Tuesday 27 September 2016

். " திதிசூன்ய பலன் ", : சென்ற பதிவின் தொடர்ச்சி. : ..............



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " திதிசூன்ய பலன் ", : ................  சென்ற பதிவின் தொடர்ச்சி.  : ..............  பாரம்பரிய முறை.  திதிசூன்யம் சம்பந்தமாக மொத்தம் 3 பட்டியல்கள் உள்ளன.  1 ஆவது பட்டியல் பற்றிய முழுவிபரங்களை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.  இனி இந்த பதிவில் 2 ஆவது பட்டியலை இப்போது பார்க்கலாம்.  இந்த பட்டியலில், திதி மற்றும் சூன்யநக்ஷத்திரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.  1 ஆவது பட்டியலில் திதி, சூன்யராசி, ராசிக்குரிய கிரகம் ஆகியன கொடுக்கப்பட்டிருந்தன.  சூன்யராசியிலேயே நக்ஷத்திரங்கள் அடக்கம்.  அப்படியிருக்கும் போது மீண்டும் சூன்ய நக்ஷத்திரம் என்று ஏன்? கொடுக்கப்பட வேண்டும் என்று சற்று யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது.  பிரதமை திதியும் உத்திராடம் நக்ஷத்திரமும் சேர்ந்த நாள் சுபகாரியத்திற்கு உதவாது என்றும் சிலர் இதன் பொருளாக கொள்கிறனர்.  எந்த சுபகாரியத்திற்கும் பிரதமை திதி உதவாது என்று திதியே ஒதுக்கப்பட்டிருக்கும் போது, மீண்டும் இந்த மாதிரி ஒரு விதி தேவையா? என்று எண்ண தோன்றும்.  இது நியாயமானதே.  பிரதமையன்று உத்திராடம் தவிர மற்ற நக்ஷத்திரம் இணைந்தால் சுபகாரியம் செய்யலாம் என்றும் மறைமுகமாக இந்த விதி உணர்த்துவது போலவும் தோன்றும்.  திதிசூன்ய ராசிக்குரியவர்கள், தன் காரகத்துவத்தை இழப்பார்கள், என்பது போல, திதிசூன்யனக்ஷத்திரத்துக்குரியவர்கள் தங்கள் காரகத்துவங்களை இழப்பார்களா? என்று சிலருக்கு எண்ணம் உருவாகலாம்.  மேற்கண்ட சிந்தனைகளையெல்லாம் சற்றே மாற்றியமைத்துக்கொண்டால் போதும், மிக சரியான பலனை நாம் தெரிந்துகொண்டு விடலாம்.

 பிரதமை திதியன்று பிறந்தவர்களுக்கு சுபகாரியங்கள் செய்ய உத்திராடம் நக்ஷத்திரம் ஆகாது என்பதே சரியான பொருளாகும்.  பிரதமை திதியில் உத்திராடம் சூன்யமடைவதால், உத்திராடத்திற்குரிய காரகத்துவங்களும் சூன்யமடையும்.    உத்திராட நக்ஷத்திரத்திற்கென்று சாஸ்த்திரங்களில் பலன் சொல்லப்பட்டுள்ளது.  அவைகள் பிரதமை நாளன்று, பிரதமையில் பிறந்தவர்களுக்கு நடவாமல் போகும்.  இப்படியும் பொருள் கொண்டு பலன் சொல்லலாம்.  பொதுவாக திதிசூன்ய நக்ஷத்திர நாளன்று சுபகாரியங்களை தவிர்ப்பது உத்தமம்.  இந்த 2 ஆவது பட்டியல் பற்றி எந்த ஜோதிட பலன் சொல்லும் சாஸ்த்திரமும் எதையும் சொல்லவில்லை.  சுபமுஹூர்த்தம் குறிக்க வழிகாட்டியாக இருக்கும் நூல்களில் மட்டுமே இதை பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இந்த பட்டியலுக்கான பலனை இந்த நூல்களில் மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது.  இதனால்தான் ஜோதிடர்கள் தத்தம் ஞானத்தால், தாங்களறிந்த பலனை சொல்லி வருகிறார்கள்.

