Thursday 26 November 2015

" கிரகபார்வைகள் ",



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " கிரகபார்வைகள் ", ........................... ஜோதிடம் பதிதாக கற்பபவர்களுக்காவும், ஜோதிட ஆர்வலர்களுக்காகவும் இடப்படும் பதிவு....................  பாரம்பரிய முறை................ஒவ்வொரு கிரகத்துக்கும் இரு விதமான பார்வைகள் உண்டு.  01.  சுப,அசுப பார்வை  02.  ஸ்தானதிபத்திய பார்வை.  இவ்விருவிதமான பார்வைகளையும் கிரகங்கள் எப்போது, எவ்விதமாக பார்க்கிறன? என்பதை புரிந்துகொள்வதில் ஒரு சிலர் குழப்பத்திலேயே உள்ளனர்.  இந்த கட்டுரையில், எந்தெந்த கிரகங்கள், தானிருக்கும் இடத்திலிருந்து எத்தனையாவது இடங்களை பார்க்கும்? என்பதை பற்றிய விளக்கம் இடம் பெறவில்லை.  இந்தவகையான பார்வை விதியை பயன்படுத்துவதில் அனைவரும் ஒரே மாதிரியாகவே எந்த குழப்பமுமில்லாமல் இருக்கிறனர்.  எனவே குழப்பம் தரக்கூடிய அசுப,சுப, ஸ்தானதிபத்திய பார்வைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

சுப கிரகம் ஒன்று ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது, அந்த பார்வை சுப பலனை தரும்.  அசுப கிரகம் ஒன்று ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது, அது அசுப பலனை தரும்.  நவக்கிரகங்கள் சுப, அசுப கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.  சூரியன், அசுபசந்திரன், செவ்வாய், அசுபபுதன், சனி, ராகு, கேது ஆகியவை அசுப கிரகங்கள்.  சுபசந்திரன், சுபபுதன், குரு, சுக்கிரன் ஆகியவை சுப கிரகங்கள்.  இவைகளில் சந்திரனும், புதனும், தங்களுடைய தன்மைகளை சுபமாகவும், அசுபமாகவும் மாற்றிக்கொள்ளக்கூடியவை.  இதை நாம் விரிவாக தெரிந்துகொள்ளுதல் நல்லது.

சந்திரன் தான் வழங்கும் ஒளியின் அளவை பொறுத்து, சுபகிரகம் என்றும் அசுபகிரகம் என்றும் குறிப்பிடப்படுகிறார்.  சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு மேல் இருக்கும்போது, சந்திரன் சுபகிரகம்.  பாதிக்கு கீழ் குறையும் போது அசுப கிரகம்.  குறிப்பாக சொன்னால், வளர்பிறை அஷ்டமி முதல், தேய்பிறை சப்தமி வரை சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு மேல் இருக்கும்.  ஆகவே இந்த திதிக்காலங்களில் சந்திரன் சுபசந்திரன்.  இதுவே தேய்பிறை அஷ்டமி முதல், வளர்பிறை சப்தமி வரை சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு குறைவாக இருக்கும்.  எனவே இந்த திதிக்காலங்களில் சந்திரன் அசுபசந்திரன்.  இந்த அசுபசந்திரன் மீது, குரு, சுக்கிரன், தனித்த புதன் ஆகியோரின் பார்வை விழுந்தால், சுபச்சந்திரனாகிவிடுவார்.  கடைசியாக சொல்லப்பட்ட இந்த விதியை நாம் மனதின் நன்றாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  சிலர் குறிப்பிடுவதுபோல் தேய்பிறை சந்திரன், அசுபசந்திரன் என்றும், வளர்பிறை சந்திரன், சுபசந்திரன் என்றும் பொதுவாக கொள்வது பெரும் தவறு.   புதன், அசுபகிரகங்களான, சூரியன், அசுபசந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன், ஒரே ராசியில் இணைந்திருந்தால், புதன் அசுபனாவார்.  இதுவே புதன் தனித்திருந்தாலும், குரு, சுக்கிரன், சுபசந்திரன், சுபர்பார்வைபெற்ற அசுபசந்திரன் ஆகியவர்களோடு, ஒரே ராசியில் இணைந்திருந்தால், புதன் சுபனாவார்.  எனவே, சந்திரன், புதன் ஆகிய இருவரை பொறுத்தவரை, மேற்கண்ட விதிகளை கவனத்தில் கொண்டு, இவர்களின் பார்வை, சுபமா? அல்லது அசுபமா? என்று தீர்மானிக்க வேண்டும்.  ஜாதகபலன் கூறும் போது, பலன் கூற இந்த விதிகள் பெரிதும் பயன்படுகிறன.

