Thursday 20 February 2014

ஜோதிட மருத்துவம் பற்றி வாசகர்களுக்கான பதிவு இது.



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ஜோதிட மருத்துவம் பற்றி வாசகர்களுக்கான பதிவு இது.

     " ஜோதிடம் தெரியாத மருத்துவர் ஒரு மருத்துவரே அல்ல," என்று ஆங்கில மருத்துவ உலகின் தந்தை என்று போற்றப்படும், மருத்துவமேதை " ஹிப்போகிரேட்ஸ்" கூறியிருப்பதை முதலில் அனைவருக்கும்  நினைவு படுத்துகிறேன்.  இதை ஆங்கில மருத்துவர்கள் நடைமுறை படுத்துகிறார்களோ இல்லையோ, நம் சித்த மருத்துவர்களில் சிலர் நடைமுறை படுத்துகிறனர்.  அதாவது, வரும் நோயாளியிடம் முதலில் ஜாதகம் கேட்டு வாங்கி................

     1. நோய் எப்போது வந்தது?.................2. எப்போது போகும்?.....................3. எந்த கிரகத்தால் வந்தது?  ஏனென்றால் அதற்கான பரிகார வழிபாடு சொல்ல.....................மேலும் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிய.................4. எவ்வகையான மருத்துவம் மேற்கொள்ளலாம்?

     ................என்றெல்லாம் ஆரய்ந்துவிட்டு பின்பு நோயாளியை பரிசோதிப்பர்.  இதற்கு உதாரணமாக விளங்குபவர். பரம்பரை சித்த வைத்திய மேதை. திரு.  சக்தி சுப்பிரமணியம் அவர்கள்.  ஆக மேற்கூறிய செய்திகளை கொண்டு ஜோதிடத்துக்கும் மருத்துவம் மற்றும் நோய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று புரிந்துகொள்ளலாம்.

     மருத்துவ வழி முறைகள் பல உள்ளன.  சில நோய்கள் எந்த வழிமுறைக்கும் அடங்காமல் பாடாய்படுத்தும்.  உதாரணத்துக்கு " செய்வினை தோஷத்தால் உருவாகும் நோய்கள்,".  பாதகாதிபதியும், ரோகாதிபதியும் ஒன்று சேர்ந்து, அவர்கள் தசாபுக்தி நடைமுறைக்கு வரும்போது செய்வினை தோஷ நோய் உருவாகிறது.  உதாரணத்திற்கு குருவும் சுக்கிரனும் அவ்வாறு அமைந்து, அவர்கள் தசாபுக்தி நடைமுறைக்கு வந்தால், மிகக்கடுமையாக ஜீரணமண்டல உறுப்புகள் பாதிப்படையும்.  அத்துடன் சிறுனீரக பாதிப்பும் இருக்கும்.  இதன் காரணமாக வாந்தி, மலப்போக்கு ஆகியன அளவுக்கு அதிகமாகி, பாதிக்கப்பட்டவர் கடோத்கஜனாக இருந்தாலும் காராசேவ் போல் ஆகிவிடுவார்.  லட்சக்கணக்கில் செலவு செய்து பலவகையான உச்சகட்ட மருத்துவம் பார்த்தாலும் குணமாகாது.  குரு, சுக்கிரன் தசாபுக்திக்காலமான, 2 வருஷம் 8 மாதங்கள் வரை இது இருந்தே தீரும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் மென்மேலும் மருத்துவசெலவை செய்துகொண்டே வருவதை விட ஜோதிட துணை கொண்டு நோய் வந்த காரணமறிந்து, தகுந்த பரிகாரவழிபாடு செய்து தோஷ நிவர்த்தி பெறுவதோடு, நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

     ஆகவே நோயுற்ற நேரத்தில் மருத்துவரை அணுகுங்கள்.  அதோடு ஜோதிடத்தையும் அணுகுங்கள்.  ஜோதிட ரீதியாக வழிபாடு செய்வதன் மூலம்.................1. நல்ல மருத்துவர் கிடைப்பார்....................2.  மருத்துவத்தை உடல் சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும்..................3.  சிக்கலான சிகிச்சையும் [ அறுவை ] எளிமையாக முடியும்.  அல்லது அவ்வித சிகிச்சை இல்லாமலே குணமாகும்..................4.  மருத்துவத்தால் கண்டுபிடிக்க இயலாத தோஷ நோயகள் குணமாக வழி கிடைக்கும்.  இவையெல்லாம் என் அனுபவத்தில் சந்தித்த நிகழ்வுகள்.  எனவே மருத்துவத்தோடு, ஜோதிடத்தையும் இணைத்துக்கொண்டு இறைவன் அருளால், வழிகாட்டிய சித்தர்கள் ஆசியுடன், நோய் நீங்கி பூரண நலம் பெறுவோம்.  நன்றி.

