Tuesday 26 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ............. பகுதி எண் 04. ........ எது முதலில் நடக்கும்?



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ", .............  பகுதி எண் 04. ........  எது முதலில் நடக்கும்?  .......  பாரம்பரிய முறையிலான பதிவு.  ...............  கிரகங்களின் இரட்டை வேஷங்களில் இது சற்று வித்தியாசமானது.  ஒரே நேரத்தில், இரு ஸ்தானங்களுக்கு அதிபதியாகி, பலவிதமான பலனை தரும் நிலையில் இருக்கும் ஒரு கிரகம், எந்த ஸ்தானாதிபத்யப்படி, எந்த பலனை முதலில் கொடுக்கும் என்பதை, உதாரணத்துடன் பார்க்கும் பதிவாக இது அமைகிறது.

சந்திர சூரியர்களுக்கு, ஒரு ஸ்தானம் மட்டுமே சொந்த ஸ்தானமாக அமைந்துள்ளது.  ராகு, கேதுக்களுக்கு சொந்த ஸ்தானங்களே இல்லை.  செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோருக்கு தலா இரண்டிரண்டு ஸ்தானங்கள் சொந்தமாக அமைகிறன.  வ்வாறு அமைந்துள்ள சில ராசிக்கட்டங்களை இப்போது பார்க்க இருக்கிறோம்.  ................  மகர லக்னம்,  லக்னத்தில் சுக்கிரன்.  மகரத்திற்கு சுக்கிரன் யோகாதிபதி.  அதாவது 5, 10 ஆகிய ஸ்தானங்களுக்கு அதிபதி.  வேறு அவயோகம் தரும் ஆதிபத்யங்கள் எதுவும் சுக்கிரனுக்கு இல்லை.  விரைவில் சுக்கிரதசை நடப்புக்கு வர இருக்கிறது.  அப்போது என்ன நடக்கும்? என்பதை சுருக்கமாக பொதுவாக பார்க்கலாம்.  1.  புதிதாக தொழில் தொடங்கலாம்.  தொழில்ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  2.  மேற்கல்வி பயில தொடங்கலாம்.  வித்யாஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  3.  திருமணம் செய்துகொள்ளலாம்.  களத்திரஸ்தானத்திற்கு சுக்கிரனின் சுப பார்வை.  4.  புத்ரபாக்கியம் உண்டாகும்.  புத்ரஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பு.  அனைத்தும் நற்பலன்களே.  சுக்கிரதிசையில் சுக்கிரபுக்தி 3 வருஷம் 4 மாதங்கள் நடப்பிலிருக்கும்.  இக்காலகட்டத்திற்குள், மேற்கண்ட பலன்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும்.  ....................  இப்போது ராசிக்கட்டதாரரின் கேள்வி என்னவென்றால்.........  எது முதலில் நடக்கும்?  அடுத்து எது நடக்கும்?  என் வாழ்க்கையை நான் எப்படி திட்டமிட்டுக்கொள்வது?  என் தலைவிதி எதை முதலில் ஒப்புக்கொள்ளும்படி அமைந்துள்ளது?  இவையெல்லாம் நல்ல யோகபலனாக இருப்பதால், எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறேன்.  அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

தொழில் தொடங்கினால், கல்வி கற்பதில் சிக்கல் எழலாம்.  கல்வி முதலில் கற்க தொடங்கினால், திருமணம் தள்ளிப்போய்விடும்.  திருமணம் செய்துகொண்டபின் குடும்ப தலைவராகி, அதன் பின் மாணவன் பொறுப்பேற்றுக்கொள்வது நல்லதல்ல.  இப்படிப்பட்ட பலவித பலன்கள் தந்து, இருஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரன், சில ஜோதிடர்களை நன்றாகவே குழப்பிவிட்டுவிடுவார்.  இக்குழப்பமும் நீங்க, நம் ஜோதிட சாஸ்த்திர ஞானிகள், தெளிவான பாதையமைத்து தந்திருக்கிறார்கள்.

