Monday 22 February 2016

" நவாம்சத்தை பற்றி.....



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " நவாம்சத்தை பற்றி............... ".  பாரம்பரிய முறையிலான பதிவு.  ................  பொதுவாக ஜாதகம் கணிப்பவர்கள், தற்போது பக்கம் பக்கமாக கணித்துத் தள்ளுகிறார்கள்.  முற்காலத்தில் ஒரு ஓலைச்சுவடியின் ஒரு பக்கத்திற்குள் ஜாதகத்தை கணித்து விடுவார்கள்.  ஓலையின் அளவு சிறியது என்பதால், அதில் ராசி மற்றும் நவாம்ச சக்கரம் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.  கிரகபாதசாரம் எழுத இடம் இருக்காது.  சுருக்கமான முறையில் தினசுத்தி, தசாபுக்தி இருப்பு குறிக்கப்பட்டிருக்கும்.  இக்காலத்தில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஜாதகத்திலும், சில தகவல்கள் இல்லையென்று குறை சொல்வாருண்டு.  ஆனால் அக்காலத்தில், இந்த ஒற்றை பக்க ஓலையில் இருக்கும் விபரங்களை பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகம் சம்பந்தப்பட்ட எல்லா விபரங்களையும், புரிந்துகொண்டுவிடும், ஜோதிடஞானம் பெற்றவர்கள் இருந்தனர்.  அவர்களுக்கு நவாம்சம் என்ற துணைசக்கரம் ஒன்று இருந்தால் போதுமானது.  உயர்கல்வி, பெற்றோர், தொழில், புத்ரபாக்கியம் என்று எதைபற்றி கேட்டாலும், அவைகளுக்குண்டான சதுர்விம்சாம்சம், துவாதசாம்சம், தசாம்சம், சப்தமாம்சம் என்ற வர்க்க சக்கரங்களை கணித்து, மிக மிக துல்லியமான பலனை அவர்களால் சொல்ல முடிந்தது.  பாதசாரம் அல்லது பாகையின் துணையின்றி, தேவையான வர்க்க சக்கரங்களை கணிக்க இயலாது.  நவாம்ச சக்கரம் கிரகபாதசாரத்தை அடிப்படையாக கொண்டதால், அதை வைத்து இந்த சாதனையை அவர்கள் செய்திருக்கிறார்கள்.  இது நவாம்சத்தின் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று.

நவாம்சம் போன்ற வர்க்கசக்கரங்கள் நிறைய உள்ளன.  அவற்றுள் மிக முக்கியமானவையாக கருதப்படுபவை சோடச வர்க்கம் எனப்படும் 16 வகையான சக்கரங்களாகும்.  ராசிக்கட்டத்தில், ஒரு கட்டத்தில் இடம் பெற்ற ஒரு கிரகம், அதே கட்டத்தில் சோடச சக்கரங்களில், எத்தனை சக்கரங்களில் இடம் பெறுகிறதோ அதற்கு தகுந்தவாறு, அந்த கிரகம் பலம் பெறுகிறது.  இதை வர்க்கபலம் என்கிறனர்.  எனவே ஒரு கிரகத்தின் பலம் பரிபூரணமாக கணிக்கப்பட வேண்டுமென்றால், இந்த சோடச சக்கரங்களில் எத்தனை சக்கரங்களில், அந்த கிரகம் வர்க்கபலம் பெறுகிறது என்பதை பொறுத்ததாகும்.  இதில் ராசிக்கட்டமும், நவாமச கட்டமும் அடங்கும்.  ஆனால், பல ஜோதிடர்கள், நவாம்ச கட்டத்தை மட்டும் கவனித்துவிட்டு, வக்கோத்தம பலம் கிரகம் பெற்றுவிட்டது என்று முடிவு கட்டிவிடுகிறனர்.  கிரகம் வர்கோத்தமம் மட்டும் அடைந்தால் போதும், என்று நம் முன்னோர்கள் நினைத்திருந்தால், அவர்கள் நவாம்ச சக்கரத்தை மட்டும் அறிமுகப்படுத்தி அறிவுருத்தியிருக்கலாம்.  ஆனால் அதை விடுத்து, மேலும் பல சக்கர வகைகளை அறிமுகப்படுத்தி, சோடசாம்ச கிரக வர்க்கபலங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்

