Saturday 7 March 2015

" விபத்துகளும் திரேக்காணமும், " Part 2



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். ,,,,,,,,,,,,,,,,,,, " விபத்துகளும் திரேக்காணமும், " ,,,,,,,,,,,,,,,,,,,,    பாரம்பரிய முறையிலான பதிவு.  பகுதி 2.  திரேக்காணம் காண்பது மிகவும் எளிது.  ராசிசக்கரத்தின் ஒரு ராசியில் 9 நக்ஷத்திர பாதங்கள் உள்ளன.  அவற்றை மூன்று பங்காக்கினால், பங்கு ஒன்றுக்கு மூன்று பாதங்கள் வரும்.  முதல் பங்கில் இருக்கக்கூடிய லக்னம் அல்லது கிரகஙகளை, திரேக்காண சக்கரத்தில், அந்த ராசியிலேயே குறிக்க வேண்டும்.   இரண்டாம் பங்கிலிருப்பவைகளை, அந்த ராசியிலிருந்து ஐந்தாவதாக எண்ண வரும் ராசியில் திரேக்காண சக்கரத்தில் குறிக்க வேண்டும்.  மூன்றாம் பங்கிலிருப்பவைகளை, அந்த ராசியிலிருந்து எண்ண வரும் ஒன்பதாம் ராசியில் திரேக்காண சக்கரத்தில் குறிக்க வேண்டும்.  இவ்வாறே ஒவ்வொரு ராசியிலிருப்பவைகளையும், பங்கிட்டு குறித்து முடித்தால் திரேக்காண சக்கரம் முழுவடிவம் பெற்றுவிடும்.  இந்த திரேக்காண சக்கரம் அமைப்பதில் இன்னொரு முறையும் உள்ளது.  அதை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தவதில்லை என்பதாலும், கணிணி மென்பொருட்களிலும் மேற்கண்ட முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதாலும், அந்த இன்னொரு முறை பற்றி அறிந்து கொள்வதை நாம் விட்டுவிடுவோம்.

நமது சாஸ்த்திரத்தில் இந்த திரேக்காண சககரத்தின் அடிப்படையில் உறுப்புகள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன.  காலபுருஷ தத்துவப்படி உறுப்புகளை கண்டு, ஜாதகருக்கு அதன் சம்பந்தமான பலன் சொல்வதை விட, திரேக்காண சக்கரத்தின் அடிப்படையில் உறுப்புகளை கண்டு, பலன் சொன்னால் அது துல்லியமாக அமையும்.  காரணம்.  காலபுருஷ தத்துவப்படி காணப்படும் உறுப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே அமையும்.  திரேக்காண சக்கரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக அமைவதால், இது துல்லியமானதாகும். 

