Thursday 6 November 2014

ஜோதிடம் பயில்பவர்களின் கவனத்திற்கு..............



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  குறிப்பாக ஜோதிடம் பயில்வோர் கவனத்திற்கு இந்த பதிவு.  இந்த பதிவில் ஜாதகம் கணிப்பதை கற்றல் மற்றும் பலன் உரைத்தல் பற்றிய முக்கியத்துவம் பற்றி ஒரு சிறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  முதலில் ஜோதிடம் பயில விரும்புபவர் தனது ஜாதகத்தில் அதற்கான கொடுப்பினை உள்ளதா? என அறிந்து கொள்ளுதல் அவசியம்.  அது ஏண்? என்பதற்கான காரணங்களையும்  இந்த பதிவு ஆராய்கிறது.  ஒரு குறுகிய காலத்திற்குள் ஜோதிடக்கலையில் தேர்ச்சி பெற்று விட முடியாது என்ற விழிப்புணர்வையும் விளக்கவே இந்த பதிவு.

ஒருவரது பிறந்தனாள், நேரம், ஊர், பெயர் ஆகியவற்றை நாலு ஜோதிடரிடம் தந்தால், ஜாதகத்தை நால்வரும் ஒரே மாதிரியாக கணித்து தந்துவிடக்கூடும்.  அதே ஜாதகத்தை அதே நால்வரிடம் தந்து பலன் கேட்டால் நாலு பேரும் நாலு வகையாக பலன் சொல்வர்.  இதிலிருந்து ஜாதகம் கணிப்பதை விட பலன் சொல்வது கடினமான செயல் என புரியும்.  ஜாதகம் கணிப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல.  அதை தற்போதைய கணிணிகள் எளிதாக்கிவிட்டன என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.  கணிணிகள், ஜாதகம் கணிக்கும்போது, ஸ்திரிகாலம், புருஷகாலம், லக்னசந்தி, ராசிசந்தி, நக்ஷத்திரசந்தி ஆகியவற்றை சரி பார்ப்பதில்லை.  இவைகளையும் சரி பார்த்து கணிக்கப்படுவதே சரியான ஜாதகமாகும்,  இப்படிப்பட்ட ஒரு ஜாதகத்தை நன்றாக கற்றறிந்த ஜோதிடரால் மட்டுமே கணிக்க இயலும் என்பது உண்மை.  எனவே ஜோதிடம் பயில்வோர்கள் நல்ல கற்றறிந்த ஜோதிடராக மாறவேண்டும் என்று விரும்பினால் ஜாதக கணிதத்தை முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும். 

பலன் உரைப்பதை முழுமையாக கற்றுக்கொண்டேன் என்று நான் உட்பட எந்த ஜோதிடராலும் சொல்ல முடியாது.  ஆனால் ஜாதகம் கணிக்க முழுமையாக கற்றுக்கொண்டேன் என்று,  முயன்றால் ஜோதிடம் பயில்பவர்களாலும் சொல்லமுடியும்.  எனவே முதலில் ஜாதக கணிதம் அறிந்துகொள்வதை குறிக்கோளாக கொள்ளவேண்டும்.  அதுமட்டுமல்லாமல், நம்மிடம் வருகிற ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா? என்று தெரிந்துகொள்ள, லக்னம், நவாம்சம், பாவசக்கரம், சோடச வர்கங்கள், தசாபுக்தி கணிதம், ஷட்பல கணிதம், அஷ்டவர்க கணிதம், போன்றவைகளை எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்றும் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டியுள்ளது.  தவறாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை நம்பி பலன் உரைத்தால், ஜாதகப்படி பலன் துல்லியமாக இருந்தாலும், ஜாதகரை பொறுத்தவரை எல்லாம் தவறாகிப்போகும்.   இவற்றையெல்லாம் நன்றாக பயின்று அறிய நல்ல கணித அறிவு தேவை.  எனவே பயில முனைபவர்கள் தங்கள் ஜாதகத்தில் அதற்கான அமைப்பு உள்ளதா? என்று அறிந்துகொள்ளவேண்டும்.  இதற்கு ஜாதகத்தில் புதன் நல்ல முறையில் அமைவதோடு, நான்காம் பாவமும் சுபமாக இருக்க வேண்டும்.

அடுத்து, பலன் உரைக்கும் நூல்களில் ஹோராசாரம், சாராவளி, பாராசரியம், சந்தான தீபிகை, பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், ஜம்புனாதியம் போன்றவை முக்கிய நூல்களாகும்.  இந்த பட்டியலிலுள்ள நூல்களை கொண்டு, தாம் ஜாதக அலங்காரத்தை இயற்றியதாக திரு. கீரனூர் நடராஜனார் அவர்கள் தெளிவுபட சொல்லியிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நூல்கள் ஏகப்பட்டவை உள்ளன.  அவைகளை எல்லாம் கற்று தேர்வது மிகவும் கடினம்.  மேலும் பலன் உரைக்கும் விதிமுரைகளை அறிவுருத்தும் நூல்களும், அதன் உரைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன.  இவைகளை ஆய்வு செய்து, எந்த வழிமுறை நமக்கு பலிதமாகிறது என்று தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் சென்று விடும்.  இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையே அனுபவம் என்கிறோம்.  இதை பயிற்சி நிலையங்களில் பெற இயலுவதில்லை.  இதையும் தாண்டி இன்னொரு விஷயமும் உள்ளது.  அதுவே தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும்.  கல்வியில் மிக குறைந்தவர்கள் கூட மிக சரியாக ஆச்சரியப்படும் வகையில் பலன் உரைப்பதை நாம் அறிவோம்.  இதற்கு காரண்ம் இறையருளும், குருவருளும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்,, இந்த தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும்.  இதை நம்மால் எந்த விலை கொடுத்தும் வாங்க  இயலாது.  இப்படி பலன் உரைப்பதில், அனுபவமும், தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமும் நமக்கு கிடைக்க, வாக்குஸ்தானமும், பாக்கியஸ்தானமும், குருவும் நல்ல முறையில் நம் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும்.  இந்த அமைப்புகளை பொறுத்தே ஒருவர் வெற்றிகரமான, சிறந்த ஜோதிடராக திகழமுடிகிறது.

ஆகையால், ஜோதிடம் பயில விரும்புவர்கள், முதலில் தங்கள் ஜாதகத்தில் அதற்கான கொடுப்பினை இருக்கிறதா? என அறிந்துகொள்ளுங்கள்.  பின் அவசியம் ஜாதக கணிதம், பலன் உரைக்கும் வழிமுறை கற்று தரும் நல்ல பயிற்சி மையத்தில் இணையுங்கள்.  அதன்பின் அனுபவம் பெற நல்ல குருனாதரை நாடுங்கள்.  குருவருளும், இறையருளும் இணைந்து வாக்குபலிதத்தையும், தெய்வீக உள்ளுணர்வையும் தரட்டும்.  வெற்றிகரமான ஜோதிடர்களாக திகழுங்கள்.  அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள். 


No comments:

Post a Comment