    

" ப்ரம்மஹத்தி தோஷம் "



ஓம் நமசிவாய. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " ப்ரம்மஹத்தி தோஷம் ", பற்றி ஒரு உதாரண ஜாதகம் கொண்டு விளக்கம் பரிமாறிக்கொள்ளும் பதிவு இது. [ பாரம்பரிய முறை ]. உதாரண ஜாதகம் தந்து உதவிய திரு. விஸ்வம்பரி அவர்களுக்கு நன்றி.

1. ப்ரம்ம ஹத்தி தோஷம்

தோஷங்களிலேயே இது மிகக்கொடியதாக கருதப்படுவது. திருக்கோவில் ஸ்தலபுராணங்களில் அதிகமாகவும், இதிகாச, புராணங்களில் பரவலாகவும் இதைப்பற்றி எடுத்து சொல்லப்பட்டு, இதன் தாக்கத்தை பற்றி எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடிய தருமநெறி தவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது. ' பொய்மை ' என்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. ' பொய்மையும் வாய்மையிடத்த..............', என்ற வகையில் அது மன்னிக்க்ப்படலாம். என்றாலும் எள்ளளவும், எதற்காகவும், மன்னிக்க இயலாத பாதகச்செயலகளை போன பிறவியில் செய்தோமானால், இப்பிறவியில் உறுதியாக துயரை தந்து வாட்டக்கூடியது.

2. ப்ரம்ம ஹத்தி தோஷ கிரக நிலை

பொதுவாக குரு + சனி சேர்ந்தாலோ, சமசப்தமபாரவை பெற்றாலோ அல்லது சார பரிவர்த்தனை அடைந்தாலோ ' ப்ரம்மஹத்தி தோஷம்', என்ற கணிப்பு உள்ளது. இந்த கணிப்பு ஜோதிட சம்பந்த சாஸ்திரப்படி இயற்றப்பட்ட பழம்பாடல் எதுவும் எனக்கு தெரிந்த வரையில் இல்லை. அவ்வாறு ஏதேனும் பாடல் உள்ளதெனில் நமது ஜோதிட நண்பர்கள் தெரிவித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே என்னைபொறுத்தவரையில் இந்த கணிப்பு பிற்காலத்தில் யாராலோ உருவாக்கபப்ட்டிருக்க வேண்டும். ஆகையால் 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு', எனும் திருக்குறளுக்கேற்ப இக்கணிப்பை ஆராய்வதில் தவறில்லை என கருதலாம்.

3. கணிப்பு ஆய்வு;

} குரு + சனி சேர்ந்தால் ப்ரம்மஹத்தி;

இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எவ்வாறெனில், குரு + சனி கூடினால் குருசண்டாள யோகம் [தோஷம்} என கூறப்பட்டுள்ளது. ஆதாரம் லிப்கோ வெளியிட்டுள்ள குடும்பஜாதகம் நூல். இருவகையான தோஷங்களுக்க் ஒரே விதிமுறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மேலும் இன்னொரு வகையில் இக்கணிப்பையும் கவனிக்கலாம். குருவும் சனியும் சேர்ந்து ஒரு ராசியில் அதிக பட்சம் ஓராண்டு வரை இருக்கும். எனவே அந்த ஆண்டு முழுவதிலும் பிறந்த அனைவரும் ப்ரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

} குரு + சனி சமசப்தம பார்வை பெறுவது;

ராசிப்படி பார்த்தால் இதுவும் ஒரு வருஷம் நிகழ்க்கூடியது. எனவே நக்ஷத்திர சாரப்படி பார்க்கலாம். சனியை விட குரு வேகமாக நகரக்கூடியவர். 9 பாதங்களை கடக்க 12 மாதங்கள் என்றால் 1 பாதம் கடக்கும் குருவின் காலம் சராசரியாக 1 மாதம் 10 நாட்களாகும். இதில் குருவின் வக்கிர காலங்கள் கணிக்கப்படவில்லை. கணித்தால் நாட்களின் எண்ணிக்கை கூடும். ஆக இந்த 1 மாதம் 10 நாட்களில் பிறக்கும் அனைவருமே பிரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா?

