Friday 6 February 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்....பகுதி....7



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்களை பற்றிய பதிவு இது.  பகுதி 07.  இந்த பதிவில் ரத்தினம் எந்த விரலில் அணிய வேண்டும்? எந்த உலோகத்தில் இணைக்கப்பட வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம்.

மாணிக்கம், புஷ்பராகம், பவளம் மற்றும் இவைகளின் வகைகள் அனைத்தும் தங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்.  வைரம், நீலம், மரகதம், வைடூரியம், கோமேதகம் மற்றும் இவைகளின் வகைகள் வெள்ளி, பிளாட்டினம், வெள்ளைத்தங்கம் ஆகியவற்றோடு இணைக்கப்பட வேண்டும்.  ரத்தினக்கற்களை வைத்து அணிகலன்கள் தயாரிக்கும் போது, கற்கள் உடலில் படும்படி, அணிகலனில் சிறிது துளை வைத்து தயாரிக்க வேண்டும்.  அப்போதுதான் உடலில் படக்கூடிய ரத்தினகற்கள், கிரகங்களின் சக்தியை ஈர்த்து நம் உடலுக்கு தரும்.  மோதிரமாக விரல்களில் அணியும்போது வலக்கையில் அணியுங்கள்.  இடதுகை வேண்டாம்.  ரத்தின அணிகலன்களை தொடர்ந்து விட்டுவிடாமல் அணிய வேண்டும்.  எக்காரணத்தை கொண்டும் அடிக்கடி கழற்றி வைப்பது நல்லதல்ல.  ஒரு ரத்தினத்தின் சக்தி நம் உடலுக்கு கிடைக்க நாட்களாகலாம்.  கழற்றினால் அதன் தொடர்பு உடனடியாக நம்மிடம் இருந்து விடுபட்டுவிடும். 

ஜோதிட சாஸ்த்திரத்தில் உடலுறுப்புகளுக்கரிய கிரகங்கள் அடையாளம் சொல்லப்பட்டுள்ளது.  அதுபோல் நம் உடலின் உறுப்பாகிய விரல்களுக்கும் கிரகங்களுக்கும் தொடர்பு உண்டு.  கிரகங்களுக்குரிய விரல்களை தேர்வு செய்து, ரத்தினகற்களை அணியும்போது, அதன் கிரகங்களுக்குரிய விரல்களையும் தேர்வு செய்து அணிந்தால் சிறந்த பயனைதரும்.  குருவுக்குரியது சுட்டுவிரல்.  எனவே புஷ்பராகத்தை சுட்டுவிரலில் அணீய வேண்டும்.  குருவுக்குரிய நட்பு கிரகங்களின் கற்களையும் இந்த விரலில் அணியலாம்.  சனிக்குரியது நடுவிரல்.  இந்த விரலில் நீலம் அணிய வேண்டும்.  சனியின் நட்புகிரக கற்களையும் இதே விரலில் அணீயலாம்.  மோதிரவிரல் சூரியனுக்குரியது.  மாணிக்கத்தை இந்த விரலில் அணியவேண்டும்.  சூரியனின் நட்புகிரக கற்களையும் இந்த விரலில் அணியலாம்.  சுண்டுவிரல் புதனுக்குரியது.  மரகதத்தையும், புதனின் நட்புகிரக கற்களையும் இந்த விரலில் அணீயலாம்.

