Friday 19 June 2015

" வாக்கியமும், திருக்கணிதமும் ", Part 2



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " வாக்கியமும், திருக்கணிதமும் ",  தொடர் பதிவு.  2.  விண்வெளியில் அலைந்து கொண்டிருக்கின்ற கிரகங்களின் தன்மைகள், நகரும் வேகம், சுழற்சி, செல்லும் பாதை ஆகிய விபரங்களை நமக்கு தெரிவிப்பது வான சாஸ்த்திரம்.  வான சாஸ்த்திரத்தின் மறுவடிவங்களே பஞ்சாங்கங்கள்.  கிரகங்களிலிருந்து வரும் கதிர்வீச்சுகளால் நமக்கு ஏற்படும் விளைவுகளின் நன்மை தீமை, ஆகியனவற்றை நமக்கு தெரிவிப்பது ஜோதிட சாஸ்த்திரம்.  இந்த தகவல்களை சென்ற பகுதியில் விரிவாக பார்த்தோம்.

இந்த வான சாஸ்த்திரத்தை எழுதியவர்கள் அதற்கு சித்தாந்தம், கரணகிரந்தம், வாக்கியகணிதம் என்றெல்லாம், அவரவர்கள் விருப்பத்திற்கிணங்க பெயர்களை இட்டனர்.  இவைகள் ஒவ்வொன்றும் கிரகங்களைபற்றி கொடுத்த தகவல்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகவே இருந்தன.  அதாவது கிரக நகர்வு வேகம், சுழற்சி வேகம், செல்லும் பாதை ஆகியவற்றின் கணிப்புகள் ஒரே மாதிரியாக இருக்கவில்லை.  இவைகளை பின்பற்றி உருவாக்கப்பட்ட பஞ்சாங்கங்களும், அதன் கணிப்புகளும் ஒரே மாதிரியாக அமையாமல் போயின.  நம் மெய்ஞானிகள் தங்கள் தவவலிமையாலும், ஞானதிருஷ்டியாலும் அறிந்த கணிப்புகளை கொண்டு இந்த வான சாஸ்த்திரங்கள் வெளிவந்தன.  பஞ்சாங்க கணிப்பாளர்கள் அவரவர்க்கு சிறந்தவர்களாக தோன்றிய மெய்ஞானிகளின் வானசாஸ்த்திரங்களை பின்பற்றி பஞ்சாங்கங்களை உருவாக்கினர்.  எனவே அக்காலத்திலேயே பஞ்சாங்கங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாகவே இருந்தன.  ஜோதிடர்களும், தாங்கள் விரும்பி போற்றக்கூடிய மெய்ஞானிகள் வழிவந்த பஞ்சாங்கங்களை விரும்பி வாங்கி பயன்படுத்தலாயினர்.  இந்த நடைமுறை இன்று வரை தொடரப்பட்டு வருகிறது.  அக்காலத்தில் மெய்ஞானிகள் நமக்கு கணித்து தந்த வானசாஸ்த்திர கணிதங்களை இன்று வரை பயன்படுத்தி வெளியிடப்படும் பஞ்சாங்கங்களே " வாக்கிய பஞ்சாங்கங்கள் ", எனப்படுகிறன.  இதிலிருப்பவை மெய்ஞானிகளால் வகுத்து தரப்பட்ட கணிதங்கள் என்பதால், மெய்ஞான வடிவாக திகழும் திருக்கோவில்கள் வாக்கிய பஞ்சாங்கங்களை பின்பற்றி வருகிறன.

அன்றாடம் விண்வெளியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் ஒரு உண்மை.  அதுபோல், காலப்போக்கில், கிரகங்களின் நகர்வு வேகம், சுழற்சி வேகம், நகரும் பாதை ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று விஞ்ஞானம் நிரூபித்தது.  விஞ்ஞானிகள் வெளியிட்ட கிர்கங்களை பற்றிய தகவல்களிலும் நிறைய மாற்றங்கள் இருந்தன.  இந்த மாற்றங்களையும், பஞ்சாங்கங்களில் கொண்டு வந்து கணிக்கவேண்டும் என்று விரும்பியவர்கள் கணித்து வெளியிடும் பஞ்சாங்கங்களே " திருக்கணித பஞ்சாங்கங்கள் ", எனப்படுகிறன.  சென்னையிலிருந்து வெளியாகும் வாசன் பஞ்சாங்கம், தன் கடைசி அட்டையின் உட்புறம், இது சம்பந்தமாக ஒரு அறிக்கையையும் வெளியிடுகிறது.  அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.

"  சூரியனும் சந்திரனும், பூமியும் ஆகர்ஷண சக்தியால், [ கிராவிடேஷன் ] ஒன்றுக்கொன்று இழுப்பதாலும், சந்திரனுடைய துங்கன் [ மூன்ஸ் அபாஜி, மூன்ஸ் ஆப்ஸ்லைன் ] நிலையை அனுசரித்து, சந்திரன் துங்க மண்டலத்தில் பாதை [ மூன்ஸ் ஆர்பிட் ] அப்போதுக்கப்போது வித்தியாசப்படுவதாலும், இதர கிரகங்களின் ஆகர்ஷண சக்தியால் சந்திரனுக்குண்டாகும் அசைவினாலும் சந்திரனுக்கு கதிபேதம் [ வேரியேஷன் இன் மோஷன் ] ஏற்படுகின்றது.  இவைகளை [ வேரியேஷன், எவக்ஷன், ப்ளேனிடேரிபெர்டேர்பேஷன் ] வாக்கிய கணணம் ஏற்பட்ட காலத்தில் நம் தேசத்தார் கண்டுபிடிகாததால், வாக்கிய கணிதத்தில் சேர்க்கவில்லை.  திருக்கணிதத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  அதனால் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும், திதி, நக்ஷத்திரம் முதலியவைகளின் நாழிகைகளில், அமாவாசை, பருவம், இவைகளை நெருங்கியிருக்கும் காலங்களில் கொஞ்சம் வித்தியாசமும், மற்ற காலங்களில் சுமார் 17 நாழிகை வரையிலும் வித்தியாசமும் நேரிடும். ".

மேற்கண்ட வித்தியாசம் நேர்வதால், வாக்கியப்படி கணிக்கப்படும் ஜாதகங்களுக்கும், திருக்கணிதப்படி கணிக்கப்படும் ஜாதகங்களுக்கும் வித்தியாசம் நேர்கிறது.  வாக்கிய பஞ்சாங்கங்களுக்கும், திருக்கணித பஞ்சாங்கங்களுக்கும் என்ன வித்தியாசம்? என்று குழுக்களிலும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் சந்தேகங்களை எழுப்பிய வாசகர்களுக்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.  இந்த இரண்டு பஞ்சாங்கங்களில் எந்த பஞ்சாங்கம் சரியானது?  எதை பயன்படுத்தலாம்? என்றும் கேட்பவர்கள் உள்ளனர்.  அதற்காக கவலைப்படவேண்டியவர்கள் ஜோதிடர்களே.  நன்றி.  வணக்கம்.      

    

No comments:

Post a Comment