Thursday 7 January 2016

விவாஹதசவித பொருத்த விளக்கப்பதிவு. ............ நிறைவுப்பகுதி எண். 6.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  ....................  விவாஹதசவித பொருத்த விளக்கப்பதிவு. ............ நிறைவுப்பகுதி எண். 6. .............. பாரம்பரிய முறை. ................  கடந்த 5 பகுதிகளில் மிக முக்கியமான பொருத்தங்களை பற்றி பார்த்திருக்கிறோம்.  இப்படி பார்த்தவைகளை கொண்டு இரு ஜாதகங்களை இணைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்து விடமுடியும்.  அதை ஒரு முறை சுருக்கமாக பார்த்துவிடலாம்.  தசவிதம் என்றாலே பத்துவகை என்று பொருள்.  இந்த பத்தில் மிகமிக முக்கியமானவைகளாக தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகியனவற்றை நமது சாஸ்திரம் அடையாளம் காட்டுகிறது.  இவற்றில் ஒன்று குறைந்தால் கூட அந்த ஜாதகங்களை கண்டிப்பாக இணைக்கக்கூடாது.  இதற்கு மேலுள்ள மற்ற பொருத்தங்கள் எத்தனை பொருந்துகிறதோ, அந்த பொருத்தங்களை நாம் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம்.  மேற்கண்ட ஐந்து பொருந்தினால், மற்ற ராசியதிபதி, வேதை ஆகிய இரண்டும் எளிதாக பொருந்திவிடும்.  இப்படி பொருத்தம் பார்ப்பது ஒரு முறை.  இனி இன்னொரு முறையும் பார்ப்போம்.  தினம், யோனி, ராசியதிபதி ஆகியன பொருந்தினால் போதும்.  ராசியதிபதி பொருந்தினால், கணம், ராசி, ரஜ்ஜு, வேதை ஆகியன பார்க்கவேண்டியதில்லை என்பதால், மொத்தம் ஏழு பொருந்தியதாக ஆகிவிடும்.  இதற்கு மேல் மீதம் உள்ளவற்றின் பொருத்தம் பார்த்து, அவற்றை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதில் தினம், அல்லது யோனி மட்டும் பொருந்தவில்லை என்றால் கூட அந்த ஜாதகங்களை இணைக்கக்கூடாது.  ராசியதிபதி பொருந்தவில்லை என்றால், கணம், ராசி, ரஜ்ஜு, வேதை ஆகியனவற்றை தனித்தனியாக பார்த்து பொருத்த வேண்டும்.  இனி இன்னொரு முக்கியமான விதி இருப்பதையும் பார்த்துவிடலாம்.

மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை, விவாஹதசவித பொருத்த சாஸ்த்திரத்தின் சிறப்பு நக்ஷத்திரங்களாகும்.  பொருத்தம் பார்க்கும் இரு ஜாதகங்களில் ஒரு ஜாதகத்திற்கு மேற்கண்ட நக்ஷத்திரம் அமைந்திருந்தால், விவாஹதசவித பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம்.  பத்து பொருத்தங்களும் பொருந்தியதாக கொள்ள வேண்டும்.  இப்படி பொருத்தங்கள் பார்த்துவிட்டதோடு, கடமை முடிந்துவிடவில்லை.  இதற்குபின், ஜாதகத்தில் சர்ப்பதோஷம், செவ்வாய்தோஷம் உள்ளனவா? என்று ஆராய்தல் முக்கியம்.  அதன் பின் ஜாதககட்ட பொருத்தமும் பார்க்க வேண்டும்.  அப்போதுதான் நாம் பொருத்தத்தை முழுமையாக பார்த்ததாக ஆகிறது.  இப்படி முழுமையாக பொருத்தம் பார்க்கப்பட்ட ஜாதகர்களே ஒரு குறையுமின்றி, சிறப்பான வாழ்க்கை வாழமுடியும்.  இப்படிப்பட்ட முழு கவன பொருத்தம், திருமண அட்டவணைகளில் நிச்சயமாக கிடைப்பதில்லை.  உதாரணத்திற்கு, சிறப்பு நக்ஷத்திரங்களின் பெயர்கள், பொருத்தாத நக்ஷத்திரங்கள் என்ற வரிசையில் அட்டவணையில் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் சாதாரணமாக காணமுடியும்.  இதிலிருந்து அட்டவணையை எந்த அளவு நம்பலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.  திருமணமான பின்பு விவாஹதசவித பொருத்தம் பார்த்தத்தில் தவறு இருப்பது தெரியவந்தால், அதை சரி செய்துகொள்ள முடியவே முடியாது.  அதற்கான பரிகாரவழிமுறைகள் எதுவும் சாஸ்த்திரத்தில் சொல்ல்ப்படவில்லை.  இனி மீதம் பார்க்கப்படவேண்டிய பொருத்தங்களான, மாஹேந்திரம், ஸ்த்ரிதீர்க்கம், வசியம், வேதை ஆகிய பொருத்தங்களை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய செல்வசெழிப்புகளை மாஹேந்திர பொருத்தம் அடையாளம் காட்டும்.  ஸ்த்ரீதீர்க்க பொருத்தம் என்பது பெண்ணின் ஆயுள் பலத்தோடு தீர்க்கசுமங்கலித்துவத்தை அறிவிக்கும்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்பால் ஒருவருக்குள்ள ஈர்ப்பை குறிப்பிடுவது வசியப்பொருத்தம்.  தம்பதிகளில் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை குறிப்பிடுவது வேதைப்பொருத்தம்.  இப்போது சொல்லப்பட்ட பொருத்தங்கள் பொருந்தினாலும், இல்லையென்றாலும் கவவையில்லை.  அவைகள் எண்ணிக்கையில் கூடும் அல்லது குறையும்.  இவைகள் மட்டுமில்லாமல் நாடிப்பொருத்தம் உள்ளது என்று சொல்வாருண்டு.  சாஸ்த்திரத்தில் மொத்தம் 21 பொருத்தங்கள் குறிப்பிடப்படுகிறன.  இவைகளில் முதன்மையானவை விவாஹதசவித பொருத்தங்கள் மட்டுமே.  இந்த பத்து பொருத்தங்களை பற்றி விரிவாக விளக்கமாக, மொத்தம் ஆறு பதிவுகளில் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.  பதிவுகளை ரசித்து விமர்சித்த அனைவருக்கும் என் நன்றியறிதலை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த பதிவுகளில் சொல்லப்பட்ட கருத்துக்களை வாசகர்கள் சிந்தித்துப்பார்த்து, விவாஹதசவித பொருத்த அட்டவணைகளை நம்புவதா? அல்லது வேண்டாமா? என்ற ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்.  சரியான துணையை தேர்வுசெய்து வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள இறைவன் திருவருளை நாடி பிரார்த்தனை செய்துகொள்வோம்.  நன்றி வணக்கம்.     

No comments:

Post a Comment