ராசிசக்கரத்தில் லக்னத்தை எவ்வாறு முதலாம் வீடாக கருதுகிறோமோ அவ்வாறே, திரேக்காண சக்கரத்திலும் லக்னமே முதலாம் வீடாகும்.  ராசி சக்கரத்தில், முதல் மூன்று பாதங்களுக்குள் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட முதல் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகளும் முதலாம் திரேக்காணம் எனப்படும்.  ராசி சக்கரத்தில், 4, 5 ,6 ஆகிய பாதங்களில் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட இரண்டாம் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகள் இரண்டாம் திரேக்காணம் எனப்படும்.  ராசி சக்கரத்தில், 7, 8, 9 ஆம் பாதங்களில் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட,  மூன்றாம் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகள் மூன்றாம் திரேக்காணம் எனப்படும்.   இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்புகளை குறிக்கும்.  இந்த மூன்று திரேக்காணங்களுக்குரிய வீடுகளின் உறுப்புகளுக்குண்டான பட்டியலை ஸ்ரீவராஹிமிஹிரர் தனது ' பிருகத் ஜாதகம் ', நூலில் விரிவாக கொடுத்துள்ளார்.  இவை அந்த நூலில் 4 வது அத்தியாத்தில் 24 ஆவது ஸ்லோகமாக உள்ளது.  அது போல் சுருக்கமாக ' ஜாதக அலங்காரம் ', எடுத்து சொல்கிறது.  முதல் திரேக்காணம் தலை முதல் வாய் வரை அமைந்துள்ள உறுப்ப்களையும், இரண்டாம் திரேக்காணம்,  கழுத்து முதல் தொப்புள் சுழி வரை உள்ள உறுப்புகளையும், மூன்றாம் திரேக்காணம், அடிவயிறு முதல் பாதம் வரையிலுள்ள உறுப்ப்களையும் குறிக்கும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புக்கான ஸ்தானத்தில் இயற்கை பாப கிரகம் இருந்தால், கடுமையான விபத்தால் பாதிப்பு ஏற்படும்.  சூரியன் என்றால் காட்டுவிலங்குகளாலும், மேலிருந்து விழும் மரம் போன்ற உறுதியான பொருட்களாலும்,  சந்திரன் என்றால் நம்மோடு வாழ்ந்து வரும் விலங்குகளாலும், அவற்றின் கொம்புகளாலும், செவ்வாய் என்றால் தீயாலும், ஆயுதங்களாலும், புதன் என்றால் கீழே விழுவதாலும், சனி என்றால் கல்லில் அடிபடுவதாலும், [ அதாவது உறுதியான பொருளின் மீது மோதிக்கொள்வது ],  விபத்து நேரும்.  ராகு, கேதுக்களுக்கு பழமையான நூல்களில் இதை பற்றிய குறிப்புகள் இல்லை. எனது அனுபவத்தில் இவ்விரு கிரகங்கள் இருக்கும் உறுப்பு சேதமடைவதுடன், ஜாதகர்கள் மரணத்தில் எல்லைக்கே சென்றுவிடுகிறனர்.  குறிப்பிட்ட உறுப்பில் மாற்று உறுப்பு பொருத்தப்பட்டு, அதை கொண்டு வாழ்னாளை கழிக்கும் நிலை ஏற்படுகிறது. 

இந்த பதிவின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள கிரக நிலைப்படி, கடுமையான விபத்து நேரும் என்பது உறுதியாகிவிட்டால், விபத்தை உருவாக்கும் கிரகம், எத்தனையாவது திரேக்காணத்தில் எந்த உறுப்பு ஸ்தானத்தில் உள்ளது என்று அறிந்து, கிரகத்தின் விபத்து தன்மை உணர்ந்து, இவைகளை இணைத்து பலன் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விளைவுகள் நேரும் என்று உறுதியாக தெரிந்தால், அதற்குரிய பரிகார வழிபாடுகள் செய்து விபத்தின் கடுமையை பெருமளவு குறைத்துக்கொள்ள இயலும்.  சில ஜாதகங்கள் பரிகார வழிபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை.  இவ்வகை ஜாதகர்கள், தான் அனுபவிக்க வேண்டிய பாபகர்மாவை அனுபவித்தே ஆக வேண்டியிருக்கிறது.  பரிகார வழிபாடுகள் பற்றிய முழு விபரங்களுக்கு என் பிளாக் ஸ்பாட்டிலுள்ள கட்டுரையை படித்து பாருங்கள்.  முகவரி.  www.josyamramu.blogspot.com    எனவே ஜாதகர்கள், முதல் பகுதியில் சொல்லப்பட்ட கிரகனிலைகள் தங்களுடைய ஜாதகத்தில் அமைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தற்காத்துக்கொள்வது அவசியம்.  அதுபோல் ஜோதிடர்களாகிய நம்மை அணுகும் ஜாதகர்களுக்கு தேவையான அறிவுரைகளை துல்லியமாக எடுத்து சொல்லி அவர்களை பாதுகாப்பதும், தன்னம்பிக்கையூட்டுவதும் நம் கடமையாக கருத வேண்டும்.  அனைத்துக்கும் இறைவன் அருள் புரிந்து நம்மை காப்பானாக.  நன்றி.  வணக்கம்.  





.


Friday 6 March 2015

" விபத்துகளும் திரேக்காணமும், " Part 1.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். ,,,,,,,,,,,,,,,,,,, " விபத்துகளும் திரேக்காணமும், " ,,,,,,,,,,,,,,,,,,,,    பாரம்பரிய முறையிலான பதிவு.  பகுதி 1. ஒருவர் ஜாதகத்தில் கடுமையான விபத்து எப்போது நடக்கும்? எதனால் நடக்கும்? பாதிக்கப்படும் உறுப்பு, ஆகியவைகளை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளும்  வழிகாட்டுதலாக அமையும் பதிவு இது. 

