Tuesday 7 April 2015

நக்ஷத்திர பலன்கள்............ஒரு பார்வை .



ம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ..............நக்ஷத்திர பலன்கள்............ஒரு பார்வை . [ பாரம்பரிய முறை ]   ஜாதக நோட்டுகளில் ' நக்ஷத்திர பலன் ', என்று விரிவாக எழுதப்படுகிறது.  ஊடகங்களிலும் நக்ஷத்திரத்தை மட்டும் குறிப்பிட்டு சில பலன்கள் சொல்லப்படுகிறன / எழுதப்படுகிறன.  இதை எந்த அளவுக்கு வாசகர்கள் ஏற்றுக்கொள்ளலாம்? அல்லது பின்பற்றலாம் என்பதை ஆராய்ந்து சுருக்கமாக எடுத்து சொல்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

ஸ்ரீராமபிரானுக்கு புனர்பூசம் ஜென்ம நக்ஷத்திரம் என ராமாயணம் சொல்கிறது.  ஸ்ரீமுருகப்பெருமானுக்கு விசாகம் ஜென்ம நக்ஷத்திரம் என கந்தபுராணம் சொல்கிறது.  அதுபோல் ஆழ்வார் திருனக்ஷத்திரங்கள் எனவும், நாயன்மார்கள் திருனக்ஷத்திரங்கள் எனவும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்தந்த நக்ஷத்திரங்களில், அந்தந்த மஹான்கள் அவதரித்திருக்கிறார்கள்.  அதே நக்ஷத்திரம் ஜென்ம நக்ஷத்திரமாக அமைந்துவிட்டால், அவர்களுக்கு அமைந்ததுபோன்ற குணாதிசயங்கள், உருவ அமைப்புகள் நமக்கு அமைகிறதா? என்றால் இல்லை.  ஜாதக அலங்காரம் எனும் நூல் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அகங்காரியாகவும், கடினமொழி உடையவனாகவும், கள்ளனாகவும் இருப்பான் என்று பலனாக எடுத்துரைக்கிறது.  ஸ்ரீராமபிரான் அப்படிப்பட்டவரா? என்றால் இல்லை.  விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், நீடுதுயில் பிரியனாகவும், முன்கோபியாகவும் இருப்பான் என்று பலனாக சொல்லப்படுகிறது.  ஸ்ரீமுருகப்பெருமானின் குணாதிசயங்கள் அப்படியா இருந்தது?  மிக உயர்ந்த சொல்லாகிய ' திரு ', என்பதை அடைமொழியாக கொண்டவை திருவாதிரையும், திருவோணமும் மட்டுமே.  ' ஐயமற உலகுதொழ ஒரு மணியாய் விளங்கிய ஆதிரை ', என்று ஜாதக அலங்காரம்  திருவாதிரையை சிறப்பித்து கூறுகிறது.  இதற்கு காரணம், திருவாதிரை, ஸ்ரீசிவபெருமானோடு தொடர்புடையதாகும்.  மேற்கண்ட ' திரு ', என்ற அடைமொழி கொண்ட நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் எல்லாம் தெய்வாமசம் பொருந்தியவர்களா? என்றால் இல்லை.  பொய்யுரை சொல்பவன் என்றும், தரித்திரன் என்றும், நோயன் என்றும், திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு இலக்கணமாக ஜாதக அலங்காரம் நக்ஷத்திர பலன் சொல்கிறது. 

அதுபோல் உருவ அமைப்பில் புனர்பூச நக்ஷத்திரத்தை ஜென்ம நக்ஷத்திரமாக கொண்டவர்களில் சிகப்பாக உள்ளவர்களும், விசாகம் நக்ஷத்திரத்தை ஜென்ம நக்ஷத்திரமாக கொண்டவரகளில் கருப்பாக உள்ளவர்களும் உண்டு.  ஆழ்வார், நாயன்மார் திருனக்ஷத்திரங்களில் பிறந்தவர்களில் நாத்திவாதிகளும் உண்டு.  இப்படிப்பட்ட முரண்பாடுகள் இருப்பதை சிந்தித்து பார்த்தால், நக்ஷத்திரபலன்படி குணாதிசயம் கொண்டவர்களும், சாமுத்திரிகா லக்ஷணங்களை கொண்டவர்களும் குறைவு என்பது நன்றாக விளாங்கும்.  ஒவ்வொருவருடைய நடை, உடை, பாவனை, நிறம், தோற்றம் ஆகியவற்றை ஜாதககட்டத்திலுள்ள கிரக அமைப்புகளே தீர்மானிக்கின்றன.  

பின் ஏன்" நம் முன்னோர்கள், ஜென்மநக்ஷத்திரபலன், ஜென்மராசிபலன், ஜென்மலக்னபலன் என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள் என்ற கேள்வி எழும்.  இந்த பலன்களெல்லாம் வைத்து ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானித்துவிட முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.   ஜாதகம் கணிக்கும்போது, நக்ஷத்திரசந்தி, ராசிசந்தி, லக்னசந்தி, ஆகியன ஏற்படுவதுண்டு.  இதை பற்றி என்னுடைய பிளாக்ஸ்பாட்டில் ' சந்தியில் பிறந்தவர்களுக்கான பதிவு ', என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  அதில் இந்த சந்திகளை பற்றிய முழுவிபரங்கள் உள்ளன.  முகவரி.  www.josyamramu.blogspot.com  இந்த சந்திகளை திருத்தியமைத்து ஜாதகம் எழுதவேண்டும்.  திருத்தும்போது, இந்தலக்னமா? அந்தராசியா? எந்தனக்ஷத்திரம் என்றெல்லாம் சந்தேகங்கள் வரும்.  இதற்கு தீர்வு காண பல வழிமுறைகள் உள்ளன.  அந்த வழிமுறைகளில் ஒன்று நக்ஷத்திரபலன்.  இதை ஜோதிடர்கள், ஜாதகம் கணிக்குபோது, தன் சொந்த பயன்பாட்டிற்க்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இதை வைத்து ஜாதகர்களுக்கு பலன் சொல்கிறேன் என்று ' நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கல் ', என்று அறிவுருத்துவது தவறாகும்.  அதுபோல் வாசகர்களும், இந்த நக்ஷத்திரபலன், ராசிபலன், லக்னபலன், சாமுத்திரிகா லக்ஷணம், ஆகியவற்றை தனக்காக தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்டது என்று எண்ண வேண்டாம்.  இப்படி எண்ணுவதால் வீணான குழப்பங்களே அதிகரிக்கும்.   ஆகவே ஜனன ஜாதகப்படி அமையும் புறஅழகு, அகஅழகு ஆகியன மட்டுமே நிரந்தரமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அதிலும் புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முதலிடம் தந்து, அதை செம்மையாக்கிக்கொண்டு, வாழ்க்கையில் நற்புகழை அடையுங்கள்.  இறைவன் நல்லருள் புரிவானாக.  நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment