Sunday 19 October 2014

ஸ்ரீபைரவர் வழிபாடும் ஜோதிடமும்



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வ்ணக்கம்.   ஸ்ரீபைரவருடைய அவதார தினமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தை புராணங்கள் எடுத்து சொல்கிறன.  எனவே வருடந்தோறும் அன்னாளை ஸ்ரீபைரவாஷ்டமி என திருக்கோவில்களில் கொண்டாடுகிறார்கள்..  இதனால் இந்த நாளை மாதந்தோறும் நினைவுகூறும் வகையில் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீபைரவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.  புராணப்படி மட்டுமல்ல.  ஜோதிடப்படியும் இந்த தினம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகிறது. 

காலபுருஷ தத்துவப்படி, ஸ்ரீபைரவருடைய ஜென்ம மாதமாகிய கார்த்திகை எட்டாமிடமாகிறது.  அதாவது விருச்சிக ராசி.  ராசியாதிபதி செவ்வாய் என்பதால் ஸ்ரீபைரவர் செவ்வாய்க்குரிய வழிபடும் தெய்வமானார்.  மேலும் எட்டாமிடத்திற்குரிய காரகத்துவம் பெற்றவர் சனிபகவான்.  எனவே சனிக்குரிய வழிபடும் தெய்வமாகவும் ஆனார்.  செவ்வாய்க்குரிய தெய்வமாக ஸ்ரீமுருகப்பெருமானும், சனிக்குரிய தெய்வமாக ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகிய தெய்வங்களை ஜோதிடனூல்கள் குறிப்பிடும்போது, ஸ்ரீபைரவரையும் குறிப்பிட ஒரு காரணம் உள்ளது.  செவ்வாய், சனி இருவரும், ஸ்தானாதிபத்தியப்படியும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையிலும் முழு சுபராக இருப்பின் முறையே, ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீவினாயகர், ஸ்ரீதர்மசாஸ்த்தா, ஸ்ரீஆஞ்சனேயர் ஆகியோர் வழிபடும் தெய்வமாவர்.  செவ்வாயும், சனியும், ஸ்தானாதிபத்தியத்தாலும், ஸ்தானத்தில் இருக்கும் நிலையாலும் அசுபத்தன்மை பெற்றால் ஸ்ரீபைரவர் வழிபடும் தெய்வமாவார். எனவே அவரது அவதாரம், காலதத்துவபுருஷப்படி அஷ்டமஸ்தானத்திலும், சந்திரனின் அஷ்டம்திதியிலும், அதுவும் தேய்பிறையிலும் நிகழ்ந்தது.  தாய், தந்தை எனப்படும் இரு கிரகங்களும் அசுபத்தன்மையோடு இருப்பதை பார்க்கமுடிகிறது.

சிற்ப சாஸ்த்திரங்கள் ஸ்ரீபைரவரை அஷ்ட சக்திகளாக பிரித்துள்ளது.  மூலசக்தி ஸ்ரீகாலபைரவர்.  ஜோதிட சாஸ்த்திரமோ ஸ்ரீபைரவரை நவசக்திகளாக பிரித்துள்ளது. ஒவ்வொரு சக்தியும், ஒவ்வொருகிரக அம்சம் எனவும் வகுக்கப்பட்டுள்ளது.  அதன் பட்டியலை கீழே காணலாம்.

1. சூரியன்        -   சுவர்ணாகர்ஷணபைரவர்   
2. சந்திரன்        -  கபால பைரவர்                    
3. செவ்வாய்      - சண்ட பைரவர்                  
4. புதன்           - உன்மத்த பைரவர்                 
5. குரு           - அசிதாங்க பைரவர்               
6. சுக்கிரன்        - ருரு பைரவர்                  
7. சனி           - குரோத பைரவர்                 
8. ராகு           - சம்ஹார பைரவர்                  
9. கேது          - பீஷண பைரவர் 

சனியும், செவ்வாயும், தனித்தனியாகவோ, அல்லது இணைந்தோ, மேலும் வேறு கிரகத்துடன் கூட்டு சேர்ந்தோ கெடுபலனை தருமானால், கூட்டு சேர்ந்த கிரகம் எதுவோ அதற்குரிய அம்ச ஸ்ரீபைரவரை வணங்கவேண்டும்.  இதனால் கெடுபலன் குறையும். 

