Thursday, 30 January 2014

மாங்கல்ய தோஷ ஜாதகம் அமைந்ததால் வருத்தம் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கான பதிவு



ஓம் நமசிவாய.  மாங்கல்ய தோஷ ஜாதகம் அமைந்ததால் வருத்தம் கொண்டிருக்கும் சகோதரிகளுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ]  இதில் ஜோதிட ஆராய்ச்சி எதுவும் கிடையாது.  வருத்தத்தில் இருக்கும் சகோதரிகள், தன்னம்பிக்கை பெறுவதற்கும், நிம்மதியடைவதற்கும் தேவையான வழிகாட்டுதலை மேற்கொள்ளும் முயற்சி இது.

ஜாதங்களில் திருமணமே ஆகாது என்ற அமைப்புடைய ஜாதகங்கள் உள்ளன.  ஆனால் மாங்கல்ய தோஷம் என்பது அவ்வாறு இல்லை, இந்த தோஷம் நிரந்தரமாக திருமணத்தை தடை செய்துவிடாது.  எனவே வாழ்க்கையில் திருமணமே இல்லையா? என்ற குழப்பத்தை தவிர்த்து விடவேண்டும். " மாங்கல்ய தோஷம் உடைய பெண்  கழுத்தில் மாங்கல்யம் தங்காது.  விதவையாகிவிடுவாள்.  இப்படிப்பட்ட ஜாதகங்களால் கணவன் உயிருக்கு ஆபத்து" ; என்றெல்லாம் பரவலாக கருதப்படுகிறது.  இதனால் இப்படிபட்டவர் ஜாதகங்கள் பொருத்தம் பார்க்கும் போது ஒதுக்கப்பட்டு விடுகின்றன.  இப்படியே எல்லோரும் ஒதுக்கிக்கொண்டிருந்தால் இதற்கு முடிவுதான் என்ன?  இதற்கு தீர்வாக சில பரிகாரங்கள் சொல்லப்பட்டு, இதை செய்தால் தோஷம் நீங்கும் என்றும் கருதப்படுகிறது.  தோஷ பரிகாரம் முடிந்தபின் அதே ஜாதகத்தை வேறொரு ஜோதிடர் மீண்டும் தள்ளுபடி செய்துவிடுகிறார்.  அப்படியானால் என்னதான் செய்வது?  பாப / தோஷ சாம்ய விதிமுறைப்படி பொருத்த நிர்ணயம் செய்யும் ஜோதிடர், இந்த ' தள்ளுபடி " தவறை செய்யமாட்டார்.  இது தெரிந்தவர் சிலராகவே உள்ளனர்.

மாங்கல்ய தோஷ பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கிவிடும் என்பது உண்மையல்ல.  ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் பரிகாரத்திற்குப்பின் திடீரென்று இடம் மாறிவிடப்போவதில்லை.  இறைவன் துணையை நாடும் போது, அவனருளால் நீண்ட நெடிய ஆயுள் உள்ள கணவன் கிடைக்கவும், விரைவில் திருமணம் நடக்கவும் வழி பிறக்கும்.  நீண்ட ஆயுள் வரனைபற்றியும், தோஷத்தை பற்றியும் பின்னர் விரிவாக பார்ப்போம்.  பரிகாரம், வழிபாடு என்ற பெயரில் இறைவனை வணங்குவதோடு மட்டுமல்லாமல் அதை சமுதாய நோக்கோடு செய்யும்போது புண்ணியம் பெருகி, ஜனன ஜாதக பூர்வபுண்ணியஸ்தானம் பலப்படும்.  வேண்டுதல் பலிக்கும்.  இதைத்தான் சைவ சித்தாந்தம் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என்று சொல்கிறது.  ஜாதகர்களுக்கு இப்புண்ணியங்களை பெருகச்செய்வதில், ஜோதிடருக்கு பெரும் பங்கு உள்ளது.  பதி புண்ணியமாக கிரகபரிகாரங்களையும், சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று இறைவழிபாட்டையும் மேற்கொள்ளச்செய்யவேண்டும்.  பசு புண்ணியமாக கிரகங்களின் காரகத்துவப்படி, மனிதன் உட்பட இவ்வுலக ஜீவன்களுக்கு நல உதவிகளையும் செய்யுமாறு சொல்லவேண்டும். பசு புண்ணியம் செய்யும்போது கோசரப்படி அப்போதைய பூர்வபுண்ணியஸ்தானம் பலப்படும்.  இப்படி நல்ல முறையில் அமையும் பூர்வபுண்ணியஸ்தானங்கள் செயல்படும் போது பெண்ணுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