ஒருவர் ஜாதகத்தில் அஷ்டமசனி, விரயசனி, ஜென்மசனி, அஷ்டமராகு, அஷ்டமகேது, அஷ்டம செவ்வாய், ஆகியவை கோசரப்படி நடப்பிலிருந்தால் அவர்கள் மட்டுமே சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து, விபத்து பற்றி அறிய ஜோதிடரை அணுக வேண்டும்.  மற்றோர் இதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.  கடுமையான விபத்து அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை.  ஒருவருக்கு கடுமையான விபத்து நடக்க வேண்டும் என்ற விதியை மேற்கண்ட கோசர கிரகங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை.  இவைகளுடன் அஷ்டமத்தோடு தொடர்புடைய கிரகங்களின் தசாபுக்திக்காலம் நடைமுறைக்கு வந்து  இணையும்போதுதான் கடுமையான விபத்து நடக்கிறது.  அதுவும் தசாபுக்தி கிரகங்கள் பாப கிரகங்களாகவோ, துர்ஸ்தான கிரகங்களாகவோ அமைந்துவிட்டால் விபத்தின் அளவீடு பெரிய இழப்பாக இருக்கும்.  இந்த தசாபுக்தி கிரகங்கள் சுபசம்பந்தம் பெற்றால் விபத்தின் தன்மையில் சற்று மாறுபாடு இருக்கும். 

இதில் கிரகங்களுக்குரிய உறுப்புகளை அடிப்படையாக கொண்டு, ஜோதிடர்கள் எச்சரிப்பதுண்டு.  உதாரனத்திற்கு, கோசரத்தில் அஷ்டம ராகு சுபர் பார்வை பெறாமல், பகை ஸ்தானத்திலிருக்க, ஜனன ஜாதகத்தில் சுபர் பார்வை பெறாமல் அஷ்டமத்தில் சனி நீசம் பெற்றிருக்க அதன் தசாபுக்தி நடைமுறைக்கு வந்தால் முழங்கால் மூட்டு, அல்லது இடுப்பு எலும்பில் கடுமையாக அடிபட்டு, அதன் ஜவ்வு பிசகி சில காலம் செயல்பட முடியாத அளவுக்கு கடுமையான விபத்தை ஏற்படுத்தி விடும்.  இங்கு சனியின் காரகத்துவம் எலும்பின் இணைப்புகள் என்பதும், ராகுவின் காரகத்துவம் உடல் தசை நார் எனப்படும் ஜவ்வு என்பதையும் கவனித்து பார்க்க வேண்டும்.  அதுபோல் காலபுருஷ தத்துவப்படி அஷ்டமஸ்தானம், இடுப்புக்கும், தொடைக்கும் இடைப்பட்ட பாகமாகும்.  எனவே இதையும் இணைத்து, சில ஜோதிடர்கள் உடலில் விபத்து ஏற்பட இருக்கும் பாகத்தை குறித்து சொல்வதுண்டு.  ஆனால் மேற்கண்ட கிரக அமைப்பு கொண்ட எல்லோருக்கும் இது மிக சரியாக ஒத்து வருவதில்லை.  விபத்துக்காலம் சரியாக இருந்தாலும், விபத்து ஏற்படும் உடல் பகுதி மாறிவிடுகிறது.  இதையும் துல்லியமாக சொல்லும் ஜோதிடர்கள் திரேக்காணத்தை பயன்படுத்துகிறனர் என்றால் அது மிகையில்லை.  உண்மை.