இனி ரத்தினங்களை முதன்முதலாக எந்த நாளில் அணிவது? என்று பார்க்கலாம்.  சந்திரன் சுபராக இருக்கும் நாட்களை தேர்வு செய்ய வேண்டும்.  பொதுவாக வளர்பிறை நல்லது என்பாருண்டு.  வளர்பிறை நாட்கள் அனைத்திலும் சந்திரன் சுபராக இருப்பதில்லை.  அது போல் தேய்பிறை நாட்கள் அனைத்திலும் பாபராக இருப்பதில்லை.  நமது ஜோதிட சாஸ்த்திரம் சந்திரனின் சுபனாட்களை வரையறுத்துள்ளது.  வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி வரை சந்திரன் சுபராவார்.  மேலும் இயற்கை சுபர்கள் பார்வை பெறும் நாட்களில் சந்திரன் சுபராவார்.  இதில் அவரவர்களுடைய சந்திராஷ்டம நாட்களை மட்டும் தவிர்த்து விடுங்கள்.  இப்படி சந்திரன் சுபராக இருக்கும் நாட்களில் ரத்தினக்க்ல்லுக்குரிய கிரக நாளை தேர்வு செய்ய வேண்டும்.  அந்த நாளில் அதே கிரகத்துக்குரிய ஹோரை நேரத்தில் ரத்தினத்தை முதன்முதலாக அணிய வேண்டும்.  இதில் புதன்கிழமையை தேர்வு செய்வதில் சற்று கவனம் தேவை.  அன்றைய தினம் புதன் பாபராக இருக்ககூடாது.  ராகு, கேதுவுக்குரிய ரத்தினங்களை அணிய வேண்டுமென்றால், ராகு, கேதுக்குரிய நட்பு கிரக நாளை தேர்வு செய்து,. அதன் ஹோரை நேரத்தில் அணியவேண்டும்.  இயையெல்;லம் உங்களுக்கு குழப்பத்தை தந்தால்  பொதுவாக ஒரு ஜோதிடரை அணுகி, உங்கள் ஜாதகப்படி, உங்களுக்கான நாளை தேர்வு செய்துகொள்வது இன்னும் சிறப்பு.

இந்த தொடர்பதிவின் முதல் பகுதியில், பஞ்சபூதங்களுக்கும், நவரத்தினங்களுக்கும் தொடர்பு உண்டு, என்றும் அதற்கான விளக்கமும் தரப்பட்டது.  இந்த தொடர்பு ஜோதிடரீதியாக ஓரளவும், ஆயுர்வேத வைத்தியரீதியாக பெருமளவும் உள்ளது..  நம் உடலில் உள்ள பஞ்சபூதங்கள், அதன் இயல்பான அளவிலிருந்து மாற்றம் அடையும் போது, நோய்கள் உண்டாகின்றன.  எனவே அவைகளை குணமாக்க, ரத்தினங்களின் பஸ்பங்களை வைத்தியர்கள் தருகிறனர்.  இவற்றைபற்றி விரிவாக ஆயுர்வேத சாஸ்த்திர நூல்களில் பார்க்கலாம்.  இந்த வைத்தியமுறையில் நோய்கள் விரைவாக குணமாக, ஜோதிடப்படி ரத்தினங்களையும் அணீய வைக்கிறனர்.  இப்படி ரத்தினங்களை அணிய வைக்கும் முயற்சி மிக குறைவே.  ஜாதகப்படி நோய்ஸ்தானம் 6. 8 12 ஆக அமைகின்றன.  இதை கையாள்வது பெரும் சிக்கலை உருவாக்கூடும் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.  ஆயுர்வேத மருத்துவ ஜோதிடம் அறிந்தவர்கள், ஜாதகத்தில் பஞ்சபூத தத்துவத்துக்கு முதலிடம் தந்து நுட்பமாக  கையாள்கிறனர்.  இம்மாதிரியான ஜோதிட முறை அவர்களுக்கே அதிகம் தேவைப்படும்.  அதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒரு சிறிய முன்னோட்டம் மட்டும் பார்த்திருக்கிறோம்.   நன்றி.  [ [ [ நிறைவு  ] ] ]

 

Wednesday 4 February 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும் ...பகுதி...6



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்கள் பற்றிய பதிவு இது.  பகுதி. 6.  உதாரண ஜாதகமாக முன்னாள் பிரதமர். திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்கள் ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.  சாதகமான பலன் தராத செவ்வாய் திசையில், செவ்வாயின் ரத்தினக்கல்லான பவளம் அணிந்து, இந்தியாவுக்கு அவர் பிரதமரானார்.  அதன் கணிப்பு எப்படி? என்று ஆராய இருக்கிறோம். 