மாங்கல்ய தோஷம் உடைய பெண் ஜாதகத்தோடு, நீண்ட ஆயுள் உடைய ஆண் ஜாதகத்தை இணைக்கவேண்டும்.  இப்படி திருமணம் செய்துகொள்வதால், ஆணின் ஆயுள்ஸ்தானம் பாதிக்கப்பட்டுவிடாது.  அதாவது பெண்ணின் தோஷம் ஆண் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை இடம் மாற்றிவிடப்போவதில்லை.   மாங்கல்ய தோஷமுடைய பெரும்பாலான பெண்களுக்கு நீண்ட ஆயுள் நிச்சயம் இருக்கும்.  அனுபவத்தில் இப்படிப்பட்ட பல ஜாதகங்களை பார்வையிட்ட ஜோதிடர்களுக்கு இவ்வுண்மை தெரியும்.  இவ்விரு ஜாதகங்களை இணைக்கும் போது இருவரும் நிச்சயம் நீண்ட ஆயுள் பெறுவர்.  இவர்களை மாங்கல்ய தோஷமானது, வாழ்க்கை வாழ்ந்து விட்ட நிறைமனதோடு இருக்கும் வயதான கால கட்டத்தில்தான் பாதிக்கும்.  அப்போது அதன் பாதிப்பு பெரிதாக தோன்றாது. புகழ் பெற்ற ஜோதிடர்கள் இப்படிப்பட்ட ஜாதகங்களை இணைக்கும் முறையை கையாண்டு வழி காட்டியிருக்கிறார்கள். நம்மில் சிலர் இதை நடைமுறை படுத்திவருபவர்களும் இருக்கிறார்கள்.  ஜாதகம் திரும்ப, திரும்ப தள்ளுபடி செய்யப்பட்டு. கண்ணீருடன் காலம் கழிக்கும் பெண்ணின் பாபத்திற்கு ஆளாகாமல், இருவரை இணைப்பதன் மூலம், இவ்வழியை செயல்படுத்தாதவர்கள், செயல்படுத்தி புண்ணியம் பெற்றவர்களாகலாம். 

எவ்வகைப்பட்ட பரிகார வழிபாடுகளை பெண் செய்தாலும், அதை பிள்ளை வீட்டார் ஏற்றுக்கொள்ளுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.  ஆகவே மாங்கல்ய தோஷ பெண்ணின் வாழ்க்கையை ஒளிமயமாக்கும் பொறுப்பு பிள்ளைவீட்டாருக்கும் உண்டு.  இவ்விஷயத்தில் ஜோதிடர் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  நம்மால் [ ஜோதிடர்கள் ] முடிந்ததை நாம் செய்வோம்.  இறைவன் அருள் புரிவானாக.

3 comments:

  1. பிள்ளை வீட்டார் பரிகாரம் செய்யப்பட்டுள்ள விபரம் எப்படி தெரிந்துகொள்வார்கள்?

    ReplyDelete
  2. ஜாதங்களில்மாங்கல்ய தோஷம் உடைய பெண் கழுத்தில் மாங்கல்யம் தங்காது. விதவையாகிவிடுவாள்.கணவன் உயிருக்கு ஆபத்து இதற்கு தீர்வாக சில பரிகாரங்கள் செய்தால்தோஷம் நீங்கும் .தோஷ சாம்ய விதிமுறைப்படி பொருத்த நிர்ணயம் செய்யும் ஜோதிடம் தெரிந்தவர் சிலராகவே உள்ளனர். பதிபுண்ணியம் விரைவில் திருமணம் நடக்கவும் பசுபுண்ணியம் எவ்வகைப்பட்ட மாங்கல்ய தோஷதோஷ பெண்ணின் வாழ்க்கையையும் ஒளிமயமாக்கும்.சோதிடர்கள் பாப சாமியமென்றால் என்ன எப்படி பாப நிர்ணயம் செய்வது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும் .ஒரு பெண்ணின் பாபத்தை காட்டிலும் பையனின் பாபம் 1/4 பங்காவது கூடுதல் இருக்கவேண்டும் .பெண்ணின் பாபத்தை ஆளக்கூடியதாக பையனின் ஜாதகம் இருக்கவேண்டும் .இதை சோதிடம் பார்கவருபவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ளாமல் நம்மை ஒரு ஏளனமாக பார்த்துவிட்டு அந்த ஜோசியர் நான் சொல்லும் பரிகாரத்தை செய்தால் போதுமென்கிறார் நீங்கள் பாபம் அப்பிடி இப்பிடி என்று சொல்கிறீர்கள் என்று நேரிலேயே கேட்டு நம்மை பைத்தியக்காரனாய் ஆக்குகிறார்கள் .இதனால் நான் வாஸ்து மட்டும் தொழிலாய் வைத்துக்கொண்டு மிகவும் வேண்டியவர்களுக்கு அதாவது நம்மை புரிந்தவர்களுக்கு மட்டுமே ஜாதகம் ,மற்றும் பொருத்தம் பார்த்து வருகிறேன் .நன்றி ஐயா .

    ReplyDelete
  3. திருமணமே ஆகாத ஆண் பெண் ஜாதகம் .இது விதி .பெண்ணுக்குவிஷ கன்யாதோஷம் மாங்கல்ய தோஷம் ,நாகதோஷம் ஆணுக்கு .தாரதோஷம் ,.இருவருக்கும் செவ்வாய் தோஷம் இப்படியான ஜாதகங்களுக்கு விஷகன்யா யோகம் மாங்கல்ய தோஷ பெண்ணுக்கு நல்ல ஆயுள் பெற்ற ஆணையும் ,தார தோஷ ஆணுக்கு இதே போன்ற புனர்பூ தோஷமுள்ள பெண்ணையும் ஜாதக க்ரஹ நிலைப்படி இணைத்தல் அவசியம் .இப்படி இணைத்த பின் பரிகாரம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.ஜாதக நட்சத்ர பொருத்தம் மட்டு ம் பார்த்துவிட்டு பாப பொருத்தம் திசாசந்தி இதை பார்க்காமல் பரிகாரம் மட்டும் செய்து திருமணம் செய்வது தம்பதிகளுக்கு நலம் செய்வது இல்லை .ஒரு குழந்தை பிறப்பது வரை மட்டுமே மணப்பொருத்தம் செல்லும் . குழந்தை பிறந்த பின் .தாய் தந்தை இறப்போ ,பிரிவோ அது குழந்தையின் ஜாதகப்படியே இயங்கும் .நன்றி.

    ReplyDelete