்பிரதஷிண முறைபடி இந்த 9 ஆம் ஸ்தானம் மகளிருக்கு புத்ரபாக்கிய ஸ்தானமாக அமைகிறது.  அதாவது இதை பூர்வபுண்ணிய ஸ்தானமாக கொள்ள வேண்டும்.  பாக்கிய ஸ்தானமாக 5 ஆமிடத்தை கொள்ள வேண்டும்.  மகளிர் ஜாதகத்தை பொறுத்தவரை இம்மாறுதல் உண்டு.  இம்முறைப்படி திரிகோணங்களின் காரகத்துவங்கள் மட்டுமே மாறுபடுகின்றன.  5 ஐ 9 ஆகவும், 9 ஐ 5 ஆகவும் கொள்ள வேண்டும்.  இதை அனுபவத்திலும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.  எனவே மகளிரை பொறுத்தவரை 5 ஆமிடம் பாக்கிய ஸ்தானமாகிறது.  பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரும்போது, அதன் உபகாரகத்துவமான தர்மம் சம்பந்தப்பட்ட காரகத்துவங்களை மட்டும் குரு பாழ் படுத்துவார்.  தந்தைக்குரிய அதன் காரகத்துவங்கள், வழக்கம்போல், பகலில் பிறந்தோர்க்கு சூரியனை பொறுத்தும், இரவில் பிறந்தோர்க்கு சனியை பொறுத்தும் மாறுபடும்.  இவ்விதமாக குருவின் பொதுக்காரகத்துவ, உபகாரகத்துவ தன்மைகளை பொறுத்தே அவர் இருக்குமிடத்தில், அவரால் ஏற்படுத்தப்படும் பாழ் தன்மையை கணிக்கவேண்டும்.  எனவே அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ் என்று முடிவெடுப்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவை.  நாம் கவனத்துடன் செயல்பட்டு, வரும் ஜாதகர்களுக்கு, முடிந்த வரை சரியான பலன் உரைத்து, நற்பெயர் பெற இறைவன் அருள் புரிவானாக.  நன்றி   வணக்கம்.

*******  முக்கிய குறிப்பு  ******  மகளிர் ஜாதக சிறப்பு விதியை என் குருநாதர் உபதேசப்படி எழுதியிருக்கிறேன்.  இதில் உடன்பாடு இல்லாதவரகள், தயவுசெய்து இந்த பகுதியை தவிர்த்துக்கொள்ளுங்கள்.     

அந்தணன் இருக்குமிடம் பாழா?............................பகுதி 2



உலக தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையின் 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பட்ட விழா மலரில் இடம் பெற்ற எளியேனின் கட்டுரை இது.  ................... பகுதி. 2.................... 

