Friday 10 June 2016

" இப்படியும் ஜாதகமா? ", : ....... தொடர் பதிவு எண் 1.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " இப்படியும் ஜாதகமா? ", : .......  தொடர் பதிவு எண் 1.  பெற்ற தாயால் சித்ரவதை அனுபவித்துக்கொண்டு இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். : .........  பாரம்பரிய முறை. : ...........  இப்படியும் ஒரு அதிர்ச்சிப் பதிவா? என்று உங்களுக்கு எண்ணத்தோன்றும்.  இது எந்த அளவுக்கு சரி என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.  ஜாதக அலங்காரம் என்னும் நூலில் 5 ஆம் பாவம், புத்ர பலன் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள 637 ஆவது பாடல் இது.

செய்யஒரு நாலிடத்தில் தீயோர் நிற்கச்
   சேருமைந்தாம் அதிபனுடன் சனியும் கூடப்
பையவே பன்னிரன்டா மிடத்தில் பாவர்
   பற்றினிற்கத் தாய்சாபம் பால ரில்லை.
ஐயமற ஓமங்கள் சபங்கள் தானம்
   அன்புடனே செய்விக்கு மவர்த மக்குத்
துய்யதிரு மைந்தர்பலர் உண்டா மென்று
   சுருதிகலை ஆகமங்கள் சொல்லும் தானே?

இதன் பொருள் :  நாலாம் ஸ்தானத்தை பாபக்கிரகங்கள் ஆக்கிரமித்திருக்க, ஐந்துக்குடையவனுடன் சனி சேர்ந்து நிற்க, பன்னிரண்டாமிடத்திலும் பாபர்கள் நின்றிருந்தால், அந்த ஜாதகனுக்கு அவனுடைய தாய் கொடுத்த சாபத்தால் புத்திரப்பேறு வாய்க்காது.  ஹோமங்கள், இறைவழிபாடுகள், தானதருமங்கள் போன்ற பரிகாரங்களை செய்துகொண்டால், மேற்சொன்ன சாபம் நீங்கி, அழகிய பிள்ளைகள் பிறப்பர் என்று வேத சாஸ்த்திரங்களும், ஆகமசாஸ்த்திரங்களும் கூறும்.  .....................  தன் மகனின் வம்சம் விருத்தி அடையாமல் கெட்டொழியட்டும் என்று சாபம் கொடுக்கும் அளவுக்கு தாய் என்ன அவ்வளவு மோசமானவளா?  அல்லது இப்படி சாபம் கொடுப்பவள் உண்டென்றால், அவளை எப்படி? தாயென்பது.  இந்த பாடலில் சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புகளை கொண்டு, சிந்தித்து பார்க்கலாம்.  4 ஆமிடம் தாய் ஸ்தானம்.  அதில் பாபர்கள் இருந்தால், தாய் இருக்கமாட்டாள்.  இருந்தால் அவள் தாயாக இருக்கமாட்டாள்.  அதிலும் 6 ஆம் அதிபதி இருந்தால், பகைமை என்பது தாயின் வடிவத்தில் வந்து பேயாட்டம் ஆடும்.  பிள்ளையை வாழ்னாள் முழுதும் பரம எதிரியாக தாய் கருதுவாள்.  5 ஆம் அதிபனுடன் சனி சேர்ந்தால் புத்ர பாக்கியம் கேள்விக்குறியாகும்.  விரயத்தில் பாபர் இருந்தால் விரயஸ்தானம் விருத்தியடைந்து, ஜாதகருக்கு வாழ்க்கையில் விரயங்களை அதிகமாக தரும்.  அதில் புத்திரவிரயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.  அதாவது ஒருவேளை புத்ரபாக்கியம் கிடைத்தாலும், புத்திரன், கொள்ளி வைக்கவும்  உதவாமல் போகும் வகையிலோ, அல்லது பிறந்தவன் இறந்தோ போவான்.  இதே ஜாதக குறிப்பை வைத்துக்கொண்டு தாயை பற்றியும் அறியலாம்.  ஜாதகனின் 4 ஆமிடமே தாயின் லக்னம்.  லக்னத்தில் பாபர் இருந்தால், தாயின் குணமும் மனமும் நன்றாக இருப்பது அரிது.  லக்னத்துக்கு அடுத்த ஸ்தானாதிபதியோடு சனி கூடினால், வாக்கு மங்களரகரமாக இருக்காது.  எனவே சாபம் விடவும் துணிகிறாள்.  ஜாதகனின் 12 ஆமிடம், தாயாருக்கு 9 ஆமிடமாகும்.  பெண்கள் ஜாதக ஜோதிட விதிப்படி, இது புத்ர ஸ்தானம்.  இதில் பாபர்கள் இருந்தால், தாய், பெற்ற பிள்ளை மீது அன்பாக இருப்பது அதிசயம்.  இந்த ஸ்தானமே தாயின் வாக்கு ஸ்தானத்திற்கு நாச ஸ்தானாமாகிறது.  எனவே தாயின் வாக்கு நாசத்தை விளைவிக்கும் சாபமாகிறது.  எல்லாம் ஜோதிட விதிப்படி சரியாக இருந்தாலும், இந்த பலனையும், இந்த தாயை பற்றியும் மனம் ஏற்றுக்கொள்ள சங்கடமாகவே இருக்கும்.  இப்படிப்பட்ட ஒரு தாய்க்கு பிறந்து, வாழ்க்கையில் தாயால் துன்பங்களை மட்டும் அனுபவித்த ஜாதகர் ஒருவரின் ஜாதகத்தை அடுத்த பதிவில் இடுகிறேன்.

தாயில் உத்தமத்தாய் உண்டு, " பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து.................. [ வருபவன் ] ", என்று இறைவனுக்கு ஒரு பெருமை உண்டு.  உத்தமத்தாய், தன் பிள்ளைக்கு பசித்த நேரம் அறிந்து முன் கூட்டியே பாலூட்டுவாள்.  நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு " பாலுக்கழுத பிரான் ", என்று ஒரு அடைமொழி உண்டு.  பசித்த வயிற்றுக்கு பால் வேண்டும் என்று வாயை திறந்து அழுத பின்னரே அவருக்கு ஞானப்பால் கிடைத்தது.  அதுபோல் மத்திமத்தாய் என்பவள், குழந்தை அழுதவுடன் விரைந்து பாலூட்டுவாள்.  அதமத்தாயானவள், குழந்தை அழுது, அழுது நாக்கு வரண்டு போனாலும் திரும்பி பார்க்கமாட்டாள்.  இப்படிப்பட்ட அதமத்தாய் ஒருத்திக்கு பிறந்த பிள்ளையின் ஜாதகம் ஒன்றையும், அவர் பட்ட துயரங்களை ஜாதக ரீதியாகவும் அடுத்த பதிவில் பார்ப்போம்.  ....................  தொடரும்.  ....................   

No comments:

Post a Comment