Thursday 30 January 2014

மாங்கல்ய தோஷ ஜாதகம் அமைந்ததால் வருத்தம் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கான பதிவு



ஓம் நமசிவாய.  மாங்கல்ய தோஷ ஜாதகம் அமைந்ததால் வருத்தம் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ]  இதில் ஜோதிட ஆராய்ச்சி எதுவும் கிடையாது.  வருத்தத்தில் இருக்கும் சகோதரிகள், தன்னம்பிக்கை பெறுவதற்கும், நிம்மதியடைவதற்கும் தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ளும் முயற்சி இது.

ஜாதங்களில் திருமணமே ஆகாது என்ற அமைப்புடைய ஜாதகங்கள் உள்ளன.  ஆனால் மாங்கல்ய தோஷம் என்பது அவ்வாறு இல்லை, இந்த தோஷம் நிரந்தரமாக திருமணத்தை தடை செய்துவிடாது.  எனவே வாழ்க்கையில் திருமணமே இல்லையா? என்ற குழப்பத்தை தவிர்த்து விடவேண்டும். " மாங்கல்ய தோஷம் உடைய பெண்  கழுத்தில் மாங்கல்யம் தங்காது.  விதவையாகிவிடுவாள்.  இப்படிப்பட்ட ஜாதகங்களால் கணவன் உயிருக்கு ஆபத்து" ; என்றெல்லாம் பரவலாக கருதப்படுகிறது.  இதனால் இப்படிபட்டவர் ஜாதகங்கள் பொருத்தம் பார்க்கும் போது ஒதுக்கப்பட்டு விடுகின்றன.  இப்படியே எல்லோரும் ஒதுக்கிக்கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன?  இதற்கு தீர்வாக சில பரிகாரங்கள் சொல்லப்பட்டு, இதை செய்தால் தோஷம் நீங்கும் என்றும் கருதப்படுகிறது.  தோஷ பரிகாரம் முடிந்தபின் அதே ஜாதகத்தை வேறொரு ஜோதிடர் மீண்டும் தள்ளுபடி செய்துவிடுகிறார்.  அப்படியானால் என்னதான் செய்வது?  பாப / தோஷ சாம்ய விதிமுறைப்படி பொருத்த நிர்ணயம் செய்யும் ஜோதிடர், இந்த ' தள்ளுபடி " தவறை செய்யமாட்டார்.  இது தெரிந்தவர் சிலராகவே உள்ளனர்.

மாங்கல்ய தோஷ பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது உண்மையல்ல.  ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் பரிகாரத்திற்குப்பின் திடீரென்று இடம் மாறிவிடப்போவதில்லை.  இறைவன் துணையை நாடும் போது, அவனருளால் நீண்ட நெடிய ஆயுள் உள்ள கணவன் கிடைக்கவும், விரைவில் திருமணம் நடக்கவும் வழி பிறக்கும்.  நீண்ட ஆயுள் வரனைபற்றியும், தோஷத்தை பற்றியும் பின்னர் விரிவாக பார்ப்போம்.  பரிகாரம், வழிபாடு என்ற பெயரில் இறைவனை வணங்குவதோடு மட்டுமல்லாமல் அதை சமுதாய நோக்கோடு செய்யும்போது புண்ணியம் பெருகி, ஜனன ஜாதக பூர்வபுண்ணியஸ்தானம் பலப்படும்.  வேண்டுதல் பலிக்கும்.  இதைத்தான் சைவ சித்தாந்தம் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என்று சொல்கிறது.  ஜாதகர்களுக்கு இப்புண்ணியங்களை பெருகச்செய்வதில், ஜோதிடருக்கு பெரும் பங்கு உள்ளது.  பதி புண்ணியமாக கிரகபரிகாரங்களையும், சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று இறைவழிபாட்டையும் மேற்கொள்ளச்செய்யவேண்டும்.  பசு புண்ணியமாக கிரகங்களின் காரகத்துவப்படி, மனிதன் உட்பட இவ்வுலக ஜீவன்களுக்கு நல உதவிகளையும் செய்யுமாறு சொல்லவேண்டும். பசு புண்ணியம் செய்யும்போது கோசரப்படி அப்போதைய பூர்வபுண்ணியஸ்தானம் பலப்படும்.  இப்படி நல்ல முறையில் அமையும் பூர்வபுண்ணியஸ்தானங்கள் செயல்படும் போது பெண்ணுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

மாங்கல்ய தோஷம் உடைய பெண் ஜாதகத்தோடு, நீண்ட ஆயுள் உடைய ஆண் ஜாதகத்தை இணைக்கவேண்டும்.  இப்படி திருமணம் செய்துகொள்வதால், ஆணின் ஆயுள்ஸ்தானம் பாதிக்கப்பட்டுவிடாது.  அதாவது பெண்ணின் தோஷம் ஆண் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை இடம் மாற்றிவிடப்போவதில்லை.   மாங்கல்ய தோஷமுடைய பெரும்பாலான பெண்களுக்கு நீண்ட ஆயுள் நிச்சயம் இருக்கும்.  அனுபவத்தில் இப்படிப்பட்ட பல ஜாதகங்களை பார்வையிட்ட ஜோதிடர்களுக்கு இவ்வுண்மை தெரியும்.  இவ்விரு ஜாதகங்களை இணைக்கும் போது இருவரும் நிச்சயம் நீண்ட ஆயுள் பெறுவர்.  இவர்களை மாங்கல்ய தோஷமானது, வாழ்க்கை வாழ்ந்து விட்ட நிறைமனதோடு இருக்கும் வயதான கால கட்டத்தில்தான் பாதிக்கும்.  அப்போது அதன் பாதிப்பு பெரிதாக தோன்றாது. புகழ் பெற்ற ஜோதிடர்கள் இப்படிப்பட்ட ஜாதகங்களை இணைக்கும் முறையை கையாண்டு வழி காட்டியிருக்கிறார்கள். நம்மில் சிலர் இதை நடைமுறை படுத்திவருபவர்களும் இருக்கிறார்கள்.  ஜாதகம் திரும்ப, திரும்ப தள்ளுபடி செய்யப்பட்டு. கண்ணீருடன் காலம் கழிக்கும் பெண்ணின் பாபத்திற்கு ஆளாகாமல், இருவரை இணைப்பதன் மூலம், இவ்வழியை செயல்படுத்தாதவர்கள், செயல்படுத்தி புண்ணியம் பெற்றவர்களாகலாம். 

எவ்வகைப்பட்ட பரிகார வழிபாடுகளை பெண் செய்தாலும், அதை பிள்ளை வீட்டார் ஏற்றுக்கொள்ளுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.  ஆகவே மாங்கல்ய தோஷ பெண்ணின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பொறுப்பு பிள்ளைவீட்டாருக்கும் உண்டு.  இவ்விஷயத்தில் ஜோதிடர் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  நம்மால் [ ஜோதிடர்கள் ] முடிந்ததை நாம் செய்வோம்.  இறைவன் அருள் புரிவானாக.

Wednesday 29 January 2014

கடன்சுமையால் கலங்கிகொண்டிருக்கும் ஜாதகர்களுக்கான பதிவு இது



ஓம் நமசிவாய.  வணக்கம்.  கடன்சுமையால் கலங்கிகொண்டிருக்கும் ஜாதகர்களுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ] 

ஜாதக பாவரீதியாக சிந்தித்துப் பார்த்தால் கடன் ஏற்படுவதற்கான காரணங்களை பட்டியலிடமுடியும்.

1.  தன் சொந்த காரணங்களால் ஏற்படுவது [ உம்.  கௌரவ செலவுகள். தீய பழக்கவழக்கங்கள் ]
2.  குடும்ப நிர்வாக பற்றாக்குறையால் ஏற்படுவது.
3.  அடுத்தவருக்கு வாக்குறுதி தந்து, அதை நிறைவேற்றாமல் போவதால் ஏற்படுவது.
4.  உடன் பிறந்தவர்களால் ஏற்படுவது
5.  நண்பர்களால் ஏற்படுவது
6.  சொத்துக்களால் ஏற்படுவது [ வாங்குவதாலும் அடைபடாமல் போவதாலும் ]
7.  தாயார் வழி உறவினர்களால் ஏற்படுவது
8.  பிள்ளைகளால் ஏற்படுவது
9.  ஆடம்பர செலவுகளால் ஏற்படுவது
10.  விரோதிகளாலும், துரோகிகளாலும் ஏற்படுவது.  [ ஏமாற்றம், திருட்டு ]
11.  மனைவி, மற்றும் அவள் வழி உறவினர்களால் ஏற்படுவது
12.  எதிர்பாராத கடுமையான நோய்களாலும், விபத்தாலும் ஏற்படுவது.
13.  சரியாக திட்டமிடாத கூட்டு வியாபாரத்தால் ஏற்படுவது
14.  தந்தை வழி உறவினர்களால் ஏற்படுவது.
15.  தொழிலில் ஏற்படும் இழப்பாலும், நிரந்தரமான தொழில் அமையாததாலும் ஏற்படுவது.
16. வரவேண்டிய வரவுகள் நிலுவைலேயே இருந்து கொண்டிருப்பதால் ஏற்படுவது
17.  எவ்வளவு வந்தாலும் செலவுகள் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருப்பதால் ஏற்படுவது

மேற்கண்ட பட்டியலில் இருப்பவைகளின் ஏதேனும் ஒன்றாவது நம் வாழ்க்கையில் நிச்சயமாக இருக்கும். [ இதில் நான் மட்டும் விதி விலக்கல்ல.  எனக்கும் பாதிப்பு உள்ளது ] இன்றைய சமுதாயத்தில் கடனின்றி வாழ்கின்ற ஒரு மனிதனைக்கூட காட்ட இயலாது.  அனால் அதுவே பெரும் சுமையாகி வருத்தும்போது மிகவும் தவிப்பாக இருக்கிறது.  இவைகளை தவிர்க்கவேண்டும் அல்லது மாற்றவேண்டும் அல்லது விடுதலை பெற்று நிம்மதியாக இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் வழி இருக்கிறதா?  ஆண்டவனிடம் முறையிடுவதா?  உற்றார் உறவினர்கள் உதவுவார்களா?  அல்லது வாழ்க்கையே கடைசீ வரை இப்படித்தானா? யார் வழிகாட்டுவார்கள்?  என்றெல்லாம் எண்ணி குழப்பமான நிலையில் இருப்பவர்களுக்கு " ஜோதிடம் வழிகாட்டும் ", என்று சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

ஜோதிடம் காட்டும் வழிகள்:

1.  குடும்ப நிர்வாக திறமையின்றி கடனாளியாகும் ஜாதகர்கள், ஜாதகப்படி நிர்வாக திறமையுள்ள குடும்ப உறுப்பினரிடம் நிர்வாகத்தை மாற்றிவிடுவது.
2.  சொத்துக்களில் கடன் இருப்பின், ஜாதகப்படி கடன் அடையும் ராசியுடைய குடும்ப உறுப்பினர் வசம் சொத்துக்களை ஒப்படைப்பது
3.  ராசிப்படி தனக்கு கடன் வராத வகையில் அமையும் சொத்துக்களை வாங்குவது. [ வீடு, நிலம், நிதி, தங்கம் போன்றவைகளை ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ராசிப்படி மாற்றிக்கொள்வது ]
4.  நோய், நொடிகளால் அதிக செலவு வரும் எனில் அதை முன்கூட்டியே அறிந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்வது.
5.  கூட்டு வியாபாரம் தொடங்குவதற்கு முன் சரியான நபர்களை தேர்வு செய்வது.
6.  ஜாதகப்படி சரியான தொழில் அமைத்துக்கொண்டு முதலீடு செய்வது, அல்லது அந்த முதலீட்டை ராசியான குடும்ப உறுப்பினர் பெயரில் செய்வது.
7.  பிள்ளைகளுக்காக அதிக பட்ச செலவுகளை செய்யும் போது [ உம். கல்விக்கடன்சுமை ] அதற்குண்டான அனுகூலங்களை ஆராய்வது.
8.  தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சி செய்தல், அதாவது அதற்குண்டான தெய்வத்திடம் முறையிடுவது
9.  இதுபோல் இன்னும் விடுபட்டவைகள் உள்ளன.

இவைகளில் தனக்குரிய வழிகாட்டுதலை தேர்வு செய்து கொண்டு, வாழ்க்கையை சரியான முறையில் திட்டமிட்டு நடத்தி, கூடியமட்டும் மகிழ்ச்சியை வரவு வைத்து, நிம்மதியை சேமித்து வாழலாமே!  இறைவன் திருவருளானது எல்லோருடைய வாழ்க்கையிலும் நிம்மதியை நிலை பெற செய்யவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம்.  ஜோதிடத்தின் துணையுடன் நல்வழிமுறையை தேடுவோம்.  நன்றி.

Tuesday 28 January 2014

தோஷ நிவர்த்தி பற்றி ஜாதகர்களுக்கான சுருக்கமான பதிவு



ஓம் நமசிவாய.  நண்பர்களுக்கு வணக்கம்.  தோஷ நிவர்த்தி பற்றி ஜாதகர்களுக்கான சுருக்கமான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ].  தோஷ ஜாதகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதாவது ஒரு பரிகாரம் செய்தால், அதற்கான நிவர்த்தி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பரிகாரவழிபாடுகளை மேற்கொள்வதுண்டு.  ஆனால் சிலர், என்னதான் பரிகாரவழிபாடுகள் செய்தாலும், துன்பம் விலகாமல் அவதிப்படுகிறார்களே!  அது ஏன்?  சிந்தித்துப்பார்த்தால் தோஷம் விலகும் ஜாதகம், விலகாத ஜாதகம் என இருவகை உண்டோ! என்று எண்ணத் தோன்றுகிறது.  உண்மையும் அதுதான்.  இதில் தன்னுடையது எந்த வகை? என்பதை ஒரு அனுபவமும், திறமையும் உள்ள ஜோதிடரால் சொல்லவியலும்.

தோஷ ஜாதகங்களை நாம் இருவகையாக பிரிக்கலாம்.  1. தற்காலிக தோஷ ஜாதகம்.  2. நிரந்தர தோஷ ஜாதகம்.  உதாரணத்திற்கு ஒரு தற்காலிக தோஷத்தை பார்க்கலாம்.  நாக [ சர்ப்ப ] தோஷம்.  இது திருமணத்தடையை தற்காலிகமாக, ஆண்களுக்கு 30 வயது வரையிலும், பெண்களுக்கு 25 வயது வரையிலும் ஏற்படுத்தும்.  இந்த தோஷத்தின் நோக்கமே இளமையில் இல்லறசுகத்தை அனுபவிக்க விடாமல் தடுப்பதாகும்.  30/25 வயதுக்கு மேல் இந்த தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்பட்டுக்கொண்டு வரும். எனவே 40 வயதுகளில் இந்த தோஷத்தை பற்றிய பேச்சே வருவதில்லை.  இந்த தோஷமுடைய, இளமையில் திருமணமான தம்பதியரை கேட்டால், இல்லற சுக தடையை பற்றி வருத்தத்தோடு சொல்லுபவர்களை அனுபவத்தில் பார்க்கலாம். எனவே இவ்வகை தோஷமுடையவர்கள் 30/25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது நல்லது.  இவ்வாறு 30/25 வயதுக்கு மேல் திருமண ஏற்பாடு செய்யும்போது, நாகதோஷ பரிகார வழிபாடுகளை செய்துகொள்வது நல்லது.  இதனால் பொருத்தமான துணை கிடைத்து சுகமாய வாழ இறைவன் அருள் புரிவார்.

இனி ஒரு உதாரணத்தோடு நிரந்தர தோஷம் ஒன்றை பார்க்கலாம்.  எந்த தோஷமாக இருந்தாலும், அது நிவர்த்தியடைய வேண்டுமானால், அதற்கு பாக்கிய ஸ்தான ஒத்துழைப்பு இருக்கவேண்டும்.  சென்ற பிறவியில் நாம் செய்த பாவமானது, இப்பிறவி ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்தை பாபக்கிரகங்களால் பாதிப்படைய செய்துவிடும்.  இதைத்தான் ஜோதிடர்கள் " கர்மபலன் " என்கிறனர்.  சுபபலன், அசுபபலன் என்பது வேறு.  கர்மபலன் என்பது வேறு.  கர்மபலனை நாம் அனுபவித்தே ஆகவேண்டும்.  உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், இதில் சிக்கிக்கொள்ளும் தோஷங்களில் ஒன்று புத்ரபாக்ய தோஷமாகும்.  சிலருக்கு குழந்தையே இல்லை என்பது இந்த காரணத்தால் ஏற்படுவதுதான்.  அதிலும் கணவன், மனைவி இருவருக்கும் கர்ம பலன் பாதிப்பு இருந்துவிட்டால், தத்துப்பிள்ளை கூட நல்ல முறையில் அமையாமல் போவதுண்டு.  இவ்வகை ஜாதகர்களுக்கு எவ்வித பரிகாரவழிபாடுகளும் கை கொடுக்காமல் போய்விடுகிறது. 

எனவே தோஷம் என்றாலே நிவர்த்தி செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் தவறானதாகும்.  நிவர்த்தி செய்தால் எல்லா பாவங்களும் நீங்கி தோஷனிவர்த்தி அடைந்துவிடலாம் என்பது மெய்யானதென்றால், எல்லோரும் அவரவர் குறைகளுக்கேற்ப பரிகாரவழிபாடுகளை செய்துகொண்டு, அனைவரும் நலமாக இருந்துவிடலாமே.  இதனால் உலகத்தில் கஷ்டப்படுபவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகலாமே.  மொத்தத்தில் பொதுவாக தோஷங்களிலிருந்து விடுதலை பெற, பாபகாரியங்களை செய்யாமல், புண்ணியகாரியங்களை செய்துவருவதே நல்ல வழியாகும்.  இவ்வகையான வழிகாட்டிகளாக விளங்குபவர்கள், நல்லெண்ணம் கொண்ட, திறமையான, அனுபவசாலியான ஜோதிடர்களே என்பதில் சந்தேகமேயில்லை.  நன்றி.

[:::::::::முக்கிய குறிப்பு:::::::::::::: ] பரிகாரவழிபாடுகள் செய்யும் போது, திருக்கோவில் வழிபாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல், இவ்வுலக ஜீவராசிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும், என்பது எனது தாழ்மையான கருத்து.  கிரக, பாவ காரகத்துவங்களில் அதற்கான வழிமுறைகள் அடங்கியுள்ளன.  ஜோதிடர்கள் பரிகாரவழிபாடுகளை சொல்லும்போது, இது விடுபட்டுப்போனாலும் ஜாதகர்களாக இதை கேட்டறிந்து சமூக நலச்செயல்களை செய்வதில் தவறில்லை.  இதுவும் ஒரு புண்ணியகாரியமே.  ஒருமுறை சந்திரதசை, புதன்புக்தியால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, திருக்கோவில் பரிகாரவழிபாடுகளை பற்றி சொன்னதோடு மட்டுமல்லாமல்,  ஒரு ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்யுங்கள்  என்று அறிவுருத்தினேன்.  இது கிரக காரகத்துவப்படி சரியானதாகும்.  திடீரென்று ஒரு நாள், ஒரு பெண் " நீங்கள் சொன்ன பரிகார அறிவுரையால் ஜாதகர் என்னுடைய இந்த ஆண்டின் கல்வி செலவுக்கு உத்திரவாதம் அளித்துள்ளார். உங்களுக்கு நன்றி ", என்று கூறியபோது எதிர்பாராத மகிழ்ச்சியடைந்தேன்.  . 

Sunday 26 January 2014

"தசா சந்தி", பற்றிய விளக்கப் பதிவு



"தசா சந்தி", பற்றிய விளக்கப் பதிவு இது.

உண்மையில் ஒரு தசை முடிந்து, அடுத்த தசை தொடங்கும் தறுவாய்தான் "தசா சந்தி" என்பதாகும்.  பொருள் பொதிந்த விளக்கமும் இதுதான்.  ஆனால் நடப்பில் நடப்பது என்ன?.

விவாகப் பொருத்தம் பார்க்கும் போது, தசா சந்தி இருந்தால் இணைக்கக்கூடாது, தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.  இது தசா சந்தியல்ல.  'ஏக தசை நடப்பு' என்பதாகும்.  ஆண், பெண் இருவருக்கும் ஏக தசை நடப்பில் இருந்து, அவை சுபயோகத்தை தருவதாக இருந்தால்,  இரு ஜாதகங்களையும் இணைக்கலாம்.  இதில் இன்னும் நுணுக்கமாக பார்க்க புக்தியையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

( -ம் )  ஏக தசை நடப்பில், ராகு தசை- சனி புக்தி [] கேது புக்தி எனக் கொண்டால், ஜாதகங்களை இணைக்க இயலாது.  காரணம்.  இந்த தசா புக்தி நிச்சயமாக விவாக பிராப்தியை தராது.  அதே நேரம் ராகு தசை - சுக்கிர புக்தி எனக் கொண்டால், இது இருக்கும் சுபயோகத்தை பொருத்து விவாக பிராப்தம் தரும்.  இணைக்கலாம்.  அதே நேரம், இதுவே அசுபயோகத்தில் இருப்பின் இணைக்க இயலாது.

இப்படி தசா புக்தி கணித்து பொருத்தம் பார்ப்பதை முறைபடி "தசா பொருத்தம்" என்று சொல்ல வேண்டும்.  இதை தசாசந்தி என்பது தவறு.  ஆனால் நடைமுறையில், ஒரு ஜாதகரிடம் தசாபொருத்தம் இல்லை என்று சொன்னால், அதை அவர் தசபொருத்தம் இல்லை என்று புரிந்துகொண்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும்.  இப்படி நேரக்கூடாது என்பதற்காக இதையும் தசாசந்தி என்று சொல்லிக்கொண்டிருக்கிரார்கள்.  அதுதான் நடைமுறையில் உள்ளது.

மொத்ததில், தசா பொருத்தம் என்னும் தசாசந்தி இருப்பின், அதை ஆராயாமல் இணைக்ககூடாது”, என்று கூறுவது தவறாகும்.