திரேக்காணம் என்பது, நவாம்சத்தை போல வர்கசக்கரங்களில் ஒன்று.  ராசிசக்கரத்தை துல்லியமாக பகுத்து காண்பதே வர்கசக்கரங்களாகும்.  நாம் துல்லியத்தை நோக்கி செல்ல, செல்ல, ஜாதக கணிதமும் மிக துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம்.  தற்காலத்தில் கணிணியின் மென்பொருட்கள், ஜாதகத்தை தவறில்லாமல், விரைவாக கணிப்பதோடு, முக்கியமான வர்க்கசக்கரங்களையும் கணித்து தருகிறது.  ஆனால், லக்னசந்தி, ராசிசந்தி, நக்ஷத்திரசந்தி, ஸ்திரிபுருஷ காலங்கள், மற்றும் கொடுக்கப்பட்ட பிறந்த நேரம் சரியான நேரமா? என்ற அம்சங்களையெல்லாம் மென்பொருட்கள் சோதித்து பார்ப்பதில்லை.  எனவே இவைகளில் பிழை நேர்ந்தால், துல்லியத்தை நோக்கி செல்லும் வர்க்கசக்கர கணிப்பிலும் பிழை ஏற்பட்டுவிடும்.  இப்படி பிழையான வர்க்கசக்கரங்களை வைத்து பலன் சொன்னால் அது முற்றிலும் பிழையாகி விடும் என்பதை ஜோதிடர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆகவே ஜாதக கணிதத்தோடு, வர்க்கசக்கர கணிதங்களையும், பிழையின்றி கணிக்க நாம் தெரிந்து வைத்துகொண்டிருப்பது நல்லது.  முற்காலத்தில் இவ்வகையான பலனை துல்லியமாக அறிய, ராசி, நவாம்ச சக்கரங்களோடு, திரேக்காணத்தையும் கணித்து எழுதி தருவதும் வழக்கமாக இருந்ததை சிந்தித்து பார்த்தால், திரேக்காணம் எவ்வளவு முக்கியமானது? என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.  எனவே திரேக்காணத்தை பற்றி ஆதிமுதல் அந்தம் வரையிலான முழுவிபரங்களை, நாம் பார்க்கப்பபோவதில்லை என்றாலும் நமக்கு தேவையான அளவு, விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.  .....................தொடரும்........................ .  

Monday 2 March 2015

தேவாரமும் ஜோதிடமும் ...............பகுதி 4



அவைடோருக்கு வணக்கம்.  கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு Astro Senthil Kumar அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,, ' தேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது.  கடைசி பகுதி.

ஏற்கனவே சொல்லப்பட்ட மூன்று தேவாரங்களிலிருந்து, கிடைக்கும் ஜோதிட செய்திகளை தொகுத்தோமானால், ஒரு முழுமையான ஜோதிட சாஸ்த்திர விதி ஒன்று கிடைக்கும்.  முதல் தேவாரப்படி கெட்ட கிரகங்களின் ஆளுமை பெற்ற நாட்கள்..................ஞாயிறு, திங்கள், [ சந்திரன் பாப கிரகமாக இருக்கும்போது மட்டும் ] செவ்வாய், புதன் [ புதன் கிரகம் பாப கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் போது மட்டும் ] சனி, மற்றும் இந்த நாட்களில் ஏற்படும் ராகுகாலம், யமகண்டம் ஆகியவை. பிரயாணத்திற்கு ஆகாத நாட்களாக கொள்ள வேண்டும்.  இரண்டாம் தேவாரம், இந்த நாட்களில் பிரயாணத்திற்கு ஆகாத நாட்களை சற்று துல்லியப்படுத்தி தருகிறது.  அதாவது மேற்கண்ட நாட்களோடு, திருவாதிரை, ஆயில்யம், மகம் விசாகம் கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் இணையும் நாட்களை பிரயாணத்திற்கு ஆகாத நாட்களாக கொள்ள வேண்டும்.  மூன்றாவதாக சொல்லப்பட்ட ஆறாம் தேவாரம், இந்த நாட்களை இன்னும் துல்லியப்படுத்துகிறது.  அதாவது, மேற்கண்ட நக்ஷத்திரங்கள் இணைந்த நாட்களில், பாலவம், கரசை, கௌலவம், நாகவம், பவம் ஆகிய கரணங்கள் கொண்ட நாட்களாக அமைந்துவிட்டால், அவசியம் பிரயாணம் கொள்ளவே கூடாது என்ற ஒரு விதியை தேவார வழிப்படி நாம் வகுத்துக்கொள்ளலாம். 
.  அதிலும், குறைந்த ஆயுள் கொண்டவர், பயணம் மேற்கொள்ளும் போது, மேற்கண்ட தினங்களில், கரசை, நாகவம் கரணமாக இருப்பின் மரணம் நிச்சய்ம் என்பதும் தெரிந்துகொள்கிறோம். 

இப்படிப்பட்ட சிக்கலான நாட்களில் பயணம் மேற்கொள்ளும் போது பஞ்சாக்ஷரத்தை துணையாக கொண்டால், மேற்கண்ட, கிரகங்கள், நக்ஷத்திரங்கள், கரணங்கள் ஒன்றும் செய்யாது.  எல்லாம் நல்லவைகளாக மாறிவிடும் என்று, தன் மேல் ஆணையிட்டு உறுதிபட கூறுகிறார் ஸ்ரீதிருஞானசம்பந்தர். 