திரு. ராவ் அவர்கள் இந்தியப்பிரதமரான நாள்.  21.07.1991.  அப்போது அவருக்கு செவ்வாய் திசை, சுயபுக்தி நடப்பிலிருந்தது.  செவ்வாய், 3. 8 ஆகிய துர்ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, தசமத்தில் பகை மற்றும் அஸ்தமனம்..  அவரது தொழில் அரசியல்.  மேற்கண்ட சூழ்னிலையில் அவர் அரசியலில் நிச்சயமாக பிரகாசிக்க முடியாது.  இந்த சாதகமற்ற நிலையை, பவளம் அணிந்து சாதகமாக்கிகொண்டார்.  அது எப்படியென்று பிரதிகூலசக்தி முறைபடி கணித்து பார்க்கலாம்.  விதிப்படி, 3 ஆம் ஸ்தானாதிபதி, கேந்திரமாகிய தசமத்தில், விரயாதிபதியாகிய சூரியனுடன் இணைந்து விபரீத ராஜ யோகம் தருகிறார். செவ்வாய் அஷ்டமாதிபதி என்பதால் இந்த யோகம் கிடைத்தது. [ இந்த விபரீத ராஜயோகம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள, மஹாகவி காளிதாசர் இயற்றிய ஜோதிட சாஸ்த்திரமாகிய, உத்திரகாலாம்ருதத்தில், 4 ஆவது காண்டம், 22 வது ஸ்லோகம் பாருங்கள். மேலும் சூரியனும், செவ்வாயும் தசமத்தில் திக்பலம் பெறுகிறார்கள்.  சூரியனும், செவ்வாயும் நட்பு.  எனவே சூரியன் இணைவு நல்லதே.  செவ்வாயின் அஸ்தமனம், பகை மட்டுமே பின்னடைவாக இருந்தது.  செவ்வாய் 3 ஆம் ஸ்தானாதிபதி என்பதால் அவருக்குரிய பவளம் அணிந்தததால், இந்த பின்னடைவுகள், சாதகமாயின.  இப்படி செவ்வாய் அஷ்டமாதிபதியாக இருந்தாலும், அவரது பவளம் சிறப்பாக செயல்பட்டது.  செவ்வாய் 3 ஆம் ஸ்தானாதிபதியாக இருந்து, தசமம் தவிர வேறு இடத்தில் இருந்திருந்தாலோ, அல்லது சூரியன் மட்டும் இடம் மாறியிருந்தாலோ,  திரு ராவ் அவர்களின் வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.  எனவே பிரதிகூலசக்திமுறையை கையாளும்போது மிகமிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.  இனி நவரத்தினங்கள் சம்பந்தமாக இன்னும் சில முக்கியமான விபரங்களை பார்க்கலாம். 