இரண்டு ஸ்தானங்களை சொந்தமாக பெற்றிருக்கும் கிரகங்களுக்கு, அவைகளில் ஒரு ஸ்தானம் நிச்சயம் மூலத்திரிகோணமாக இருக்கும்.  ஆட்சி பலத்துடன், மூலத்திரிகோண பலமும் அந்த ஸ்தானம் அடைவதால், அது இன்னொரு ஸ்தானத்தை விட வலுவுள்ளதாக இருக்கும்.  எனவே இந்த ஸ்தானத்திற்குரிய காரகத்துவங்களையே, சம்பந்தப்பட்ட கிரகம் முதலில் கொடுக்கும்.  சுக்கிரனுக்கு, ரிஷபம் ஆட்சிவீடு.  துலாமோ ஆட்சி மற்றும் மூலத்திரிகோணவீடு.  எனவே சுக்கிரன் முதலில் துலாத்திற்குரிய காரகத்துவ பலனை தருவார்.  அதன்பின் ரிஷபம் என்னும் ஆட்சிவீட்டுக்குரிய பலனை தருவார்.  அதன்பின் தன் பார்வையால் தரக்கூடிய பலனை தருவார்.  இப்போது அதை வரிசைப்படுத்தலாம்.  ராசிக்கட்டதாரர் முதலில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும்.  அதன்பின் மேற்கல்வி பயிலலாம்.  இவ்விரணடையும் ஒரு சேர ராசிக்கட்டதாரர் செய்ய இயலாது.  ஆகையால் கல்வி பயில மாலை நேரக்கல்லூரி அமையுமா? அல்லது அஞ்சல் வழிக்கல்வி அமையுமா? என்று ஆராய வேண்டும்.  கல்லூரி யோகத்தை தரக்கூடிய குரு கெட்டுப்போயுள்ளார்.  விரயம், திரிதியம் என்ற இரு அசுப ஆதிபத்யங்களை பெற்று, சஷ்டமத்தில் பகையாகி, வக்கிரமடைந்துள்ளார்.  மேலும் கேதுவுடன் இணைந்து, சூரியனின் பாப பார்வையும் பெற்கிறார்.  எனவே மாலை நேர கல்லூரி அமைவது கடினம்.  அஞ்சல் வழிக்கல்வி தரக்கூடிய புதன் 6 என்ற அசுபஸ்தானத்திற்கும், 9 என்ற சுபஸ்தானத்திற்கும் அதிபதியாகியுள்ளார்.  செவ்வாயின் சுபாவ அசுப பார்வை கிடைக்கிறது.  புதனின்    இவ்விரு ஸ்தானாதிபத்யங்களில் எது முதலில் முனைப்பாக செயல்படும்?  இதற்கும் மூலத்திரிகோணமே தீர்வு தரும்.  புதனுக்கு கன்னி மூலத்திரிகோணம் என்பதால், முதலில் 9 என்ற சுப ஸ்தானாதிபத்யம் செயல்படும்.  எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு த்டையில்லை.  புதன் லாபஸ்தானத்தில் சமம்.  எனவே பாக்கிய ஸ்தானத்தின் துணைகொண்டு, புதனின் சஷ்டமாதிபத்ய பலனை, தெய்வீக பரிகார வழிபாடு செய்து குறைத்துக்கொள்ள முடியும்.  எனவே அஞ்சல் வழிக்கல்வி கை கொடுக்கும்.  இந்த கல்வி 3 வருஷத்திற்குள் முடிந்துவிட வேண்டும்.  காரணம் சுக்கிரபுக்தி முடிவதற்குள் திருமணம் நடந்து, புத்ரபாக்கியமும் கிடைத்தாக வேண்டும்.  கிடைக்கும்.  இதில் சந்தேகமில்லை.  இதுவே, இறைவன் ராசிக்கட்டதாரருக்கு எழுதிய தலைவிதியாக அமைகிறது.

சுக்கிரனை போன்ற நிலையில் லக்னம் அமையும் போது மற்ற கிரகங்களும் இதே முறையில்தான் பலனை தருகிறன.  இரு சொந்த ஸ்தானங்களில் ஒன்று அசுபஸ்தானமாக அமைந்து, அது மூலத்திரிகோணமாகவும் இருந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு, அசுபபலன் முதலில் நடக்கும்.  இப்படி ஸ்தானங்களுக்கு ஏற்றவாறு வேஷங்களை மாற்றிக்கொள்ளும் கிரகங்களை பற்றி நாம் இன்னும் சிந்திக்க வேண்டியுள்ளது.  எனவே மேலும் தொடர்வோம்.  நன்றி வணக்கம்.  .................  தொடரும்.  ............................ 
            

No comments:

Post a Comment