எனக்கும் பஞ்சாக்ஷரம் தெரியும் என்பது போல் உச்சரித்தால் மட்டும் போதாது, இறையடியார்களாக ஆக வேண்டும் என்பதே இந்த தேவாரத்தின் கருப்பொருளாகும்.  அடியாராக ஆவதற்கான முதற்படியே நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதாகும்.  இதன்வழி நடந்து நாமும் ஸ்ரீசிவபெருமானின் அருட்கடாக்ஷத்திற்கு ஆளாக வேண்டும் என்பதும் என் வேண்டுகோள். 

இப்படிப்பட்ட தெய்வாம்சம் பொருந்திய நாயன்மார்களின் அருள்மொழிகளை  சொல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கி தந்த அருமை நண்பர் திரு Astro Senthil Kumar அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த சொற்பொழிவில் தவறுகள் இருப்பின் அது என்னை சேரும்.  நல்ல கருத்துக்கள் இருப்பின் அவை என் குருனாதர் திருவடிகளை சேரும்.  நல்ல தமிழ் பேச அருளாசி வழங்கிய லண்டன் சிவாச்சாரியார் பெருமகனார் திரு Ramanaathan paramaeswara அவர்கள் திருவடிகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களை தூவி காணிக்கையாக்குகிறேன்.  கிட்டதட்ட தற்போது 10, 000 பேர் காணவும், கேட்கவும், நல்லதொரு வாய்ப்பினை உருவாக்கி தந்த பெருந்துறை தாய் தொலைகாட்சி நிறுவனத்தாருக்கும்., நிகழ்ச்சி விளம்பரதாரர் குளோபல் நிறுவனத்தாருக்கும், இங்கே எதிரில் அமர்ந்து பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கு என் வணக்கங்களையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.  நன்றி.  வணக்கம். 

இந்த தொகுப்புக்கு ஆதரவு தந்து தங்கள் கருத்துரையால் விமர்சித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. 



தேவாரமும் ஜோதிடமும் ...............பகுதி 3



அன்புடையோருக்கு வணக்கம்.  கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு Astro Senthil Kumar அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,, ' தேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது.  பகுதி 3. 

தற்காலத்தில் பிரயாணம் வெகு சுலபமாகிவிட்டது.  அக்காலத்தில் பல இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது.  முக்கியமாக பாதைகள் காடுகள் நிறைந்ததாக இருந்தது.  எனவே விலங்குகள் தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.  இந்த தேவாரத்தில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது.  முதலில் தேவாரத்தை பார்ப்போம். 

வாள்வரி அதனது ஆடை வரிகோவணத்தர்
  மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்து, என்
  உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை, கேழல்
  கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல
  அடியார் அவர்க்கு மிகவே.

இதன் பொருளாவது..........................  வனாந்திரத்தில் அலையும் விலங்குகளான,, புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி, சிங்கம், ஆகியவை கொடிய மிருகங்களாக இருந்தாலும், அடியார்களை அவை ஒன்றும் செய்யாத. அவைகள் நல்லவைகளாக மாறிவிடும்.  என்பதாகும்.  இங்கே நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  விலங்குகள் அடியார்களை ஒன்றும் செய்யாது என்பதும், அடியார்கள் அவைகளுக்கெல்லாம் பயந்தவர்களல்ல என்பதும் நாம் நன்றாக அறிந்ததே.  இதற்கு சான்று ஒன்று உள்ளது. 

ஸ்ரீஅப்பர்பெருமானை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து, கடலில் தூக்கி வீசிவிட்டனர்.  கடல்விலங்குகளான சுறா, திமிங்கிலம், போன்ற கொடிய விலங்குகள் ஸ்ரீஅப்பர்பெருமானை ஒன்றும் செய்யவில்லை.  இதற்கு காரணம் என்ன? என்பதை அவர் தனது தேவாரத்தில் எடுத்துரைக்கிறார்.  .................." கற்றூணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சிடினும், நற்றுணையாவது நமசிவாயவே.................? என்பது அந்த தேவாரம்.  இதிலிருந்து ஸ்ரீஅப்பரை போல நமசிவாய மந்திரத்தை துணையாக கொண்ட ஸ்ரீதிருஞானசம்பந்தர், காட்டுவிலங்குகளுக்கு அஞ்சுபவரா என்ன?  மேலும் விலங்குகள், தனக்கே உரித்தான கொடிய தன்மையை மாற்றிக்கொண்டு நல்லவைகளாகி விடாது.  எனவே ஸ்ரீதிருஞானசம்பந்தர் மறைமுகமாக வேறு எதையோ குறிப்பிடுகிறார் என்பது நன்றாக விளங்குகிறது.  மேலும் இந்த தேவாரம் ஸ்ரீஅப்பருக்கு விடையளிக்கும் முகமாக பாடப்பட்டதால், நாள் பார்க்கும் விஷயத்தோடு தொடர்புடையது என்றும் புரிகிறது. 