இனி 3 ஆவது பட்டியல் பற்றி பார்க்கலாம்.  இந்த பட்டியலுக்கு மாதசூன்யதோஷம் என்று " முஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் ", என்னும் நூல் குறிப்பிடுகிறது.  இதுவும் முஹூர்த்தனாள் குறிக்க உதவுமே தவிர, ஜாதக ஜோதிட பலன் சொல்ல உதவாது.  இந்த பட்டியலில், மாதம், திதி, நக்ஷத்திரம், ராசி ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளது.  அதாவது சித்திரை / அஷ்டமி, ஏகாதசி / அஸ்வினி, ரோகிணி / கும்பம் என்று உள்ளது.  இதற்கு விளக்கமாக, சித்திரை மாதத்துக்கு சொல்லப்பட்டுள்ள, திதி, நக்ஷத்திரம், சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்று கொடுக்கப்[பட்டுள்ளது.  பட்டியலில் ராசியை பற்றி குறிப்பிட்டிருந்தாலும், அது ஏன்? எதற்கு? என்ற ஒரு குறிப்பு கூட இல்லை.   இதிலிருந்து நாமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ; ............., மேற்கண்ட திதியன்று பிறந்தவர்கள், சித்திரை மாதத்தில், அஸ்வினி, ரோகிணி நக்ஷத்திரத்தன்று சுபகாரியங்கள் செய்யக்கூடாது.  செய்தால் கும்பராசிக்குரிய சனியின் காரகத்துவங்கள் செயலிழந்து அதன் மூலம் நமக்கு இழப்பை தரும் என்பதாம்.  இதுவரை, திதிசூன்ய பதிவுகளுக்கு, சொல்ல்ப்பட்ட பலன் அனைத்தும், என் குருனாதரால் எனக்கு உபதேசிக்கப்பட்டு, என் ஜோதிட வாழ்க்கையில் அனுபவித்தறிந்த உண்மைகள்.  இதை என் குருனாதருக்காக நான் நம்பி செய்லபடுத்துகிறேன்.  ஆனால் நீங்கள் யோசித்து, உண்மையறிந்து பின் செயலபடுத்துங்கள்

பஞ்சாங்கங்களில் முஹூர்த்த நாட்கள் குறிக்க விதிமுறைகள் தரப்பட்டுள்ளன.  அவைகள் எல்லோருக்கும் பொதுவானதாகும்.  குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு, துல்லியமாக நாள் குறிக்க மேற்கண்ட திதிசூன்ய பட்டியல்கள் உதவுகிறன.  மேற்கண்ட, தவிர்க்க வேண்டிய நாட்களில் அறியாமல் பிழை செய்தால் என்ன நேரும்? என்பதை நமக்கு நம் முன்னோர்கள் உபதேசித்திருக்கிறார்கள்.  அவைகளை அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு நாம் அனைவரும் நலமாய் வாழவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.  பஞ்சாங்கத்தில் உள்ள ஜோதிடவிதிகளில் இந்த சிறப்புத்தன்மை இல்லை.  எனவே ஒரு சுபகாரியத்திற்காக சுபனாள் குறித்து தரும் நாம் அனைவரும், மேற்கண்ட 3 பட்டியல்களையும் பயன்படுத்தி, ஜாதகர்களுக்கு துல்லியமாக நாள் குறித்துதந்து அவர்கள் நல்வாழ்வு வாழ உதவுவோமாக.  அத்துடன் செய்யம் செயல்களுக்கான விளைவுகளையும் முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கை தரஃ வேண்டும் : ..................  " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு ", :  நன்றி  வணக்கம்.  .          

Friday 23 September 2016

" திதி சூன்ய பலன் ", விளக்க பதிவு.