01.  அனுகூல சக்திமுறை ஆபத்தில்லாதது.  பாதுகாப்பானது.
02.  பிரதிகூல சக்தி முறை ஆபத்தானது. கணிப்பதில் சிக்கலை விளைவிக்கக் கூடியது.  எனவே இம்முறையை, தவிர்த்து விடுவது நல்லது என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. 
3.  தேர்வு செய்யப்படும் நவரத்தினங்கள் குறையில்லாதவைகளாக இருக்க வேண்டும்.  அதில் ஏதேனும் குறை இருந்தாலோ, போலியாக இருந்தாலோ, அவை பயனற்றுப்போகும்.  சில நேரங்களில் எதிர்விளைவுகளையும் உருவாக்கிவிடும். 
04.  ஜோதிடர் தேர்வு செய்து தரும் ரத்தினத்தை அணியுமுன், ஏற்கனவே ஏதேனும் ரத்தினங்கள் அணிந்திருந்தால் அவைகளை பற்றி ஜோதிடரிடம் சொல்லி விடுவது நல்லது.  அவ்வாறில்லாமல், ஏற்கனவே அணியும் ரத்தினங்களோடு, புதியவைகளையும் அணிந்தால், ஒன்றுக்கொன்று முரண்பட்டு எதிர்பார்க்கும் நற்பலனை அவைகள் தாரமல் போகும். 
05.  குறையில்லாத ரத்தினங்களை வாங்கினால் மட்டும் போதாது.  அவைகளை பராமரிப்பதிலும் குறை இருக்கக்கூடாது.  பெண்கள் அந்த மூன்று நாட்கள் மட்டும் அணீயக்கூடாது.  அணியாத நேரத்தில் பூஜையறையில் பத்திரப்படுத்தி வைப்பது சிறந்தது. 
06  முதன் முறையாக அணியும்முன் மேற்கொள்ள வேண்டிய கடமைகள்.  சுத்தமான நீரில் அபிஷேகம் செய்ய வேண்டும்.  கங்கை நீர் கிடைத்தால் இன்னும் நல்லது.  அதன்பின் பாலபிஷேகம் செய்ய வேண்டும்.  [  பாக்கெட்பால், குளிர் சாதன பெட்டியில் இருக்கும் பால் தவிர புதிய பசும்பால் மட்டுமே உகந்தது..  பின் அதை சம்பந்தப்பட்ட தெய்வ சன்னதியில் வைத்து வழிபட வேண்டும்.  திருக்கோவில் அர்ச்சனை, மற்றும் ரத்தினத்திற்குரிய கிரக வழிபாடு நல்லது.  அதன் பின்பு மிக சரியான விரலில் அதை அணிய வேண்டும்.  தினசரி ஒரு முறை சம்பந்தப்பட்ட நவக்கிரக மந்திரத்தை சொல்வது நல்லது.   [ [ [ தொடரும். ] ] ]

 

Sunday 1 February 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.....பகுதி...5



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்கள் பற்றிய பதிவு இது.  பகுதி 5..  திருமால் வஜ்ராயுதம் பற்றிய திட்டம் வகுத்து தந்தது, சிம்மராசிக்கு மூன்றாம் ராசியாகிய துலாத்திலிருந்தாகும்.  மூன்றாம் ஸ்தானத்தின் காரகத்துவங்களில் ஒன்று செயல் திட்டம் வகுப்பதாகும்..  அத்துடன் வீரத்தையும், வெற்றியையும், போர் ஆயுதத்தையும் இந்த மூன்றாமிடம் குறிக்கும்.  துலாராசிக்குரியது. வைரம்.  ஆக வைரத்தாலான வஜ்ராயுதத்தை திட்டமிட்டு அடைந்து வெற்றி பெற்றான் சூரியன் எனும் இந்திரன் என்பது, இந்த புராணம் நமக்கு எடுத்து சொல்லும் ஜோதிட தத்துவமாகும்.  " வைரம் அணிந்தவரை பகை நெருங்காது ", என்ற பொன்மொழி இந்த தத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதாகும்.  அதோடு ஜோதிடரீதியாக மூன்றாமிட ஆதரவு இருந்தால் பகையை வெல்லாம் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது.  இந்த ஸ்தானத்தில் காரகத்துவ அடிப்படையில், ' தம்பியுடையான் படைக்கஞ்சான் ', என்ற பழ்மொழியும் உருவாகியிருக்க வேண்டும்.  ஜோடதிட சாஸ்த்திரத்தில் மூன்றாமிடம் மறைவிடம், துர்ஸ்தானம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அந்த ஸ்தானாதிபதிக்குரிய ரத்தினக்கல்லை கொண்டு ஜாதகர் சாதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது புரிகிறது.  இந்த அணுகுமுறையானது ' பிரதிகூலசக்தி முறை ' எனப்படும்.  அதாவது ஒரு தீயகிரகத்தால் ஜாதகருக்கு ஜாதகப்படி நல்ல யோகம் கிடைப்பதில் பாதகமான சூழ்னிலை இருக்கும் போது,  மூன்றாமிட ரத்தினக்கல் கொண்டு, அதை சாதகமாக்கிக் கொள்வதாகும். 

