Sunday 23 October 2016

" சுகஸ்தானமும், நோய்களும் ",



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " சுகஸ்தானமும், நோய்களும் ",  : ..........  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஜாதக கட்டத்திலுள்ள 4 ஆம் ஸ்தானத்தை சுகஸ்தானம் என்கிறோம்.  இந்த ஸ்தானம் கெட்டால் சுகக்கேடு விளையும் என்பது எல்லோர் கொள்கை.  சுகம் கெட்டால் என்னாகும்?  நோய் வரும்.  எனவே சுகஸ்தானம் கெடுவது நோய்க்கான அறிகுறி என்பது பலர் முடிவாக இருக்கிறது.  மேலோட்டமாக பார்த்தால் இதுவே உண்மை எனவும் நமக்கு தோன்றுகிறது.  சுகஸ்தானம் கெட்டு, அதன் மூலம் நோய்கள் வரும் என்றால், நம் ஜோதிட ஞானிகள், 6, 8 என்ற இரு ஸ்தானங்களை பற்றி விரிவாக சொல்லியிருக்க மாட்டார்கள்.  அதற்கு அவசியமென்ன?  6. 8 என்ற ஸ்தானங்களோடு தொடர்புடைய கிரகங்களின் காரகத்துவங்களை கொண்டு நோய்கள் இன்னதென்று விதி வகுத்தவர்கள், 4 ஆம் ஸ்தானத்திற்கு அவ்வாறு ஒரு விதி முறையை வகுக்காதது ஏன்? என்றெல்லாம், சிந்திக்கும் போது,  சுகம், சுகக்கேடு மற்றும் நோய்கள் என்ற இவ்விரு சொற்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்தும் வகையில், ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது.  அதனால், 4 மற்றும் 6. 8 ஆகிய ஸ்தானங்களுக்கிடையேயும் ஏதோ ஒரு சூட்சுமம் ஒளிந்திருக்கிறது என்ற உணர்வு நமக்கு நிச்சயமாக வரும்.

நல்லதோ, கெட்டதோ, தன்னுடைய மனம் எதை விரும்புகிறதோ? அதை தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதும், அதனால் மனமகிழ்ச்சி அடைவதும் அனுபவிப்பவரை பொறுத்தவரை அது சுகம் ஆகும்.  இதில் நல்ல சுகம், கெட்ட சுகம் என்று இருவகை உண்டு.  சுபஸ்தானாதிபதிகள், சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல சுகம் கிடைக்கும்.  அதனால் அவர் மனமகிழ்ச்சி அடைகிறார்.  சுபஸ்தானாதிபதி, பகை, நீசம் அடைந்தால் அதில் தடை ஏற்படுகிறது.  உதாரணத்திற்கு, 2 ஆம் அதிபதி சுகஸ்தானத்தில் இருந்தால், ஜாதகர் தான் விரும்பும் உணவுகளையெல்லாம், உண்டு மனமகிழ்ச்சி அடைவார்.  2 ஆம் அதிபதி சனியானால், ஜாதகர் எண்ணெயில் பொரித்த சுவையான அசைவ உணவுகளை உண்டு மகிழ்வார்.  அதில் ஒரு சுகம்.  இத்தகைய உணவுகளால் ஜீரண மண்டல உறுப்புகளில் நோய் வந்து அவதிப்படுபவர்களும் உண்டு.  அதுபோல் எவ்வித இடையூறுமின்றி இறக்கும் வரை நன்றாக வாழ்ந்தவர்களும் உண்டு.  சனியின் சாரனாதன் குருவாகி, அவர் அஷ்டமத்தில் இருந்தால், நிச்சயம் ஜீரண மண்டல உறுப்[புகளில் நோய் வரும்.  கொழுப்பு அதிகமாகி ரத்த அழுத்தமும் வரும்.  இதுவே சாரனாதனாகிய குரு லாபத்தில் இருந்தால், வாழ்னாள் முழுதும் மேற்கண்ட உணவை உண்டு மகிழ்வதில் மன்னனாக இருப்பார்.    அடிக்கடி மது அருந்தும் ஒருவர், நீண்ட காலம் நல்ல முறையில் வாழ்வதும், எப்போதாவது அருந்துபவர், வயிற்று புற்றால் அவதிப்பட்டு அகால மரணம் அடைவதும், மேற்கண்ட ஸ்தானங்களின் செயல்பாடுகளே.  எனவே சுகஸ்தானம் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் மனச்சுகம்.  6. 8 ஆகிய ஸ்தானங்கள் அடையாளம் காட்டுவது ஜாதகர் அடையும் உடற்சுகம்.  அதாவது நோய்கள்.  புகையிலை மெல்லுவது, மூக்குப்பொடியை பயன்படுத்துவது ஆகியன ஒருவருக்கு மனசுகத்தை தரலாம்.  அதுவும் அது கெட்டசுகமாகும்.  இதன் விளைவாக சம்பந்தப்பட்ட நோயை தருவதும் தராததும் 6. 8 என்ற ஸ்தானங்களின் அமைப்பு.  இதைபற்றி ஒரு சில கிரக அமைப்புகளோடு சற்று விரிவாக பார்ப்போம்.  : ...............