மேலும் ஜோதிட பலன் கணிப்பதில், குருவுக்கு சில முக்கியமான கடமைகள் இருப்பதாக நமது சாஸ்த்திரம் சொல்கிறது.  அதையும் சற்று விரிவாகவே கவனிக்க வேண்டியிருக்கிறது.  ஜோதிட பலன் சொல்ல தொடங்கும்போது, லக்னத்தை முதல்ஸ்தானமாக கொள்கிறோம்.  இந்த லக்னத்தை, குரு, அல்லது, புதன், அல்லது லக்னாதிபதி ஆகியோரில் யாராவது ஒருவர் பார்வையிடவேண்டும்.  பார்வையிடும் கிரகம் நீசம், அஸ்தங்கம் அடைந்திருக்கூடாது  அல்லது மேற்குறிப்பிட்டவர்களில் யாராவது ஒருவர் லக்னத்தில் இருக்க வேண்டும்.  அப்போதுதான் லக்னம் வலுவுடையதாகும்.  இவைகளில் ஒரு தகுதி கூட லக்னத்திற்கு கிடைக்கவில்லை என்றால், குறைந்த பட்சம், லக்னாதிபதி, எங்கிருந்தாலும் நீசம் அஸ்தங்கம் ஆகியவைகளை அடையக்கூடாது.  அப்போதுதான் லக்னம் வலுவுடையதாகும்.  லக்னம் வலுவாக இல்லையென்றால், லக்னத்தை முதலாக வைத்து சொல்லப்படும் பலன்கள் அனைத்தும் வலுவில்லாமல், பலனளிக்காதவைகளாக அமையும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் ஜோதிட பலனை லக்னத்திற்கு அடுத்தபடியாக லக்ன அந்தஸ்து பெறும் சந்திராலக்னம் எனப்படும் ராசியை முதலாவதாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அதன் அடிப்படையில் ஸ்தானங்களை எண்ணி பலன் சொல்ல வேண்டும்.  ராசியை ஜோதிடபலன் சொல்ல முதலாவது ஸ்தானமாக தேர்வு செய்யுமுன், இது சந்திராலக்னம் எனப்படுவதால் சந்திரன் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சந்திரன் நீசம் அடையக்கூடாது.  நீசபங்கம் பெற்றிருக்கலாம்.  அல்லது தனது சுபத்தன்மையால் வலிமை பெற்றிருக்க வேண்டும்.  அதுபோல், தனது பாபத்தன்மையால் வலிமை இழந்திருக்கக்கூடாது.  [ உதாரணத்திற்கு அமாவாசை திதி. ]  அவ்வாறு இருப்பின் ஸ்தான பலத்தால் வலிமை பெற்றிருக்க வேண்டும்.  லக்னாதிபதிக்கு அஸ்தங்க தோஷம் இருக்கிறாதா? என்று பார்ப்பது போல் சந்திரனுக்கு பார்க்க வேண்டியதில்லை.  சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாது.  எவ்வகையிலும் வலிமை பெறாத சந்திரனாக இருப்பின், சந்திராலக்னம் எனப்படும் ராசி வலுவற்றதாகிவிடும்.  எனவே ராசியை முதலாக வைத்து சொல்லப்படும் பலனும் வலிமையற்று பலனளிக்காமல் போகும்.  பெரும்பாலும் இம்மாதிரியான வலிமையற்ற நிலை சந்திரனுக்கு ஏற்படுவதில்லை.  ஏதாவது ஒரு வகையில் சந்திரன் வலிமை பெற்றதாகவே ஜாதகத்தில் அமைந்திருக்கும்.  ஒரு வேளை சந்திராலக்னமும் வலிமையிழந்த நிலையில் ஜோதிட பலன் சொல்ல வேண்டுமானால் நமது சாஸ்த்திரம் என்ன வழி சொல்கிறது? 

லக்னமும், சந்திராலக்னமும் வலுவிழந்த நிலையில் உள்ள ஜாதகங்களுக்கு, காரகர்கள் இருக்கும் ஸ்தானத்தை முதலாக வைத்து, ஜாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.  இம்மாதிரியாக ஜோதிட பலன் சொல்லும் முறைக்கு ஆதாரமும் உள்ளது.  திரு. கீரனூர் நடராசனார் அவர்கள் " ஜாதக அலங்காரம் ", என்னும் ஜோதிட சாஸ்த்திர நூலை எழுதியிருக்கிறார்.  இந்த நூல் வடமொழியிலுள்ள பல மூலநூல்களின் தமிழ்வழி கருத்துத்தொகுப்பாகும்.  இதற்கு ஸ்ரீதெய்வசிகாமணி ஜோதிடர் எனும், சமஸ்கிருத பண்டிதர் விளக்கமும், விருத்தியுரையையும் எழுதியிருக்கிறார்.  இவரது விளக்கம், சமஸ்கிருத நூல்களின் மூலவரிகளோடு, மணிப்பிரவாள நடைகொண்ட விளக்கமாக அமைந்திருக்கும்.  இதனால் இவரது விளக்கம் சிலருக்கு புரிவதில்லை.  இவரது விளக்கமும், விருத்தியுரையும் அமைந்த ஜாதக அலங்கார நூலின்  435 ஆவது பக்கம் முதல் 438 ஆவது பக்கம் வரை, உள்ள விளக்கங்களை ஆதாரமாக சமர்ப்பிக்கின்றேன்.  துவாதச பாவக பலன், ......... முதல் பாவகப்படலம்......பாவ காரகர்கள் பகுதியில், மேன்மைமிகு, ஸ்ரீ பராசரரால் இயற்றப்பட்ட, பிருகத் பராச்சாரியத்திலிருந்து, மூல சமஸ்கிருத ஸ்லோகங்களை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார் ஸ்ரீ தெய்வசிகாமணி ஜோதிடர்.  லக்னமும், சந்திராலக்னமும் வலுவிழந்த நிலையில் பாவகாரகர்களை கொண்டு பலன் சொல்லும் முறையை இன்னும் சற்று விரிவாக சிந்திக்கலாம்.