அதுபோல், ஸ்தான பலங்கள் கணிக்க, கிரகங்களின் ஸ்தானாதிபத்திய பார்வைகள் பெரிதும் உதவுகிறன.   ஒரு கிரகம், அது சுபகிரகமாக இருந்தாலும், அசுப கிரகமாக இருந்தாலும், அது தன் சொந்த வீட்டை பார்க்கும்போது, அந்த வீட்டை, அதன் பார்வை வலுப்படுத்தும்.  இது பொதுவாக சொல்லப்படும் விதியாகும்.  இதில் ஒரு நுணுக்கமும் உள்ளது.  அதை பற்றி விரிவாக, ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.  உதாரணத்திற்கு " மேஷ லக்னம் ", என்று கொள்வோம்.  செவ்வாயின் பார்வை மேஷத்தில் விழும்போது, மேஷம் லக்னம் என்பதால், அந்த பார்வை லக்னாதிபதி பார்வையாகும்.  இதனால் மேஷத்தின் லக்ன காரகத்துவங்கள் வலுப்பெறும்.  செவ்வாயின் பார்வை விருச்சிகத்தில் விழும்போது, விருச்சிகம் அஷ்டமம் என்பதால், அந்த பார்வை அஷ்டமாதிபதி பார்வையாகும்.  இதனால் விருச்சிகத்தின் அஷ்டம காரகத்துவங்கள் வலுப்பெறும்.  இங்கு, செவ்வாய் லக்னாதிபதி என்பதால், விருச்சிகத்தில் விழும் செவ்வாயின் பார்வை லக்னாதிபதி பார்வை என்று கொள்ளலாகாது.  மேஷம், விருச்சிகம் தவிர, மற்ற ஸ்தானங்களை செவ்வாய் பார்க்குமாறு ஜாதகம் அமையுமானால், அந்த பார்வைகள் செவ்வாய் என்னும் அசுப கிரகத்தின் அசுப பார்வையாக கொள்ள வேண்டும்.

இனி இதே மேஷ லக்னத்தை கொண்டு இன்னொரு உதாரணம் காணலாம்.  " குரு பார்க்க கோடி நன்மை ", என்று பொதுவாக சொல்லப்பட்டதை, எல்லா ஸ்தானங்களுக்கும் எடுத்துக்கொள்ளலாகாது.  மேஷ லக்னத்துக்கு குரு, பாக்கியம், விரையம் என்னும் இரு ஆதிபத்தியங்களை பெறுகிறார்.  எனவே குருவின் பார்வை தனுசில் விழும்போது அது பாக்கியாதிபதி பார்வையாகிறது.  இதுவே மீனத்தில் விழும்போது அது விரையாதிபதி பார்வையாகிறது.  மற்ற இடங்களில் விழும் போது, குரு சுபகிரகம் என்பதால், அவை சுபபார்வைகளாகிறன.  எனவே இத்தகைய நுட்பங்களையெல்லாம், கவனத்தில் கொண்டு, ஜாதகத்தை அணுகி பலன் சொல்லும்போது, அது வெற்றிகரமாக அமைகிறது.  நன்றி.  வணக்கம்.           

2 comments:

  1. அதேபோல் சனியின் 3, 7, 10 பார்வையின் பலனை எப்படி சொல்ல வேண்டும், செவ்வாயின் 4, 7, 8 பார்வையின் பலனை எப்படி சொல்ல வேண்டும், விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. Jothidam parka

    Ungala Epidi contact pannanum

    ReplyDelete