Sunday 3 April 2016

" ஜோதிடம் மெய். [ சில ] ஜோதிடர்கள் பொய் ", ..



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " ஜோதிடம் மெய்.  [ சில ] ஜோதிடர்கள் பொய் ", ......................  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஒரு சில ஜோதிடர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளால், நம் ஜோதிட சாஸ்த்திரமே பொய் என தூற்றப்படுகிறது.  நடைமுறையில் இது எவ்வாறு நடக்கிறது? என்பதை விளக்கும் பதிவு இது.  

60 நாழிகைகள் [ 24 மணி நேரம் ] கொண்ட ஒரு நாள், பகற்பொழுது, இரவுப்பொழுது என பிரிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு நாளின் பகற்பொழுதும், சூரிய உதயத்திலிருந்து தொடங்குகிறது.  இரவுப்பொழுது சூரிய அஸ்தமனத்திலிருந்து தொடங்குகிறது.  பகற்பொழுது " அகஸ் ", எனப்படுகிறது.  இதன் சராசரி நேரம் 30 நாழிகைகள். [ 12 மணி நேரம்
.  இதை 8 பங்காக பிரித்தால் 3 நாழி. 45 வினாழி. [ 1 மணி. 30 நிமி. ] கொண்ட ஒரு மூஹூர்த்த நேரம் கிடைக்கும்.   இந்த அளவையே யமகண்ட, ராகு, குளிகை ஆகிய காலங்களுக்கான அளவாக வைத்திருக்கிறார்கள்.  இது ஒரு பொதுவான கணிப்பு.  அகஸானது, நாளுக்கு நாள், இடத்திற்கு இடம் மாறுதலடையக்கூடியது.  எனவே அகஸை தினசரி கணித்து, அன்றாட யமகண்ட, ராகு, குளிகை கால அளவுகளை காண வேண்டும் என்பது சாஸ்த்திர சம்பிரதாயம்.  இந்த தினசரி கணிப்பே துல்லியமானதாகும்.  இவ்வாறே தினசரி கிரக ஹோரைகள், முக்குண வேளை, கௌரி பஞ்சாங்கம், போன்ற கால அளவீடுகளை கணித்தல் முறை.  தினசரி அகஸின் கால அளவு பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு நாளும் குறிப்பிடப்பட்டிருக்கும்.  சூரிய உதய அஸ்தமன நேரங்கள் தினசரியும், இடத்திற்கு இடமும் மாறுவதால், அகஸும் மாறுபடுகிறது.  இதன் அடிப்படையில் துல்லிய கணிப்பின்படி, உதாரணத்திற்காக, குறிப்பிட்ட ஒரு நாளின் ராகுகாலத்தை கணித்து பார்க்கலாம்.  இந்த பதிவில் உள்ள கணிப்புகள், தஞ்சாவூர், பாம்பு வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