ராசி சக்கரப்படி மேஷத்தில் சனி நீசம்.  மகரம் அல்லது கும்பம் லக்னமாக இருந்தால், லக்னாதிபதி நீசம் என்றாகும்.  பாதசாரப்படி சனி அஸ்வினி 1 ஆம் பாத தொடக்கத்தில் இருக்கிறார்.  இப்போது சனி கிட்டத்தட்ட ராசி சக்கரத்தில் தொடங்கி, சோடச வர்கத்தின் வரிசையில் பல சக்கரங்களில் வர்க்கபலம் அடையும்.  இப்போது ஸ்தான பலத்தை ராசி சக்கரத்தில் பார்த்து, கிரக வலிமையை வர்க்க சக்கரங்களில் பார்த்து, இரண்டையும் இணைத்தோமானால், சனி நீச பலனை தருவதில் மிகுந்த வலிமையுடன் செயல்படும் என்று கொள்ள வேண்டும்.  இதுவே சனி ராசி சக்கரத்தில் மட்டும் மேஷத்தில் நீசமடைந்து, வர்க்க சக்கரங்களில் பல்வேறு கட்டங்களில் இருந்தால், சனியின் நீசபலனை வழக்கம்போல் ராசி சக்கரப்படி மட்டும் காண வேண்டும்.  வர்க்க சக்கரங்களில் கிரகங்களுக்குரிய வர்க்கபலம் காணும்போது, அந்த சக்கரங்களுக்கு உச்சம், நீசம் எனப்படும் ஸ்தானபலம் பார்ப்பது தேவையற்றது. 

ராசி சக்கரத்தில், மேஷத்தில் சனி பரணி 3 ஆம் பாதத்தில் இருக்கும் போது, நவாம்சத்தில், பரணி 3 ஆம் பாதத்துக்குரிய, துலாம் என்று அடையாளம் சொல்லக்கூடிய கட்டத்தில் இருக்கும்.  இதை பல ஜோதிடர்கள், " நவாம்சத்தில் சனி துலாத்தில் உச்சமடைந்ததால், அவர் உச்சபலனையும் ", தருவார் என்று குழப்பிவிடுகிறார்கள்.  பரணி 3 ஆம் பாதம் என்பது மேஷமா? துலாமா? என்றும், பரணி 3 ஆம் பாதத்திலிருக்கும் சனி நீசமா? உச்சமா? எது நிரந்தரம்? என்றும் சிந்திக்க வேண்டும்.  எனவே ஒரு கிரகத்தின் வர்க்கபலம் காணும்போது, வர்க்க சக்கரத்தில் ஸ்தானபலம் பார்ப்பது தவறு என்று உணரமுடிகிறது.  மொத்தத்தில் ராசி சக்கரத்தை போல, வர்க்க சக்கரங்களையும் பயன்படுத்தினால், பின் ராசி சக்கரமே தேவையில்லை என்றாகிவிடும்.  ராசி சக்கரத்தில் பார்க்கப்படும், ஸ்தானபலம், திக்பலம், வக்கிரம், அஸ்தங்கதம், கிரக சுபாசுப பார்வைகள் என்ற எதுவுமே வர்க்க சக்கரங்களுக்கு இல்லை. 

ஒவ்வொரு வரக்க சக்கரத்திற்கும், ஒவ்வொரு சிறப்பு பயன்பாடு உண்டு.  புத்ரபாக்கியம் பற்றி துல்லியமாக அறிய, சப்தமாம்சம் என்னும் வர்க்க சக்கரம் கணித்து, அதை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.  அதுபோல் தசாம்சம் கொண்டு தொழிலை பற்றியும், துவாதசாம்சம் கொண்டு பெற்றோரை பற்றியும் துல்லியமாக அறியலாம்.  இவ்வாறிருக்கும்போது, எந்த பலன் காண வேண்டுமென்றாலும், உடனே சம்பந்தப்பட்ட கிரகம் நவாம்சத்தில் இருக்கும் நிலை என்ன? என்று ஆராய்வதும் எவ்வளவு தவறு என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  நிறைவாக, வர்க்க சக்கரங்களின் கட்டங்களை ராசிகளின் பெயரால் குறிப்பிடுவது ஒரு அடையாளத்திற்கே.  எனவே ராசிக்குரிய கிரக பலங்களை அதில் காண்பது தவறு, என்றும், எல்லா பலன்களுக்கும், கிரக பலம் அறிய நவாமசத்தை மட்டுமே பயன்படுத்துவது தவறு என்றும் புரிந்துகொண்டு, ஜாதகர்களுக்கு, மிக சரியான துல்லிய பலன்களை, வர்க்க சக்கரங்களை கொண்டும் சொல்ல வேண்டும்.  பிருகத்பராசர ஹோரை முதற்கொண்டு பாரம்பரிய சாஸ்த்திர மூலனூல்கள் இதையே வலியுறுத்துகின்றன என்பதை புரிந்துகொள்வது நன்று.  வணக்கம்.                   

Thursday 18 February 2016

" ராசி சக்கரமும் பாவ சக்கரமும் ",



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " ராசி சக்கரமும் பாவ சக்கரமும் ", ......................  பாரம்பரிய முறையிலான பதிவு.  இரு சக்கரங்களை பற்றி ஜோதிட ஆர்வலர்களுக்கும், ஜோதிடம் பயில்பவர்களுக்கும், எடுத்து சொல்லும் வகையில், நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் பதிவு இது.

ராசி சக்கர சிறப்புகள் : ...................  ஆதி காலம் தொட்டு, முதன் முதலில் எழுதப்படும், ஜாதக குறிப்பில் இடம் பெறுவது ராசிக்கட்டம்.  முழுமையான ஜாதக கணிதம் கணித்து எழுதுபவர்களும், முதலில் ராசிக்கட்டத்தை கணித்துவிட்டு, பின்பு நவாம்சம், திரேக்காணம் போன்ற வர்க்க சக்கரங்களை கணிக்கிறனர்.  ராசி கட்டத்தில், ஸ்தான பலம், அஸ்தமனம், வக்கிரம் திக் பலம் ஆகியன கொண்டு கிரக பலங்கள் கணிக்கப்படுகிறன.  ராசி சக்கரம் என்பதால், ஒவ்வொரு கட்டமும் ராசிகளின் பெயரால் அழைக்கப்படுகிறது.  ஸ்தான பலம் முதன்மையானது என்பதால், லக்னத்திலிருந்து எண்ணிவரும் கட்டத்தை, ஸ்தானம், வீடு, இடம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.  [  உ....ம்..  3 ஆம் வீடு.  3 ஆம் ஸ்தானம். 3 ஆமிடம்  ]. ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் உரிமையுடைய கிரகத்துக்கு ஸ்தானாதிபதி என்று பெயர்.  அதுபோல் ராசிக்கு உரிமையுடைய கிரகத்துக்கு ராசியதிபதி என்று பெயர்.    மேற்கண்ட சக்கரங்களுக்கெல்லாம், நமது மூலனூல்களில் பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.  வர்க்க சக்கரங்களின் பயன்பாடுகள் பலவாறாக இருந்தாலும், ராசிக்கட்டத்திலுள்ள கிரக பலங்களை கணிக்கவும், அவைகளி நம் முன்னோர்கள், துணைக்கு வைத்துக்கொண்டனர்.

பாவ சக்கரத்தின் சிறப்பு : ..................  ராசி சக்கரத்திலிருந்து, பல அள்வீடுகளை வைத்து பல பாகங்களாக பிரித்து கணிக்கப்படுபவை வர்க்க சக்கரங்களாகும்.  அது போல், ராசிசக்கரத்திலுள்ள லக்னத்தை முதன்மையாக கொண்டு, பாகையை அளவீடாக கொண்டு பிரித்து கணிக்கப்படுவது பாவ சக்கரம்.  பாவ சக்கரம் கணிப்பது பற்றி பல நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.  ராசி கட்டத்திலுள்ள கிரக பலம் கணிக்க, வர்க்க சக்கரங்கள் பயன்படுவதுபோல், பாவ சக்கரமும் பயன்படுகிறது.  இதுவும் ராசி கட்டத்தின் ஒரு துணை சக்கரமே.  ஒவ்வொரு பாவ சக்கரத்திலும், லக்னம், லக்ன பாவத்தில் நடுபாகையில் இருக்கும்.  அதுபோல் நுடுவில் அமைந்திருக்கும் கிரகங்கள், அந்த பாவத்தில் வலிமையுடையன என்றும், அடுத்த பாவத்திற்கு அருகாமையில் அமையும் வகையில் அதன் பாகை அமைந்தால், அந்த பாவத்தில், அந்த கிரகம் பலவீனமடைகிறது என்றும் பொருள்.  இது ஒரு எளிமையான விதி முறை.    இப்படி கிரக வலிமை அறியும், துல்லிய கணித விதி முறைகளும் உள்ளன.  பாவ சக்கரத்தை கொண்டு பலன் சொல்வதற்கென்று சிறப்பு விதி முறைகளும் உள்ளன.    இது பாவ சக்கரம் என்பதால், கட்டங்கள் பாவம் என்று பெயரிடப்பட்டன.  [  உ...ம்... 3 ஆம் பாவம்.  ].  ராசி சக்கரத்திற்கு இருப்பது போல், பாவ சக்கரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு, ஸ்தானாதிபதி, ராசியதிபதி என்ற பெயர்கள் கிடையாது.  ஒரு பாவத்தை பாகைப்படி பிரிக்கும் போது, அதில் ராசி சக்கரத்தின் இரு ராசிகள் அமையும்.  எனவே ஒரு பாவ கட்டத்திற்கு, இரு கிரகங்கள் உரிமை கொண்டாட வேண்டிவரும்.  ஆகையால் பாவ கட்டங்களை, ராசிகள் பெயரால் குறிப்பிடுவதும், பாவ கட்டங்களில் இருக்கும் கிரகங்களை, , ஸ்தானாதிபதி, பாவாதிபதி, ராசியதிபதி என்ற பெயர்களால் குறிப்பிடுவதும் தவறாகும்.

பாவ சக்கரத்தில் உள்ள சில பின்னடைவுகள் : .......................   விவாஹதசவித பொருத்தம், கோசரபலன் ஆகியவை அறிய பாவ சக்கரம் உதவாது.  பாதசாரப்படி, நக்ஷத்திராதிபன் பலனும், ஸ்தானாதிபதி பலனும் அறிய பாவ சக்கரம் உதவாது.  சில ஜோதிடர்களால், " பாவகமாறுதல் ", என்ற பெயரில், தவறான பலன் சொல்லப்படுகிறது.  அதை பற்றியும் சற்று விரிவாக பார்க்கலாம்...............  .........  [ உ .... ம் ]  ராசி சக்கரத்தில் கடகலக்னத்தில் குரு உச்சம்.  இதுவே பாவ சக்கரத்தில், விரையத்தில் குரு இருப்பு என்று கொள்வோம்.  இப்படி மாறியிருப்பதே பாவகமாறுதல் எனப்படுகிறது.    இதை, குரு மிதுனத்தில் பகையாக இருக்கிறார் என்று சொல்லும் ஜோதிடர்கள் உண்டு.  இதை விட ஒரு படி மேலே போய், மிதுனத்தில் பகைபட்ட குருவுக்கான விரைய பலன் சொல்லிவிடுவர்.  கேட்டால் இதை பாவகமாறுதல் என்பர்.  இது முற்றிலும் தவறு.  பாவ சக்கரத்திற்கு, ராசிகளின் பெயரும் கிடையாது.  ஸ்தானபல கணிதமும் கிடையாது.  குருவின் இருப்பிடம் புரிய வேண்டுமே என்பதற்காக, ஒரு அடையாளத்திற்காக, மிதுனம் என்று சொல்லப்படுகிறதே தவிர, உண்மையில் அது மிதுனமல்ல.  மேற்கண்ட குரு விரைய பாவத்தில், பாகைப்படி நடுவில் இடம் பெற்றிருந்தால், குரு விரைய பாவ பலனை அதிகமாக தருவார் எனக்கொள்ள வேண்டும்.  அப்போது ராசி சக்கரத்தில் கவனித்தால், குரு, ராசி சந்தியில் அமைந்திருக்கலாம்.  இந்த சந்தி சந்தேகத்தை போக்கிக்கொள்ளவும் பாவ சக்கரம் பயன்படுகிறது.  இரு சக்கரங்களையும் இணைத்து பார்க்கும்போது, குரு விரையத்தில் உச்ச பலன் என்று கொள்ள வேண்டும்.  இதுவே குரு பாவ சக்கரத்தில், விரைய பாவத்தின் கடைசி பாகைகளில் அமைந்திருந்தால், விரையத்தில் குரு பலவீனம் எனக்கொண்டு, ராசி சக்கரப்படி, லக்ன குரு உச்சம் எனக்கொள்ள வேண்டும்.  எனவே ஒரு கிரகம் பாவ சக்கரத்தின் ஒரு பாவத்தில் இருந்தால், முதலில் அந்த கிரகம் இருக்கும் பாகையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன் பலாபலத்தை தீர்மானிக்க வேண்டும்.  இதுவே சரியான வழிமுறையும், எளியதுமாகும்.  நன்றி.