Monday 18 April 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ...... பகுதி எண் 02. ........... யோகாதிபத்யமும் பாதகாதிபத்யமும்.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ", ......  பகுதி எண் 02.  ...........  யோகாதிபத்யமும் பாதகாதிபத்யமும்.  ................  சென்ற பதிவில் சனி ஒரு சுபஸ்தானத்தில் இருந்தபடி செயல்படும் விதத்தை கணித்துப்பார்த்தோம்.  ................  இனி இந்த பதிவில் ..................

ராசிக்கட்டம் எண் 1 ல் சனி ஒரு அசுபஸ்தானத்தில் தனித்திருந்து செயல்படும் விதத்தை கணித்துப் பார்ப்போம்.  சனி அஷ்டமத்தில் நட்பு.  யோகத்தை தரும் கிரகம் அசுபஸ்தானத்தில் இருந்தால், அதன் யோகாதிபத்யம் பங்கப்படும்.  பாதகாதிபதி அசுபஸ்தானங்களில் இருந்தால் செயல்பட மாட்டார்.  அந்த வகையில் சனியின் பாதகாதிபத்யமும் பங்கப்படும்.  ஆக இரு துணை ஆதிபத்யங்களும் செயலிழந்துவிடும்.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 மட்டும் சனி இருக்கும் அஷ்டமத்திற்கு தகுந்தாற்போல் அசுபபலன்களை தரும்.  9 ஆமிடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிப்பதற்கு வாய்ப்பே இல்லை.  ஆகவே வரும் துன்ப துயரங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.  செவ்வாய் குரு, சுக்கிரன் ஆகிய புக்திகளின் போது அசுப பலன் மிக அதிகமாக நடக்கும்.  புதன் நீசம் பெற்றிருப்பதால் சனியுடன் இணைந்து அசுபத்தையே தருவார்.  அஸ்தங்கதம் அடைந்திருந்தால், சூரியன் சுபஸ்தானாதிபதி என்பதால், புதாதித்ய யோகம் ஏற்பட்டு சனியின் அசுப பலன்கள் கட்டுப்படுத்தப்படும்..  சூரிய புக்தியில் ஓரளவு நற்பலன் நடக்கும்.  சந்திர புக்தியில், சந்திரனின் சுபபார்வை 9 ஆமிடத்தில் விழுவதால், சந்திரனால், தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிக்கும் நிலை ஏற்படுகிறது.  ஆகவே அப்போது மட்டும், இறைவழிபாடு செய்து சுபபலன்களை கூடுதலாக பெறமுடியும்.

ராசிகட்டம் எண் 2 , சனி அசுபஸ்தானமாகிய 6 ல் உச்சம்.  அஷ்டமாதிபதியுடன் இணைவு.  சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பார்வை.  சனி 6 ல் இருப்பதால் அதன் யோகாதிபத்யம் பங்கப்படும்.  அதுபோல், அதன் அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகளும் பாதிக்கப்படும்.  பாதகாதிபத்ய கிரகம் அசுபஸ்தானகளில் இருந்தால் பாதகாதிபத்யம் செயல்படாது.  ஆக எந்த கோணத்தில் பார்த்தாலும் சனிக்கு சுபத்தன்மையே தென்படவில்லை.  9 ஆமிடம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தெய்வீக பரிகார வழிபாடுகளும் செல்லுபடியாகாது.  சந்திரனின் சுப பார்வை மட்டுமே சற்று ஆறுதல்.  ஆகையால் சந்திரபுக்தியில் மட்டும் வழிபாடுகள் பலிக்கும்.  மொத்தத்தில் சனியால் ஏற்படும் துன்பங்களை இந்த ராசிக்கட்டதாரர் அனுபவித்தே ஆகவேண்டும்.  வேறு வழியில்லை.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகள் பலன் தரும்போது, எதிர்மறையாகவே தரும்.  இந்த ராசிக்கட்டத்தை பொறுத்தவரை சனி ரிஷபத்திற்கு யோகாதிபதியாக இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது.  செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியோர் முறையே, களத்திரம், லாபம், லக்னம் ஆகிய சுப ஆதிபத்யங்கள் பெற்றிருந்தாலும், அந்த சுபங்களை செயல்படுத்த முடியாது.  காரணம் 6 ல் அஷ்டமாதிபதியுடன், சுபாவ அசுப பார்வை பெற்ற சனி எல்லாவற்றையும் தடுத்துவிடுவார்.  எனவே செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் அசுபஸ்தானங்களான, முறையே விரயம், அஷ்டமம், சஷ்டமம் ஆகிய ஸ்தான பலன்களையே சனியுடன் இணைந்து அவைகள் தரும்.  மற்ற சுபஸ்தானாதிபத்ய கிரகங்களின் நன்மை கூட சனியால் தடை செய்யப்படும்.  இது சனிதிசை மற்றும் புக்தி நடக்கும் போது மட்டுமே.  மற்ற நேரங்களில் நிலைமை மாற்றம் பெறும்.