} இனி சாரபரிவர்த்தனை கணிப்பு;

குரு ராசிக்கட்டத்தை 12 ஆண்டுகளில் சுற்றி வரும் போது, சனி ஏறக்குறைய 5 ராசிக்கட்டங்களை கடக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் 43 நக்ஷத்திர பாதங்களை கடக்கிறார். இதில் குறைந்த பட்சம் 4 பாதங்களையும், அதிகபட்சம் 9 பாதங்களையும் கடக்கும் போது குருவும் சனியும் சாரபரிவர்த்தனை பெற முடியும். குறைந்தபட்சம் 4 பாதங்களை கடக்கும் காலம் 1 வருஷம் 3 நாட்கள். 9 பாதங்களை கடக்கும் காலம் 2 வருஷம் 6 மாதங்கள். ஆக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்காலகட்டங்களில் பிறப்பவர்கள் அனைவரும் பிறப்பார்கள் என்பது நம்பவியலவில்லை. எனவே ப்ரம்மஹத்திதோஷ ஜாதகங்களை தீர்மானிக்கும் கிரகனிலைகளை இன்னும் நுட்பமாக கணித்துப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.

4. இனி உதாரண ஜாதகத்துடன் இதை கணித்துபார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு + சனி இணைவு. ஆனால் சனி நீசம். அதேனேரம் சனி நீசபங்கம் பெறவில்லை. அத்துடன் வக்கிர நிலையிலும் இல்லை. சனி நீசம் பெறுவது 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 வருஷம் 6 மாதகாலம். ஆக இக்கிரகனிலையை ஏற்றுக்கொள்வோமானால் ப்ரம்மஹத்திதோஷத்துடன் பிறப்பவர்கள் 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை பிறக்கிறார்கள். இதிலும் சில விதி விலக்குகள் இடம் பெறுகின்றன. சந்திரனும், செவ்வாயும் இடமாற்றம் மேற்கொள்ளும்போது சனி நீசபங்கம் அடைந்து நல்ல யோகம் தருவார் என்பதால் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் இருக்காது எனக்கொள்ளலாம். மேலும் சனியின் வக்கிரகாலம் ஏறத்தாழ 3 மாத காலம். இக்காலகட்டத்தில் நீசசனி கெடுபலனை விலக்கிக்கொள்வார் என்பதாலும் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது எனவும் கொள்ளலாம். நீசசனி வக்கிரம் பெற்றால் கெடுபலன் விலகும் என்பது பலரது கருத்தாகவும், என் சொந்த அனுபவமாகவும் உள்ளது. மேலும் சனி அஸ்தங்கம் ஏற்படுவதுண்டு. இக்காலகட்டத்தில் சூரியனின் ஆளுமையாலும் அவரது பூர்வபுண்ணியஸ்தானாதிபதிய தன்மையாலும் சனியின் கெடுபலனை மாற்றிவிடுவார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது என்றும் கொள்ளலாம். ஆக ப்ரம்மஹத்திதோஷம் இவ்வளவு விதிகளையும் கடந்து ஜாதகரை அடைய வேண்டியுள்ளது.

உதாரண ஜாதம் இவ்வகையான விதிவிலக்குகளுக்கு உட்படவில்லை. மேலும் தர்மகர்மாதிபதிகள் இணைந்தால் நல்லயோகம் என்ற விதியும் பார்க்கவேண்டியுள்ளது. இதன்படி இருவரில் ஒருவர் கூட கெடக்கூடாது. அப்படி கெட்டால் நல்லயோகம் அடிபட்டுவிடும். ஜாதகத்தில் இருவர் இணைந்து சனியின் கிரக நிலையால் நல்லயோகம் இல்லாமல் போய்விட்டது. எனவே ஜாதகருக்கு ப்ரம்மஹத்திதோஷம் உறுதியாகிறது. ஆக 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வருஷ கால கட்டத்திற்குள் பிறப்பவர்களுக்குத்தான் மிகவும் கடுமையானது என கருதப்படும் ப்ரம்மஹத்திதோஷம் ஏற்படுகிறது என கொள்வது சரியானதாகும் என்பது என் கருத்து.