1.  ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவதால் பொருளாதார சிக்கல்கள் தரக்கூடிய கெடுபலன் குறையும்.  இவருக்குரிய ஸ்தலம்.  கும்பகோணம் ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் கோவில்.  2.  ஸ்ரீகபாலபைரவரை வணங்குவதால், மனதில் ஏற்படும் உளைச்சலும், அதனால் ஏற்படக்கூடிய சித்தப்பிரமை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  திருவிற்குடி, திருப்பூந்துருத்தி.  3.  ஸ்ரீசண்ட பைரவரை வணங்குவதால் போட்டி, பொறாமை, கடுமையான எதிரிகள் தொல்லை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில்.  4.  ஸ்ரீஉன்மத்த பைரவரை வணங்குவதால் அரைகுறை ஞானசூன்யம், மற்றும் பித்துபிடித்த நிலைக்கு ஆளாகும் நிலை தரக்கூடிய கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  திருவீழிமிழிலை.  5.  ஸ்ரீஅசிதாங்கபைரவரை வணங்குவதால், தொழிலில் காணப்படும் படைப்புத்திறன் குறைதல், மந்தனிலை ஆகியன குறையும்.  ஸ்தலம்.  சீர்காழி ஸ்ரீசட்டனாதர் ஆலயம்.  6.  ஸ்ரீருருபைரவரை வணங்குவதால், கற்பித்தல், மற்றும் கற்றுகொள்ளல் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகளுக்கான கெடுபலன் குறையும்.  ஸ்தலம், திருமருகல், ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோவில்.  7.  ஸ்ரீகுரோதபைரவரை வணங்குவதால் காரணமின்றி விளையக்கூடிய, கோப, ஆவேச குணங்களால், அடுத்தவர்கள் தரும் துன்பங்கள் குறையும்.  ஸ்தலங்கள்.  திருவிசைனல்லூர், திருனறையூர்.  இவ்விரண்டும் தஞ்சை மாவட்டத்திலுள்ளன.  8.  ஸ்ரீசம்ஹாரபைரவரை வணங்குவதால் பூர்வபாபகர்ம வினையால் விளையாக்கூடிய துன்பங்கள் குறையும்.  ஸ்தலங்கள்.  திருவெண்காடு, கொல்லிமலை, வைரவன்பட்டி.  9.  ஸ்ரீபீஷணபைரவரை வணங்குவதால், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பயங்கர கெடுபலன் குறையும்.  ஸ்தலம்.  ராமேஸ்வரம், பிரான்மலை.

உங்கள் ஊருக்கு அருகில் உல்ல ஸ்ரீசிவபெருமான் கோவிலில் மேற்கண்ட ஸ்ரீபைரவ மூர்த்தங்கள் இருப்பின் அங்கேயே வழிபாடு செய்யலாம்.

மேற்கூறிய சிவஸ்தலங்களில், அந்தந்தந்த பைரைவருக்கு தனிசன்னதிகள் உள்ளன.  ஸ்ரீபைரவருக்குரிய அம்சமறிந்து, அந்த அம்ச கிரகத்துக்குரிய பரிகாரவழிபாடுகளை ஸ்ரீபைரவருக்கு செய்யவேண்டும்.  பொதுவாக மேற்கூறப்பட்ட எல்லா கெடுபலனுக்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்கலாம்.  சனி, செவ்வாய் தனித்தனியாகவோ, இணைந்தோ, மற்ற கிரகத்துடன் கூட்டணி கொண்டோ உருவாக்கும், கண்டம், தீராதநோய், கட்டுப்படாத கடன்சுமை, வம்புவழக்குகள், எல்லா முயற்சிகளிலும் ஏற்படும் தடை ஆகியவற்றிற்கும் ஸ்ரீகாலபைரவரை வணங்குவது சிறப்பு.  மேற்கூறப்பட்ட கெடுபலன்கள், அதை உருவாக்கும் கிரகங்கள், அதற்குரிய ஸ்ரீபைரவர் வழிபாடு ஆகியவற்றை நாமே சுயமாக அறிந்துகொள்ளவும், அதற்குரிய வழிபாடுகளை செய்யவும் முயற்சிக்காமல், நல்ல அனுபவமுள்ள ஒரு ஜோதிடரின் வழிகாட்டுதலுடன் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.  அதற்கு ஸ்ரீபைரவர் திருவருள் புரிவாராக.  நன்றி.  வணக்கம்.   

No comments:

Post a Comment