உதாரணத்திற்கு, ஒரு ஜாதகருக்கு, அவரது குடும்ப நிதிப்புழக்கம், மற்றும் அதன் நிர்வாக நிலை குறித்து பலன் சொல்ல வேண்டியிருக்கிறது என்று கொள்வோம்.  லக்னம் வலுவிழந்துள்ளது.  எனவே, லக்னத்திற்கு 2 ஆமிடமும் வலுவிழந்துவிட்டது என்று பொருள்.  அடுத்து சந்திராலக்னத்தை எடுத்துக்கொள்வோம்.  முன் குறிப்பிட்ட விதிகளின் படி சந்திராலக்னமும் வலுவிழந்திருந்தால், ராசிக்கு 2 ஆமிடமும் வலுவிழந்து விட்டது என்று பொருள்.   (  இதன் தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் சிந்திப்போம்.  நன்றி.  வணக்கம்.  )  .......................தொடரும்.............................       

அந்தணன் இருக்குமிடம் பாழா?............................பகுதி 1



வணக்கம்.  கடந்த 27.9.2015 அன்று மதுரையில் நடந்த ? உலக தமிழ் ஜோதிடர்கள் மஹா சபை " யின் 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பெற்ற விழா மலரில் இடம் பெற்றது.  ..........................

ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ்!...................  எந்த அளவுக்கு உண்மை? ", என்ற தலைப்பில் உள்ள இந்த கட்டுரை பாரம்பரிய முறையை அனுசரித்து எழுதப்பட்டுள்ளது.  [ பகுதி எண். 1 ]  மொத்தம் ராசிக்கட்டங்கள் 12.  இவைகளில் குரு எந்த ராசியில் இருந்தாலும் அந்த ராசி பாழ்பட்டுப்போகும் என்று வழக்கமாக சொல்லப்படுகிறது.  சில தொடக்க நிலை ஜோதிடர்கள், இந்த வழக்கு மொழியை அப்படியே பின்பற்றி பலனும் சொல்லிவருகிறனர்.  இந்த வழக்குமொழியை ஆராயாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா?

எந்தவொரு கிரகமும், ஸ்தான பலத்தால், பகை, நீசம், என்னும் கீழ்னிலைகளை அடையும்போது அது, தான் இருக்கும் ஸ்தானத்தை பாழ்படுத்திவிடும்.  அதுபோல், 6. 8. 12, ஆகிய துர்ஸ்தானகளுக்கு அதிபதியாகும் போது, அவை தான் இருக்கும் ஸ்தானத்தை பாழ்படுத்தும்.  இதில் குரு மட்டும் விதிவிலக்கல்ல.  எனவே இந்த் இரு காரணங்களை வைத்து மேற்கண்ட வழக்குமொழி சொல்லப்படவில்லை என்று புரிகிறது. 