5. இனி உதாரண ஜாதகத்தை கொண்டு தோஷனிவர்த்தி கிரக நிலைகளை பார்க்கலாம்.

இறைவன் கருணையே வடிவானவன். எனவே ஜாதகத்தில் தோஷனிவர்த்தி தரும் கிரகனிலையோடு பிறக்கவும் வைக்கிறான். உதாரண ஜாதகத்தில் பூர்வபுண்ணியஸ்தானத்துக்கு குருவின் பார்வை கிடைக்கிறது. இதனால் சந்திரன், புதன் கிரகங்களில் பாபபார்வை இருந்தாலும், ஸ்தானம் புனிதப்பட்டுவிடுகிறது. அதே நேரம் பூர்வபுண்ணியாதிபதியும் சுபகரமாக இருக்கவேண்டியது அவசியமாகும். ஜாதகத்தில் அதிபதி பகைஸ்தானத்தில் இருப்பு. அவர் கேதுவுடன் கூடினாலும் கிரக பாத சாரப்படி சூரியனுக்கு பாதிப்பு கேதுவால் இல்லை என்றாலும் பகை என்பதால். அவர் தோஷத்திற்கு ஆட்பட்டவர் என்பது புரிகிறது. குருவின் பார்வையால் கிடைத்துள்ள சுப அனுகூலத்தின் துணை கொண்டு தோஷ நிவர்த்தி பெறலாம். இதற்காக பூர்வபுண்ணியஸ்தானத்தின் புண்ணியபலனை இப்பிறவியில் பெற்று தரும் ஸ்தானத்தின் அனுகூலமும் தேவைப்படுகிறது. இதற்காக நாம் ஒன்பதாம் ஸ்தானத்தின் சுபத்தன்மையும் பார்க்க வேண்டியுள்ளது. ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்திற்கு குருபார்வை. அத்துடன் ஸ்தானாதிபதி குரு லக்னத்தில் இருப்பு. ஆனால் நீசசனியுடன் இணைவாக உள்ளாரே? என்ற கேள்வி எழலாம். இத்தகைய சனியுடன் சேர்ந்ததால் தானே ஜாதகம் தோஷ ஜாதகமாக அமைகிறது. எனவே இவ்விஷயத்தில் குருவின் இருப்பைவிட தோஷனிவர்த்திக்கான கிரக நிலைக்கே முதலிடம் தர வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வகையில் ஜாதகர் இறைவன் கருணையால் தோஷனிவர்த்தி பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வகை கிரகனிலை அமையாத ஜாதகங்களை பெற்றவர்கள், இறைவனால் கூட மன்னிக்க இயலாத படுபாதகர்கள் என நாம் இனம் கண்டு கொள்ளலாம்.

6. தீர்வு.

ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலத்தையும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். அக்காலகட்டத்தில் கோசரத்தில் 5ம் இடம் மற்றும் 9ம் இடம் பாதிப்பு இல்லாத காலகட்டம் பார்த்து பரிகாரவழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் தோஷம் விலகும். தோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும். பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். ஜாதகருக்கு தற்பொழுது பாலவயது. தோஷகாலகட்டத்தில் அவருக்கு வயதுக்கேற்றால் போல் தோஷ தாக்கம் ஏற்படும். பரிகாரத்திற்குண்டான வழியும் பிறக்கும். ஜாதகம் மேஷ லக்னமாக அமைந்திருப்பதும் இறைவன் அருளாகும்.

7. வேண்டுகோள்.

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறள் கருத்து எனது இப்பதிவுக்கும் பொருந்தக்கூடியதே. எனவே தயவுசெய்து என் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட இன்னும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுதல் நன்றாகும். தவறு இருப்பின் தள்ளுபடி செய்வதுடன், உங்கள் கருத்தையும் கூறவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.