Sunday 4 October 2015

அந்தணன் இருக்குமிடம் பாழா?............................பகுதி 1



வணக்கம்.  கடந்த 27.9.2015 அன்று மதுரையில் நடந்த ? உலக தமிழ் ஜோதிடர்கள் மஹா சபை " யின் 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பெற்ற விழா மலரில் இடம் பெற்றது.  ..........................

ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " அந்தணன் எனும் குரு இருக்குமிடம் பாழ்!...................  எந்த அளவுக்கு உண்மை? ", என்ற தலைப்பில் உள்ள இந்த கட்டுரை பாரம்பரிய முறையை அனுசரித்து எழுதப்பட்டுள்ளது.  [ பகுதி எண். 1 ]  மொத்தம் ராசிக்கட்டங்கள் 12.  இவைகளில் குரு எந்த ராசியில் இருந்தாலும் அந்த ராசி பாழ்பட்டுப்போகும் என்று வழக்கமாக சொல்லப்படுகிறது.  சில தொடக்க நிலை ஜோதிடர்கள், இந்த வழக்கு மொழியை அப்படியே பின்பற்றி பலனும் சொல்லிவருகிறனர்.  இந்த வழக்குமொழியை ஆராயாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா?

எந்தவொரு கிரகமும், ஸ்தான பலத்தால், பகை, நீசம், என்னும் கீழ்னிலைகளை அடையும்போது அது, தான் இருக்கும் ஸ்தானத்தை பாழ்படுத்திவிடும்.  அதுபோல், 6. 8. 12, ஆகிய துர்ஸ்தானகளுக்கு அதிபதியாகும் போது, அவை தான் இருக்கும் ஸ்தானத்தை பாழ்படுத்தும்.  இதில் குரு மட்டும் விதிவிலக்கல்ல.  எனவே இந்த் இரு காரணங்களை வைத்து மேற்கண்ட வழக்குமொழி சொல்லப்படவில்லை என்று புரிகிறது. 

ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு வகையான காரகத்துவங்கள் உண்டு.  ஒன்றுக்கு இருப்பதைப்போல் மற்றொன்றுக்கு இருப்பதில்லை.  எனவே கிரகங்கள் தான் பெற்ற காரகத்துவங்களால், தான் இருக்கும் இடத்தை பாழ்படுத்தலாம்.  இதை பொதுவாக " காரகோ பாவ நாஸ்தி, " என்பதுண்டு.  இதன் அடிப்படையில், 2. 5. 9. 10. 11 ஆகிய ஸ்தானங்களுக்கு காரகனாக குரு இருப்பதால்,  மேற்கண்ட ஸ்தானங்களில் குரு இருக்கும்போது, அந்த ஸ்தானத்தை குரு பாழ்படுத்தும்.  சில ஸ்தானங்களை குரு முற்றிலுமாக பாழ்படுத்தாமல், பகுதியாக பாழ்படுத்துகிறது.  இந்த பகுதி பாழ்படுத்தலால், அந்த ஸ்தானம் சில நன்மைகளை தக்க வைத்துகொண்டு விடுகிறது.  2. 9. 10 ஆகிய ஸ்தானங்கள் குருவால் ஒரு பகுதி மட்டுமே பாழ்படுத்த முடியும்.  அது எவ்வாறு?......................

2 ஆமிடத்தை பொதுவாக குடும்பஸ்தானம் என்கிறோம்.  அதற்கு காரகனாக குருவை குறிப்பிடுகிறோம்.  இது பொதுவான நியதி.  இந்த 2 ஆமிடம் என்னும் பாவத்தை 4 உபபாவங்களாக பிரிக்கலாம்.  1. நேத்திரம்.  2. வாக்கு.  3. குடும்பம்.  4.  நிதி.  இந்த 4 உபபாவங்களுக்கும் 4 உபகாரகர்கள் உண்டு.  பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் நேத்திர உபகாரகன்.  இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நேத்திர உபகாரகன்.  வாக்குக்கு புதன் உபகாரகன்.  குடும்பத்துக்கு சந்திரன் உபகாரகன்.  நிதிக்கு குரு உபகாரகன்.  எனவே இந்த 2 ஆம் ஸ்தானத்தில் குரு அமரும்போது, " காரகோ பாவ நாஸ்தி ", என்ற அடிப்படையில், நிதி என்ற காரகத்துவத்தை மட்டுமே பாழ்படுத்த முடியும்.  மற்ற நேத்திரம், குடும்பம், வாக்கு ஆகியவற்றை குரு எதுவும் செய்யாது.  அவைகள் எல்லாம், அதனதன் காரகர்களின் நிலை பொறுத்து மாறுபடும். 

அதுபோல் 9 ஆமிடத்தை பாக்கிய ஸ்தானம் என்கிறோம்.  இதை இரு உபபாவமாக பிரிக்கலாம்.  1. பிதுர்ஸ்தானம்.  2. தர்மஸ்தானம்.  பகலில் பிறந்தவர்களுக்கு சூரியனும், இரவில் பிறந்தவர்களுக்கு சனியும் பிதுர்ஸ்தான உபகாரகர்களாவர்.  தர்மஸ்தானத்திற்கு குரு உபகாரகர்.  பாக்கிய ஸ்தானத்தில் குரு அமரும்போது, பிதுருக்கான எந்த காரகத்தையும் குரு பாழ்படுத்தமாட்டார்.  தர்மங்களை மட்டும் பாழ்படுத்திவிடுவார்.  இங்கு தர்மம் என்று குறிப்பிடப்படுவது, அடுத்தவர்களுக்கு, பொருளாதாரத்தால் உதவுவது மட்டுமல்ல.  ஒவ்வொரு இந்துவும் கடைபிடிக்க வேண்டிய இந்துமத சம்பிரதாய கடமைகளாகும்.  இதுவே இந்துதர்மம் எனப்படுகிறது.

 10 ஆமிடத்திற்கு சூரியன், குரு, புதன், சனி ஆகியோர் காரகர்கள்.  இந்த நால்வர் காரகத்துவங்களை பொறுத்து ஜீவனம் அமைகிறது.  எனவே இங்கு குரு அமர்ந்தால், குருவுக்குரிய ஜீவன காரகத்துவம் மட்டும் பாதிக்கப்படும் எனலாம்;  மொத்தத்தில் கூட்டி கழித்து பார்க்கும்போது, குரு இருக்குமிடம் பாழ் என்று மேலோட்டமாக சொல்லிவிட முடியாது.  அந்தந்த ஸ்தானங்களின் மற்ற காரகர்களையும் கவனித்து கணித்து சொல்ல வேண்டியதாகிறது.   

       

No comments:

Post a Comment