Friday 7 August 2015

நீண்ட ஆயுளா? அல்லது நிம்மதியான வாழ்க்கையா?



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  நீண்ட ஆயுளா? அல்லது நிம்மதியான வாழ்க்கையா? என்பதை பற்றிய பதிவு இது.  ..................  பாரம்பரிய முறை...........  பொதுவாக நாம் வாழ்க்கையில் சந்திக்கும் பல பேருக்கு பஞ்சமில்லாமல் ஆயுள் இருக்கும்.  ஆனால் வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க முடியாமல், கடன், நோய், ஏழ்மை, நல்ல குடும்பம் அமையாமல் இருத்தல், போன்றவைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்.  அது போல், நல்ல நிம்மதியான குடும்பம் அமைந்திருக்கும், தேவையான வசதிகளும் இருக்கும்.  நோயின்றி, கடனின்றி இருப்பார்.  ஆனால் அவர் வாழ்க்கை அற்ப ஆயுளில் முடிந்திருக்கும்.  ஏனிப்படி ஏறுக்குமாறான வாழ்க்கை?  விதிவிலக்காக சிலர் மட்டும் நீளாயுள், நிறைசெல்வத்துடன் வ்வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  வாழ்க்கையில் ஏனிந்த பேதங்கள்? என்று நம்மில் பலர் நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா? என்றும் ஏங்கிக்கொண்டு இருக்கிறோம்.  இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா? என்பதை ஜோதிட வழியாக சிந்தித்துப்ப் பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.

இந்த பதிவில் எட்டாமிடம், மற்றும் இரண்டாமிடம் குறித்து சில கிரக அமைப்புகள் சொல்லப்பட்டுள்ளது.  இதை அப்படியே உங்கள் ஜாதகத்தோடு பொருத்திப்பார்க்க வேண்டாம்.  காரணத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கிரக அமைப்புகள் சொல்ல்ப்பட்டுள்ளது.  ஜோதிடம் தெரிந்தவர்கள் மட்டுமே இவற்றை பொருத்திப்பார்க்க முடியும்.  எட்டாமிடம் என்றவுடன், உங்கள்ஜாதகத்தில் லக்னம் இருக்குமிடத்திலிருந்து எண்ணத் தொடங்குவீர்கள்.  ஜாதகத்தில் ராசியும், காரகன் இருக்குமிடமும் கூட முதல் ஸ்தானமாக அமைவதுண்டு.  இதை ஒரு ஜோதிடரால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

எட்டாமிடத்தில் சுபாவ அசுப கிரகங்களான, சூரியன், அசுபசந்திரன், அசுபபுதன், சனி, ஆகியோர் இருப்பின் ஆயுள் கூடும்.  அதோடு கடன், நிரந்தர நோய், மனஉளைச்சல் ஆகியனவும் சேர்ந்துகொள்ளும்.  ஆயுள் முழுதும் இவை இருக்கும்.  இந்த அசுபர் பார்வையால், இரண்டாமிடமும் பாதிக்கப்படுவதால், குடும்ப பொறுப்பின்மை, குடும்ப நிர்வாகத்திற்கு தேவையான நிதி கிடைக்காமல் போதல், பேசும் பேச்சில் கோபம், பொறுப்பின்மை, எரிச்சல் சிலருக்கு போதைப்பழக்கம், ஆகியன இருக்கும்.  இந்த கிரக அமைப்பை, அப்படியே இரண்டு, எட்டு, ஸ்தானங்களுக்கிடையே மாற்றியும் வைத்துக்கொள்ளலாம்.  இது பொதுவான பலன் என்றாலும், பெரும்பான்மையானது.  இது இறைவன் விதித்த விதி.  குடும்பத்தை கவனிக்காமல், தீய பழக்கங்களுக்கு ஆளாகி, கடன், நோய்வாப்பட்டு உழல்பவர்கள், நீண்ட காலம் வாழ்ந்து, மேலே சொல்லப்பட்ட கொடுமையான பலன்களை குடும்பத்துக்கு தந்துகொண்டே இருப்பார்கள். 

எட்டாமிடத்தில் சுபாவ சுப கிரகங்களான சுபசந்திரன், சுபபுதன், குரு, சுக்கிரன் ஆகியோர் இருந்தால், ஆயுள் குறைந்து போகும்.  ஆனால், கடனோ, நீண்ட கால நோயோ, மனஉளைச்சலோ எதுவும் இவர்களுக்கு தொல்லை தராது.  அத்துடன், நல்ல குடும்பம், அதற்கு தேவையான் நிதிப்புழக்கம், நல்ல இனிமையான் பொறுமையான் சொல் மற்றும் நடத்தை, ஆகியன இவரகளிடம் இருக்கும்.  இப்படிப்பட்டவர்களின் ஆயுள் குறுகிய காலத்தில் முடியும்போது, நிச்சயமாக நம்மால் வருத்தப்படாமல் இருக்க முடியாது.  இந்த கிரக அமைப்பை, அப்படியே இரண்டு, எட்டு, ஸ்தானங்களுக்கிடையே மாற்றியும் வைத்துக்கொள்ளலாம்.  இதுவும் பொதுவான பலன் என்றாலும், பெரும்பான்மையானது.  இதுவும் இறைவன் விதித்த விதியே ஆகும்.  நல்லவர்கள் வாழ்க்கை விரைவில் முடிந்து போவதும், தீயவர்கள் வாழ்க்கை நெடுனாள் நீடித்திருப்பதும், மேற்கண்ட ஜோதிடவியலின் விதி அமைப்பின் இயல்பு.  மனசாட்சி உள்ள யாரும் இந்த வாழ்க்கை அமைப்பை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  என்ன செய்வது, வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

ஜாதகரகளுக்கு, ஆறுதலாக என்னால் அடிக்கடி சொல்லப்படும் வாசகம்தான் இது.  " இறைவன் கருணையே வடிவானவன், ஒரு வழியை அடைத்தால், இன்னொரு வழியை திறந்துவைப்பான் ".  அவனை வணங்கி அவனருளால், அந்த வழி எதுவென்று புரிந்துகொண்டோமானால், நம் வாழ்க்கையை நம்மால் கூடிய மட்டும் சீர் படுத்திக்கொள்ள முடியும்.  அந்த இன்னொரு வழி, திருமணத்திற்கு முன், தகுந்த வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதாகும்.  திருமணத்திற்கு பின் இறைவனை சரணடைந்து, தகுந்த பரிகார வழிபாடுகளை செய்துகொள்வதாகும்.  இவ்விரு தீர்வுகள் சற்று ஆச்சரியத்தை தந்தாலும் உண்மை இதுதான்.  இவைகளின் அருமையை பற்றி விரிவாகஃ அடுத்த பதிவில் சிந்திப்போம்.  நன்றி வணக்கம்.           

No comments:

Post a Comment