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வகையான காரகத்துவங்கள் உண்டு.  ஒன்றுக்கு இருப்பதைப்போல் மற்றொன்றுக்கு இருப்பதில்லை.  எனவே கிரகங்கள் தான் பெற்ற காரகத்துவங்களால், தான் இருக்கும் இடத்தை பாழ்படுத்தலாம்.  இதை பொதுவாக " காரகோ பாவ நாஸ்தி, " என்பதுண்டு.  இதன் அடிப்படையில், 2. 5. 9. 10. 11 ஆகிய ஸ்தானங்களுக்கு காரகனாக குரு இருப்பதால்,  மேற்கண்ட ஸ்தானங்களில் குரு இருக்கும்போது, அந்த ஸ்தானத்தை குரு பாழ்படுத்தும்.  சில ஸ்தானங்களை குரு முற்றிலுமாக பாழ்படுத்தாமல், பகுதியாக பாழ்படுத்துகிறது.  இந்த பகுதி பாழ்படுத்தலால், அந்த ஸ்தானம் சில நன்மைகளை தக்க வைத்துகொண்டு விடுகிறது.  2. 9. 10 ஆகிய ஸ்தானங்கள் குருவால் ஒரு பகுதி மட்டுமே பாழ்படுத்த முடியும்.  அது எவ்வாறு?......................

2 ஆமிடத்தை பொதுவாக குடும்பஸ்தானம் என்கிறோம்.  அதற்கு காரகனாக குருவை குறிப்பிடுகிறோம்.  இது பொதுவான நியதி.  இந்த 2 ஆமிடம் என்னும் பாவத்தை 4 உபபாவங்களாக பிரிக்கலாம்.  1. நேத்திரம்.  2. வாக்கு.  3. குடும்பம்.  4.  நிதி.  இந்த 4 உபபாவங்களுக்கும் 4 உபகாரகர்கள் உண்டு.  பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் நேத்திர உபகாரகன்.  இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நேத்திர உபகாரகன்.  வாக்குக்கு புதன் உபகாரகன்.  குடும்பத்துக்கு சந்திரன் உபகாரகன்.  நிதிக்கு குரு உபகாரகன்.  எனவே இந்த 2 ஆம் ஸ்தானத்தில் குரு அமரும்போது, " காரகோ பாவ நாஸ்தி ", என்ற அடிப்படையில், நிதி என்ற காரகத்துவத்தை மட்டுமே பாழ்படுத்த முடியும்.  மற்ற நேத்திரம், குடும்பம், வாக்கு ஆகியவற்றை குரு எதுவும் செய்யாது.  அவைகள் எல்லாம், அதனதன் காரகர்களின் நிலை பொறுத்து மாறுபடும். 

அதுபோல் 9 ஆமிடத்தை பாக்கிய ஸ்தானம் என்கிறோம்.  இதை இரு உபபாவமாக பிரிக்கலாம்.  1. பிதுர்ஸ்தானம்.  2. தர்மஸ்தானம்.  பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனும், இரவில் பிறந்தவர்களுக்கு சனியும் பிதுர்ஸ்தான உபகாரகர்களாவர்.  தர்மஸ்தானத்திற்கு குரு உபகாரகர்.  பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரும்போது, பிதுருக்கான எந்த காரகத்தையும் குரு பாழ்படுத்தமாட்டார்.  தர்மங்களை மட்டும் பாழ்படுத்திவிடுவார்.  இங்கு தர்மம் என்று குறிப்பிடப்படுவது, அடுத்தவர்களுக்கு, பொருளாதாரத்தால் உதவுவது மட்டுமல்ல.  ஒவ்வொரு இந்துவும் கடைபிடிக்க வேண்டிய இந்துமத சம்பிரதாய கடமைகளாகும்.  இதுவே இந்துதர்மம் எனப்படுகிறது.

 10 ஆமிடத்திற்கு சூரியன், குரு, புதன், சனி ஆகியோர் காரகர்கள்.  இந்த நால்வர் காரகத்துவங்களை பொறுத்து ஜீவனம் அமைகிறது.  எனவே இங்கு குரு அமர்ந்தால், குருவுக்குரிய ஜீவன காரகத்துவம் மட்டும் பாதிக்கப்படும் எனலாம்;  மொத்தத்தில் கூட்டி கழித்து பார்க்கும்போது, குரு இருக்குமிடம் பாழ் என்று மேலோட்டமாக சொல்லிவிட முடியாது.  அந்தந்த ஸ்தானங்களின் மற்ற காரகர்களையும் கவனித்து கணித்து சொல்ல வேண்டியதாகிறது.