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " திதி சூன்ய பலன் ", விளக்க பதிவு.  : ..........  பாரம்பரிய முறை.  திதிசூன்யம் சம்பந்தமாக மூன்றுவிதமான பட்டியல்கள் சாஸ்த்திரத்தில் உள்ளன.  1.]  திதி / சூன்யராசி / சூன்யராசியதிபதி.  2.] திதி / சூன்ய நக்ஷத்திரம்.  3.]  சூன்யமாதம் / திதி / சூன்யனக்ஷத்திரம் / சூன்யராசி.  ஆகியவை அந்த மூவகை பட்டியல்களாகும்.  இந்த பட்டியல்களும், இதன் பயனபாடுகள் பற்றியும் " சர்வமுஹூர்த்த நிர்ணயம் என்னும் காலவிதானம் ", மற்றும் ", காலப்பிரகாசிகை ", ஆகிய,   மூலனூல்களில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  இவையிரண்டும் சுபமுஹூர்த்தங்கள் குறிக்க வழிகாட்டும் ஜோதிட நூல்களாகும்.  ஜோதிட பலன் கூற வழிகாட்டும் மிக பழைமையான சில மூலனூல்களில் [ சுந்தரசேகரம் ] முதலாவது பட்டியல் தரப்பட்டுள்ளது.  பலதீபிகை, புலிப்பாணி 300, பிருஹத்ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, ஜாதக அலங்காரம் போன்ற ஜோதிட பலன் சொல்ல வழிகாட்டும் முன்னோடியான நூல்களில் திதிசூன்யம் பற்றிய குறிப்புகள் இல்லை.  எனவே ஜோதிட பலன் சொல்ல திதிசூன்யத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்பது என் சொந்த கருத்து.  மேலும் இந்த பதிவில் எழுதப்பட்டுள திதிசூன்ய பலன் சம்பந்தப்பட்ட விபரங்கள் யாவும் என் சொந்த அனுபவத்தில் பெற்றதாகும்.  இதற்கு ஆதாரம் உள்ளாதா" எனக்கேட்டால் என்னால் தர இயலாது.  எனவே இந்த பதிவை படிக்கும் நண்பர்கள், இவைகள் சரியா? தவறா? என்று தீர ஆலோசித்து, பின் நடைமுறைபடுத்தி பார்த்து, அதன்பின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனது முந்தைய பதிவில் சொன்னதை சற்று சுருக்கமாக நினைவு கூர்வோம்.  திதிசூன்ய கணிப்புகள் எல்லாமே சூரிய சந்திரர்களின் நகர்வுகளை அடிப்படையாக கொண்டு கணிக்கப்பட்டவை.  இந்த க்ணிப்புகளுக்கும் லக்னத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  எனவே திதிசூயமானது, லக்னத்தையோ, லக்னத்தை வைத்து கணக்கிடப்படும் ஸ்தானங்களையோ, அதன் காரகத்துவங்களையோ, ஸ்தான அதிபதியாக இருக்கும் கிரகங்களின் ஸ்தானாதிபத்திய காரகத்துவங்களையோ சிறிதள்வும் பாதிக்காது.  திதிசூன்யம் பெறும் ராசிகளின் காரக்த்துவங்களையும், அந்த ராசிக்குரிய அதிபதியாக இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்களையும் மட்டுமே பாதிக்கும்.  இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.  திதிசூன்ய முதலாவது பட்டியலில், [ பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது ] துவாதசி திதியன்று, துலாமும், மகரமும் திதிசூன்யமடையும் என உள்ளது.  சுக்கிரனும், சனியும் முறையே சூன்யராசியதிபதிகளாவர்.  இந்த அதிபதிகள் சுபாவ பாபர் ராசியில் இருந்தால் திதிசூன்யம் இல்லாமல் போகும்.  சந்திரன் மற்றும் புதன் ஆகியோர் சுபாவ பாபர்களாக இருக்கும்போது மட்டுமே கடகம், மிதுனம், கன்னி ஆகியவை பாபர் ராகிகளாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  துவாதசி திதியன்று சனி தன் சுயகாரகத்துவத்தை இழந்துவிடும் என்று இதன் மூலம் தீர்மானித்துக்கொள்ளலாம்.  துவாதசியன்று பிறந்தவருடைய ஜனன ஜாதகத்தில் சனி தன் சுயகாரகத்துவத்தை இழந்த நிலையில் இருக்கும்.  சனியின் காரகத்துவங்களில் ஒன்று கடனை உருவாக்குவது.  துவாதசி ஜாதகருக்கு சனியால் கடன் உருவாகாது என்பதே இதன் பலன்.  ஒரு ஜாதகத்தில் ரிஷபம், துலாம், தனுசு, மீனம் தவிர மற்ற எட்டு ராசிகள் பெரும்பாலும் பாபர் ராசியாக அமைய வாய்ப்புள்ளது.  இதில் ஏதாவது ஒரு ராசியில் திதிசூன்யராசியதிபதி அமர வாய்ப்புகளும் அதிகம்.  எனவே பெரும்பாலான ஜாதகங்களில் திதிசூன்யம் அமையாது.  ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.  எனவே ஜோதிட பலன் சொல்ல வழிகாட்டும் பெரும்பாலான மூலனூல்களில் திதிசூன்யம் பற்றி எழுதப்படவில்லை.  எனவே பெரும்பான்மையை கருத்தில் கொண்டு திதிசூன்யத்துக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை என்பது என் கருத்து.  யோசித்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