மீனலக்னம்.  விரயாதிபதி சனி 4 ஆமிடம் குரு சாரம்.  குரு அஷ்டமம்.  சுயசாரம்.  இந்த அமைப்பு உடைய ஜாதகர் தாங்கொணாத அளவுக்கு உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்.  எவ்வாறு?  விரிவாக பார்ப்போம்.  விரயாதிபதி சனி 4 ல்.  விரயம் அசுபஸ்தானம் என்பதால் ஜாதகர் அடைவது கெட்ட சுகம்.  அத்துடன் விரயம் செலவையும் குறிக்கும்.  சனியின் காரகத்துவம் இறைச்சி.  குருவின் காரகத்துவம் கொழுப்பு.  அஷ்டம காரகத்துவம் நோய்.  அஷ்டமத்தில் குரு இருந்தால் ஆயுள் குறைவு.  ...................  இவைகளையெல்லாம் ஒன்றிணைத்தால்..........................  ஜாதகர் அசைவ விரும்பி.  இதற்காகசெலவுகள் செய்ய தயங்கமாட்டார்.  சனியின் இருப்பிடம் நட்பு.  எனவே மிகவும் விரும்பி, அளவுக்கதிகமாகவே இறைச்சி வகையறாக்களை உண்ணுவார்.  இது ஜாதகருக்கு சுவைசுகம்.  ஆனால் சாஸ்த்திரப்படி கெட்டசுகம்.  இந்த கெட்ட சுகத்தை அனுபவிப்பதால், கொழுப்பு அதிகமாகி, அதுவே உயர் ரத்த அழுத்தமாகி, ஆயுளை குறைத்து அகால மரணத்தை தந்துவிடும்..  இந்த கிரக நிலையை நாம் வேறுவகையிலும் அணுகலாம்.  ;;;;;;;;;;;;;;;;;;;  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் சுயசாரம்.  லக்னாதிபதி அஷ்டமத்தில் பகையானதால் ஆயுள் குறைவு.  மேலும் அஷ்டமத்தில் குரு இருப்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும்.  அதாவது ஜீரணமண்டல கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிப்புகள் வரும்.  இதே கிரக அமைப்புகளோடு, இந்த சுகஸ்தானத்தை வேறு வகையில் அணுகி பார்க்கலாம். : ......................  லாபம் எனக்கூடிய சுபஸ்தானாதிபதி சனி, சுகம் எனக்கூடிய சுபஸ்த்தானத்தில் இருப்பதால், ஜாதகர அனுபவிக்கும் சுகம் நல்ல சுகமாக இருக்கும்.  அதாவது நல்ல வருமானம் தரும் தொழிலில் கடுமையாக உழைத்து, தேவையான தூக்கத்தை நிம்மதியாக பெறுவார்.  இது நல்ல சுகம்.  சாராதிபன் அஷ்டமத்தில் இருப்பதால், வருமானத்தையும் மீறிய நிதிப்பற்றாக்குறையால் கடன் இருந்துகொண்டே இருக்கும்.  இதை இன்னொரு வகையிலும் அணுகலாம்.  லக்னாதிபதி குரு அஷ்டமத்தில் பகை என்பதால் வாழ்னாள் முழுதும் நிதிப்பற்றாக்குறையால் கடன் இருக்கும்.  இதே குரு தொழில் ஸ்தானத்துக்கும் அதிபதியாகி, அஷ்டமத்தில் இருப்பதால், தொழிலுக்காக ஜாதகர் கடன் வாங்கியே தீர வேண்டும் என்ற நிலையை காட்டுகிறது.

சுகத்தில் நல்ல சுகம், கெட்டசுகம் இருப்பதுபோல் நோயில் நல்ல நோய், கெட்ட நோய் என்று கிடையாது.  நோய் என்றாலே கெடுதல் தான்.  இதிலிருந்து, சுகஸ்தானத்திற்கும் நோய்களை குறிக்கும் ஸ்தானங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்துகொள்ளலாம்.  இப்படி நாம் ஆராயும் எண்ணத்தோடு ஸ்தானங்களை பற்றி சிந்திக்கும்போது, அதனுள் ஒளிந்திருக்கும் வேறுபாடுகளையும் சூட்சுமங்களையும் புரிந்துகொள்ள முடியும்.  ஆனால் இந்த ஆய்வுகள் எல்லாம் ஜோதிட விதிமுறையோடு ஒத்துப்போகவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடோடு ஆராயவேண்டும். அதற்குரிய நல்ல ஞானத்தை குருவருளும், இறையருளும் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்வோமாக.  நன்றி.  வணக்கம்.     

No comments:

Post a Comment