இனி ராசிக்கட்டம் எண் 3 ஐ பார்க்கலாம்.  இதில் யோகாதிபதியான சனி, பூர்வபுண்ணியாதிபதியாகிய புதனுடன் இணைந்துள்ளது.  புதனின் இன்னொரு ஆதிபத்யமும் சுபமே.  அசுபஸ்தானாதிபதிகளின் தொடர்பு எதுவும் இல்லை.  ஆக சனி முழுசுபத்தன்மையுடன் இருந்தாலும், இன்னொரு புறம் பாதகாதிபத்யம் பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.  சனியின் துணை ஆதிபத்யங்களில் ஒன்றான யோகாதிபத்யம், புதன் என்னும் பூரண சுப ஆதிபத்யம் பெற்ற கிரகத்துடன் கூடியிருப்பதால், சனி தன் திசையில் ராசிக்கட்டதாரரை தன் சுபயோக பலனால், அதிர்ஷ்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று எல்லையில்லா ஆனந்தம் தந்துவிடுவார்.  சனியின் இன்னொரு துணை ஆதிபத்யமான பாதகதிபத்யம், செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகிய அசுபஸ்தானாதிபதிகளுடன் சேர்ந்து கெடுதல் செய்ய வேண்டும்.  ஆனால் 9 ஆமிடம் குறையற்ற முழு சுபத்துடன் விளங்குவதால், மிக மிக எளிதாக சனியின் பாதகாதிபத்யத்தின் தீமையை பெருமளவு குறைத்துக்கொள்ளலாம்.  தெய்வீக பரிகார வழிபாடுகள் செய்தால், தெய்வம் தானே விரைந்துவந்து ராசிகட்டதாரருக்கு அருள் புரிய காத்திருக்கிறது.  எனவே ராசிகட்டதாரர் சனிதிசை முழுதும் வாழ்வில் குறையின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்.  இதை ராஜயோகம் என்றும் சொல்லலாம்.  அடிப்படை ஆதிபத்யங்களான 9, 10 ஆகியவைகள் கூட நன்மைகளை குறையில்லாமல் அள்ளி வழங்கும்.

கிரகங்கள் தான் பெறுகின்ற ஆதிபத்யத்தால் மட்டுமல்ல, பார்க்கின்ற பார்வையிலும், அந்த பார்வைகளை பெறுகின்ற தன்மையிலும் கூட இரட்டை வேஷம் போடுகின்றன.  இதை பற்றி அடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.  நன்றி.  வணக்கம்.  .......................... தொடரும்  .............................. 
      

2 comments:

  1. ஐயா வணக்கம்!

    இங்கு சனி பெற்ற பாதசாரம் எதுவும் மாற்றம் தராதா? தயவுசெய்து விளக்கவும்.

    ReplyDelete