இந்த திதிசூன்யத்தை கொண்டு இன்னொரு வகையான பலனும் சொல்லலாம்.  துவாதசியன்று பிறந்த ஜாதகருக்கு, ஜனன ஜாதகத்தில் சனி சுயகாரகத்துவத்தை இழப்பதுபோல், நடைமுறையில் துவாதசி நடக்கும்போதும் சனி சுய காரகத்துவத்தை இழந்துவிடும்.  எனவே துவாதசியன்று பிறந்த ஜாதகர், நடைமுறையில் துவாதசியன்று, சனி சம்பந்தமான ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியடையும்.  உதாரணத்திற்கு, இரும்பு வியாபாரம் செய்து வரும் ஒருவர், துவாதசியன்று, முதலீடு செய்து புதிய இரும்பு பொருட்களை கொள்முதல் செய்தால், அந்த பொருட்கள் அவருக்கு பெரும் நஷடத்தை தந்துவிடும்.  இது கோசரபலன் போன்ற ஒரு நடைமுறை பலன்.  இது போன்ற பலனை எல்லா திதிசூன்ய ஜாதகங்களுக்கும் கூறலாம்.    இதையும் சோதித்து பாருங்கள்.  வெற்றிகரமாக இருக்கும்.  பின் ஜோதிட பலன் கூறுவதில் நடைமுறைபடுத்துங்கள்.  மேலும் உள்ள இருவ்கை திதிசூன்ய பட்டியல்களை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.  நன்றி.  வணக்கம்.        
         

" திதி சூன்யம் ", பற்றிய பதிவு இது.



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " திதி சூன்யம் ", பற்றிய பதிவு இது.  பாரம்பரிய முறை.  நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது, அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக இருப்பது போலவும், அதன்பின் நாள்தோறும் சந்திரன் சூரியனை விட்டு விலகி வருவது போலவும், சூரியனுக்கு நேர் எதிரே விலகி வந்த நாள் பௌர்ணமியாகவும், மீண்டும், பௌர்ணமி முதல், சந்திரன் நாளுக்கு நாள் சூரியனை நோக்கி நெருங்கி வருவது போலவும், இருவரும் நெருங்கி இணையும் போது அமாவாசை எனவும் ஒரு தோற்றமளிக்கிறது.  இந்த விலகல் மற்றும் நெருக்கத்தை, ராசிகட்டத்திலும் நம் முன்னோர்கள் அமைத்து, அதை வரைந்து காட்டியிருக்கிறார்கள்.  கோசரப்படி சந்திரன் ராசிக்கட்டத்தில் ஒவ்வொரு கட்டமாக சூரியனை விட்டு விலகி வந்து, பின் மீண்டும் நெருங்கி வந்து ஒன்று சேரும்.  இப்படி ஏற்படும் விலகல், நெருக்கங்களால் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே உருவாகும் இடைவெளியை "திதி" என்னும் அளவால் அளந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு பெயரை சூட்டியுமிருக்கிறார்கள்.

ஒரு குழந்தைக்காக ஜெனன ஜாதகம் எழுதும்போது, திதி பற்றிய விரிவான தகவல்களை தினசுத்தி பகுதியில் எழுதுவதுண்டு.  ஒரு குழந்தை பிறந்தபோது நடப்பில் இருந்த ஒரு திதியால், சில ராசிகள் சூன்யம் அடைவதாக ஜோதிட சாஸ்த்திரங்களில் சொல்லப்பட்டுள்ளன.  சூன்யம் என்றால் வெறுமை என்றும், ஒன்றுமே இல்லாதது என்றும் பொருள்.  இதை திதிசூன்யம் என்று ஜோதிடர்கள் குறிப்பிடுகிறார்கள்.  சூன்யமடையும் ராசியை சூன்யராசி என்றும், அந்த ராசிக்குடைய கிரகத்தை சூன்யகிரகம் என்றும், குறிப்பிடுகிறார்கள்.  எனவே திதிசூன்யத்தோடு தொடர்புடையவை ராசியும், அந்த ராசிக்குரிய கிரகமும் ஆகும்.  திதிசூன்ய பலன் பார்க்கும்போது, சூன்யராசி எதுவென்றும், அதன் அதிபதியாகிய கிரகம் எத்வென்று மட்டுமே பார்த்து, அதற்குரிய பலன் அறியவேண்டும்.  சில ஜோதிடர்கள், சூன்யராசி லக்னத்திற்கு எத்தனையாவது ஸ்தானம் என்றும், ஸ்தானாதிபதி யாரென்று பார்த்தும், சூன்யராசியில் இருக்கும் கிரகத்தின் ஸ்தானாதிபத்தியத்தை வைத்தும் பலன் சொல்லி குழப்பிவிடுகிறார்கள்.  அதாவது திதிசூன்யராசியில் லக்னாதிபதி இருந்தால், லக்னாதிபதி செயலற்று போவார் என்பதே அவர்களது வாக்குமூலம்.  விரிவாக சொன்னால், திதிசூன்யராசியில் இருக்கும் கிரகங்களின் ஆதிபத்தியங்கள் செயலிழக்கிறன.    அதுபோல் திதிசூன்யராசிக்குரிய கிரகம், இருக்கும் ஸ்தானத்தின் செயல்பாடுகளும் தடைபட்டுப்போகும்.  அதாவது பூர்வபுண்ணியஸ்தானத்தில் திதிசூன்யராசிக்குரிய கிரகம் இருந்தால் புத்ர பாக்கியம் கெட்டுப்போகும் என்று பலன் சொல்வதுண்டு.  இது தவறான அணுகுமுறை.

