Wednesday 26 August 2015

" செய்வினை தோஷம் ", 4 ஆவது கடைசி பகுதி.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " செய்வினை தோஷம் ", 4 ஆவது கடைசி பகுதி.  சென்ற பகுதியில் தெய்வீக பரிகார வழிபாட்டு முறைபடி நிவாரணம் அடையும் முறையை பார்த்தோம்.  ஒரு சிலருக்கு தெய்வ பரிகார வழிபாடுகளும் பலிக்காமல் போகிறது.  எனவே அவர்கள் நிவாரணத்திற்காக மாந்திரிக வழிமுறையை நாட வேண்டியிருக்கிறது. 

..........................  [[ மாந்திரீக வழிமுறை நிவாரணம்  ]] .....................  முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்றொரு பழமொழி உள்ளது.  அதுபோல், மாந்திரீகத்தால் உருவாக்கப்பட்ட துன்பத்தை, மாந்திரீகம் கொண்டே தீர்க்கவேண்டும்.  தோஷ துன்பத்தை உருவாக்கிய மாந்திரீகரும், அதை விலக்கும் மாந்திரீகரும், ஒரே வழிமுறையையே கையாளுகின்றனர்.  இருவரும் சிறுதெய்வ வழிபாடு செய்வர்.  அந்த தெய்வத்தின் அடிமைகளாக இருக்கும், குட்டிசாத்தான், குறளி, காத்து, கருப்பு போன்ற சக்திகளை வசப்படுத்திக்கொள்வர்.  இந்த சக்திகளை வைத்தே துன்பம் உருவாக்கப்படுகிறது.  அதுபோல் விலக்கப்படுகிறது.  இதில் உடனடி நிவாரணமும் கிடைக்கிறது.  ஆனால் நாம் அணுகும் மாந்திரீக ஜோதிடர், மனித நேயம் மிக்கவராக இருக்க வேண்டும்.  அதுபோல் போலியாக இல்லாமல், மாந்திரீகத்தை முறையாக கற்றுணர்ந்த, உண்மையானவராகவும் இருக்க வேண்டும்.

தெய்வீக பரிகார வழிபாட்டுக்கும், மாந்திரீக நிவாரண வழிமுறைக்கும் பெரும் வித்தியாசம் ஒன்று உள்ளது.  தெய்வீக பரிகார வழிபாடில், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறன.  எனவே, செய்வினை துன்பம் நீக்கப்படுகிறது.  ஆனால் மாந்திரீகத்தில் விலக்கப்படுகிறது.  அதாவது தள்ளி வைக்கப்படுகிறது.  இந்த வழிமுறையில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை.  பாவங்களை மன்னிப்பது தெய்வீக சக்திக்கு மட்டுமே உண்டு.  மாந்திரீக வழிமுறையில் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் பெற்றாலும், அவர் அனுபவிக்க வேண்டிய பாவங்கள் நிலுவையிலிருக்கும்.  மீண்டும் ஜாதகப்படி, துன்பங்கள் அனுபவிக்க வேண்டிய காலம் வரும் போது, நிலுவையிலுள்ளவைகளும் இணைந்துகொள்ளும்.  மீண்டும் துன்பம் அனுபவிக்கும் காலம், செய்வினை தோஷ காலமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அது வேறு வகையான தீயதசாபுக்தியாலும் வரலாம்.

பாக்கியஸ்தானம் முற்றிலுமாக பாபகிரகங்களின் ஆதிக்கத்தில் இருந்தால், அவருடைய எந்த வித தெய்வீக பரிகார வழிபாடுகளும் பலன் தராது.  இத்தகையோர்கள், வந்த வினையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவன் விதித்த விதியாகும். அனுபவித்தே பாவங்களை தீர்த்துக்கொள்வது ஒரு வகை.  தோஷத்தின் துன்பம் தாங்கமுடியாமல், மாந்திரீகத்தால், பாவங்களை தள்ளி வைத்துக்கொள்ளவது இன்னொரு வகை.  ஒரு சிலருக்கு, பாக்கியஸ்தானத்தில் சுபம், அசுபம் என்னும் இருவகை கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.  இத்தகையோர்கள், பாக்கிய ஸ்தான பாபகிரக சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.  மற்ற கிரக தசாபுக்திகளில், தெய்வீக பரிகார வழிபாடின் மூலம் தோஷ நிவர்த்தி அடையலாம்.  பாக்கியஸ்தானம் முற்றிலும் சுபமாக இருக்கும் அமைப்பு கொண்டவரகள் கொடுத்து வைத்தவரகள்.  தெய்வம் என்னேரமும் அவர்களுக்கு அருள் வழங்க காத்திருக்கும்.  இந்த ஜோதிட விதிமுறை கோசரத்திற்கும் பொருந்தும்.  பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு, கேது இருக்கும்போது, ஜாதகரின் கோசர சம்பந்தமான தெய்வீக பரிகார வழிபாடுகள் பலன் தராது.  மாறாக, பாக்கிய ஸ்தானம் காலியாக இருந்தாலும், சுப கிரகங்கள் இருந்தாலும் தெய்வீக பரிகார வழிபாடுகள் உடனே பலன் தரும்.

எனவே செய்வினை தோஷத்தால் பாதிக்கப்பட்டவரகளுக்கு, என்னுடைய தனிப்பட்ட ஆலோசனை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  இதை ஏற்றுக்கொள்வதும், பின்பு தவறாமல் நடைமுறைபடுத்துவதும், அவரவர் விருப்பம்.  செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் ஜாதக அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்று ஓரளவு வாசகர்களுக்கு புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.  துல்லியமாக அறிய ஜோதிடரை அணுகுங்கள்.  பாதிப்பு இருப்பதாக தெரிந்தால், தெய்வீக பரிகார வழிபாடுகளை பற்றி அறிந்துகொள்வதோடு, அவைகள் பலிக்குமா? என்ற கேள்விக்கும் ஜோதிடரிடம் விடை கேளுங்கள்.  பலிக்கும் என்றால் மகிழ்ச்சி.  தற்காலிகமாக பலிக்காது என்றால், அவசரத்திற்கு ஒரு நல்ல மனிதநேயமிக்க மாந்திரீக ஜோதிடரை அணுகி, நிவாரணம் பெறுங்கள்.  அதனால், நமது பாவங்கள் தள்ளிவைக்கப்படுகிறன, என்பதை உணர்ந்து, தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிக்கும் சமயம் வாய்க்கும்போது, மறக்காமல், தோஷத்திற்குரிய வழிபாடுகளை நிறைவேற்றிவிடுங்கள்.  தோஷ காலம் முடிந்துவிட்டது என்றோ, நிவாரணம் கிடைத்துவிட்டது என்றோ அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.  பாக்கிய ஸ்தானம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, எப்போதுமே தெய்வீக வழிபாடுகள் பலன் தராது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு, நிச்சயம் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் உதவும்.  இத்தகையோர்கள், மாந்திரீக வழிமுறையை அணுகி, தீர்வு காண்பதோடு, தெய்வத்தை மனமுருகி, வணங்கும் ஈடுபாட்டை பொறுத்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.  " எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.................  ", என்ற தாயுமானஸ்வாமிகளின் உள்ளகிடக்கைக்கேற்ப இந்த தொடர் பதிவுகள் இடப்பட்டுள்ளன.  இறைவன் எல்லோருக்கும் துன்பத்தை நீக்கி இன்பத்தை அருள்வானாக.  நன்றி வணக்கம்.           

No comments:

Post a Comment