இந்த பிரதிகூலசக்தி முறை அவ்வளவு எளிதானதல்ல.  கரணம் தப்பினால் மரணம் என்பது போல், கணிதம் தப்பினால் ஜாதகரின் வாழ்க்கையை, தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும்.  நம் மனம் விரும்புவது போல் வரம் தர ரத்தினக்கற்கள் தெய்வங்களல்ல.  அவை கிரகங்களோடும், பஞ்சபூதங்களோடும் மட்டுமே தொடர்புடையவை.  இந்த தொடர்பின் நுட்பம் அறிந்து அவைகளை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நன்மையடையலாம்.  முறை தவறி பயன்படுத்தும் போது, மின்சாரத்தை போல் மீளா அதிர்ச்சியை தந்துவிடும்.  எனவே திறமையான ஜோதிடர்களாக இருந்தாலும், அனுகூலசக்தி முறையையே அனுசரிக்கிறனர்.  அனுபவமும், நுட்பமும், தெய்வீக அருளும் இருந்தால் மூன்றாமிடத்துக்குரிய பிரதிகூலசக்தி முறையை பயன்படுத்தலாம்.  துர்ஸ்தானங்கள் என்று வர்ணிக்கப்படும், 6, 8, 12 ஸ்தானாதிபதிகளுக்குரிய ரத்தினக்கல்லை பயன்படுத்தவே கூடாது என்பதில் கற்றறிந்த ஜோதிடர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.  பிரதிகூலசக்தி முறையை பயன்படுத்தும் போது, மூன்றாமிட கிரகம், துர்ஸ்தானங்களுக்கும் அதிபதியாகி விடலாம்..   அத்தகைய நிலையில் மிகமிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  அல்லது பிரதிகூலசக்தி முறையை கையாளாமல் விட்டுவிடுதல் இன்னும் நல்லது.  இப்போது நாம் இன்னொரு விஷயத்தையும் யோசித்தாக வேண்டும். 

சில சந்தர்ப்பங்களில் திரிகோணாதிபதிகள், துர்ஸ்தானங்களுக்கும் அதிபதியாவதுண்டு.  அப்போது ஜோதிட விதிமுறைகளுக்கேற்ப, எந்த ஸ்தானாதிபதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்து பின் செயல்படவேண்டும்.  திரிகோணாதிபதியாக இருந்து, சுபத்துவம் நிறைந்திருந்தால் அனுகூலசக்தி முறை உதவும்.  இதற்கு உதாரணமாக நாம் ஏற்கனவே நடிகர் திரு அமிதாப்பச்சனின் ஜாதகம் பார்த்தோம்.  இனி மூன்றாமிடத்ததிபதியாக இருக்கும் அதே நேரத்தில், துர்ஸ்தானத்துக்கும் அதிபதியாக இருக்கும் கிரகத்தின் ரத்தினக்கல்லை, பயன்படுத்தும் அவசியம் நேரும் போது, நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிகளை முதலில் பார்க்கலாம்.  பொதுவாக 3 ஆம் ஸ்தானாதிபதியாக உள்ள அனைத்து கிரகங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.  அதாவது, 3ஆம் ஸ்தானாதிபதி அவசியம் ஏதாவது ஒரு கேந்திரத்தில் ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடும் ஜாதக யோகங்களில் ஒன்றை அடைந்திருக்க வேண்டும்.

இப்போது ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.  ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.  ஜாதகர் முன்னாள் பிரதமர். திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்கள்.  சாதகமான பலன் தராத செவ்வாய் திசையில், அதை சாதகமாக்க , செவ்வாயின் ரத்தினக்கல்லான பவளம் அணிந்து, இந்தியாவுக்கு அவர் பிரதமரானார்.  அடுத்த பதிவில் கணித்து பார்ப்போம்................................[ [ [ தொடரும் ] ] ]