திதிசூன்யத்தை பற்றி எடுத்து சொல்லும் சாஸ்த்திரங்கள் குறைவு.  மேலும் திதிசூன்ய பலனுக்கும் முக்கியத்துவம் குறைவு.  திதிசூன்யம் கணிக்க சந்திரனின் நகர்வு பிரதானமாகிறது.  லக்னத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.  குறிப்பிட்ட திதியில் சூன்யம் அடைவதாக ராசிகள் குறிப்பிடப்படுகிறன.  லக்ன அடிப்படையிலான ஸ்தானங்களல்ல.  சூன்யகிரகங்களாக தேர்வுசெய்யப்படுபவை, ராசிகளுக்குரிய அதிபதிகள்.  ஸ்தானத்திற்குரிய அதிபதிகளல்ல.  திதிசூன்ய விதிவிலக்குக்கு ராசிகளே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.  மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகளில், சூன்யகிரகம் இருந்தால், திதிசூன்யம் செயலற்று போகும், என்பது விதி.  எனவே எந்தவகையிலும், திதிசூன்யத்திற்கும் லக்னத்திற்கும், அதன் ஸ்தானங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போகிறது.  எனவே தித்சூன்ய பலனோடு லக்னத்தையும், அதன் ஸ்தானங்களையும் தொடர்பு படுத்த வேண்டியதில்லை என்பது உண்மையாகும்.  மேலும் திதிசூன்ய பலன் சொல்வது எப்படி? என்றும் சாஸ்த்திரத்தில் எழுதியுள்ளார்கள்.  சூன்யராசியானது தனக்குரிய காரகத்துவங்களை இழக்கும்.  சூன்ய ராசிக்குரிய கிரகம் தனக்குரிய காரகத்துவகளை இழந்துவிடுவார்.  உதாரணத்திற்கு பஞ்சமாதிபதி சுக்கிரன் திதிசூன்யகிரகம் என்று கொள்வோம்.  சுக்கிரன் தனது காரகத்துவகளான, அழகு, இளமை, செல்வம், காமம், காதல் ஆகியனவற்றை தராது.  ஆனால் பஞ்சமஸ்தானாதிபதி என்ற முறையில் புத்ரபாக்கியம், தேவதாவழிபாடு, அதிர்ஷ்டங்கள், வித்தை ஆகியனவற்றை தடையின்றி தந்துவிடுவார்.  துலாம் என்னும் பஞ்சமஸ்தானம் திதிசூன்யராசி எனக்கொள்வோம்.  துலாம் ராசி என்னும் முறையில் தனது காரகத்துவங்களான,  வர்த்தகம், கடைத்தெரு, ஏற்றுமதி இறக்குமதி, ஆகியனவற்றை தராது.  ஆனால் பஞ்சமஸ்தானம் என்னும் முறையில் புத்ரபாக்கியம், பூர்வபுண்ணியம், பிதுர்பக்தி, உயர்கல்வி ஆகியனவற்றை தடையின்றி தரும்.  இந்த வித்தியாசங்களை நன்றாக புரிந்துகொண்டு திதிசூன்யபலன் அறிந்து சொல்லி வெற்றியடைவோமாக.  நன்றி வணக்கம்.