மன்மத வருஷம், மார்கழி மாதம்,  5 ஆம் தேதி திங்கட்கிழமை, [ 21-12-2015 ].  அன்றைய அகஸ். 28 நா. 15 வினா. [ 11 மணி. 18 நிமி. ].  இதன் ஒரு முஹூர்த்த நேரம், அதாவது 8 பங்காக்கினால் ஒரு பங்கு. 3 நா. 32 வினா. [ 1 மணி. 25 நிமி. ].  அன்றைய சூரிய உதயம் காலை மணி 6.29. ராகுகாலம் பொதுவான கணக்கின்படி காலை மணி 7.30 முதல் 9.00 வரை.  இது அன்றைய தினத்தில் இரண்டாவது முஹூர்த்த காலத்தில் அமைகிறது.  எனவே அன்றைய இரண்டாவது முஹூர்த்தகாலம் மணிப்படி சூரிய உதயத்திலிருந்து 1 மணி 25 நிமி. யில் தொடங்கி 2 மணி. 50 நிமி. யில் முடிகிறது.  அன்றைய சூரிய உதயம் காலை மணி 6.29 உடன் 2 ஆவது முஹூர்த்த தொடக்கமான மணி 1.25 ஐ கூட்டினால் 7.54 வரும்.  இதோடு மீண்டும் முஹூர்த்த காலமான 1.25 ஐ கூட்டினால் மணி 9.19 வரும்.  ஆக அன்றைய ராகுகாலம் காலை மணி 7.54 க்கு தொடங்கி, 9.19 க்கு முடிகிறது.  இதுவே துல்லிய கணிப்பாகும்.  எனவே காலை மணி 7.30 க்கெல்லாம் ராகுகாலம் வந்துவிடும் என அவசரப்பட வேண்டியதில்லை.  அதுபோல் காலை மணி 9.00 உடன் ராகுகாலம் முடிந்துவிட்டது என்று தவறான முடிவுக்கும் வர வேண்டியதில்லை.  இம்மாதிரியான நேர அமைப்பு வரும் நாட்களில் சுபமுஹூர்த்தம் செய்பவர்கள் நல்ல நேரம் 9.00 முதல் 10.30 என கணக்கில் கொண்டு, மணி 9.19 க்கு முன்பே ராகு காலத்திலேயே சுபகாரியத்தை தொடங்கி விடுகிறார்கள்.  ஆனால் சரியான கால அளவாக காலை மணி 9.19 முதல் 10.44 ஐ கொள்ள வேண்டும்.  குறிப்பிட்ட இனத்தவர்கள் இன்றளவில் கூட இந்த துல்லிய முறையை கடைபிடித்து வருகிறனர்.  அவர்களது பத்திரிகைகளில் இந்த துல்லிய அளவான நாழிகை, வினாழிகையும், மணி நிமிஷ நேரமும் இடம் பெற்றிருக்கும்.

பொதுவான கணிப்பின்படி, ராகுகாலம் முடிந்திருக்காது.  துல்லிய கணிதப்படி ராகுகாலம் முடிந்திருக்கும்.  இந்த நேரத்தில் வேண்டுமென்றே திருமண மாங்கல்யதாரணம் செய்துவிட்டு, தன் அனுபவத்தில் ராகுகாலம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்றும், சாஸ்த்திரங்கள் பொய் என்றும் ஒரு தவறான பிரச்சாரம் செய்பவர்களும் உள்ளனர்.  மேலும், ராகுவுக்குரிய திருவாதிரை, ஸ்வாதி, சதயம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுகாலம் ராசியானது.  இவர்கள் ராகுகாலத்தில் திருமணம் செய்துகொண்டால் கூட வாழ்க்கை சிறப்பாக அமையும்.  இப்படிப்பட்டவர்களும், ராகுகாலத்தில் திருமணம் செய்துகொண்டு, ராகுகாலம் எல்லாம் பொய் என்பவர்களும் உள்ளனர்.  சிலருக்கு ஜாதக கணிதத்தில் ஏற்படும் தவறு காரணமாக, மேற்கண்ட நக்ஷத்திரங்களுக்கு, முன்னும் பின்னுமான நக்ஷத்திரங்கள் அமையும்.  இவர்கள் ஜாதகத்தை துல்லியமாக கணித்தால் முன் கூறிய ராகுவுக்குரிய  நக்ஷத்திரங்களில் பிறந்திருப்பார்கள்.  இவர்களையும் ராகுகாலம் கெடுதல் செய்வதில்லை.  இந்த உண்மை அறியாதவர்கள் ஜோதிட சாஸ்த்திரத்தை சந்தேகிக்கிறனர்.  ஜோதிட சாஸ்த்திரம் பொய்க்காது.  அதை மிக சரியாக பயன்படுத்தாத ஜோதிடர்கள் பொய்த்துப்போகிறனர்.  இப்படி ஜோதிடர்கள் பொய்த்துப்போகும் போது, ஜோதிட சாஸ்த்திரம் நம்பிக்கையற்றது என்ற வதந்தி பரவுகிறது.  இந்த உண்மையை அறிந்துகொண்டால், ஜோதிட சாஸ்த்திரத்தின் மீது நம்பிக்கை வரும்.  வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்வோம்.  நன்றி.  வணக்கம்.             


No comments:

Post a Comment