பஞ்சாங்கம் என்பது பஞ்ச அங்கம் எனப்படும், ஐந்து உறுப்புகளை கொண்டது.  1.  நாள்.  2.  நக்ஷத்திரம்.  3.  திதி.  4.  யோகம்.  3.  கரணம்  ஆகியவை.  இதில் நாம் ஏற்கனவே நாள், நக்ஷத்திரம், ஆகியவை தேவாரத்துடன் ஒப்பிட்டு பார்த்தாகிவிட்டது.  மீதம் இருப்பது திதி, யோகம், கரணம் ஆகியவை.  இதில் யோகம் பிரயாண நாள் பார்க்க பயன்படுவதில்லை.  மீதம் உள்ள திதி, கரணத்தில் தேவாரம் குறிப்பிடும் விலங்குகள் கரணத்தோடு தொடர்புடையவையாகவே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.  மேலும் இந்த தேவாரம் 'இரட்டுற மொழிதல்' என்னும் இலக்கிய வகையை சார்ந்தது.  அதாவது ஒரு சொல் இருபொருளை தரும் வகையாகும்.  இவ்வகையில் இந்த தேவாரத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் பெயர்களை கரணங்களோடு இணைத்து பார்க்கலாம். 

கோளரி உழுவை = புலி = பாலவ கரணம்
கொலையானை = கரசை கரணம்.
கேழல் = பன்றி = கௌலவ கரணம்.
கொடு நாகம் = நாகவ கரணம்.
ஆளரி = சிங்கம் = பவ கரணம்.

வான்வெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட இடைவெளி தூரத்தை ' திதி ' என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர்.  இன்னும் சற்று துல்லியமான அளவீடு தேவைப்பட்டதால் அந்த அளவை ' கரணம் ' என்று பெயரிட்டு அழைத்தனர்.  கரணம் என்பது திதியில் பாதியாகும்.  திதிக்களுக்கு எப்படி பலன் வகுக்கப்பட்டதோ, அது போல் கரணங்களுக்கும் பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன.   பிரயாணத்திற்கு ஆகாத இந்த கரணங்கள் எல்லாம், அடியார்களுக்காக தன் கொடிய தன்மையை மாற்றிக்கொள்ளும் என்பது ஸ்ரீதிருஞானசம்பந்தரின் சத்திய வாக்கு.  ஆயுள் குறைவாக உள்ள ஒருவர், மேற்கண்ட கரணங்கள் கொண்ட நாட்களில் பயணம் புறப்பட்டால் மரணம் நிகழவும் நிறைய வாய்ப்புகள் உண்டு என்று இந்த தேவாரத்தின் மூலம் அறிகிறோம்.  ' கரணம் தப்பினால் மரணம் ', என்று சொல்லப்படும் பொன்மொழி கூட இதன் அடிப்படையில் சொல்லப்படுவதே ஆகும்.  இப்படி மரணத்தை தர வல்ல கரணங்களை, கொலையானை, என்றும் , கொடுநாகம் என்றும் ஸ்ரீதிருஞானசம்பந்தர் வர்ணிக்கிறார் என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.  இதுவரை இந்த தொடரில் நாம் பார்த்த மூன்று தேவாரங்களிலும் உள்ள ஜோதிட செய்திகளை அடுத்த பதிவில் ஒன்றாக இணைத்து தொகுத்து பார்க்கலாம்.  இன்னும் இந்த தொடர் கட்டுரை சம்பந்தமாக சில செய்திகள் உள்ளதால் அவைகளை அடுத்த பதிவில் காண்போம்.  நன்றி ............................தொடரும்.......................