ஓம் நமசிவாய. நண்பர்களுக்கு வணக்கம். தோஷ நிவர்த்தி பற்றி ஜாதகர்களுக்கான சுருக்கமான
பதிவு இது. [ பாரம்பரிய முறை ]. தோஷ ஜாதகங்களால் பாதிக்கப்பட்டவர்கள், ஏதாவது ஒரு
பரிகாரம் செய்தால், அதற்கான நிவர்த்தி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பரிகாரவழிபாடுகளை
மேற்கொள்வதுண்டு. ஆனால் சிலர், என்னதான் பரிகாரவழிபாடுகள்
செய்தாலும், துன்பம் விலகாமல் அவதிப்படுகிறார்களே! அது ஏன்?
சிந்தித்துப்பார்த்தால் தோஷம் விலகும் ஜாதகம், விலகாத ஜாதகம் என இருவகை உண்டோ!
என்று எண்ணத் தோன்றுகிறது. உண்மையும் அதுதான். இதில் தன்னுடையது எந்த வகை? என்பதை ஒரு அனுபவமும்,
திறமையும் உள்ள ஜோதிடரால் சொல்லவியலும்.
தோஷ ஜாதகங்களை நாம் இருவகையாக
பிரிக்கலாம். 1. தற்காலிக தோஷ ஜாதகம். 2. நிரந்தர தோஷ ஜாதகம். உதாரணத்திற்கு ஒரு தற்காலிக தோஷத்தை பார்க்கலாம். நாக [ சர்ப்ப ] தோஷம். இது திருமணத்தடையை தற்காலிகமாக, ஆண்களுக்கு 30 வயது
வரையிலும், பெண்களுக்கு 25 வயது வரையிலும் ஏற்படுத்தும். இந்த தோஷத்தின் நோக்கமே இளமையில் இல்லறசுகத்தை அனுபவிக்க
விடாமல் தடுப்பதாகும். 30/25 வயதுக்கு மேல்
இந்த தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனப்பட்டுக்கொண்டு வரும். எனவே 40 வயதுகளில் இந்த தோஷத்தை
பற்றிய பேச்சே வருவதில்லை. இந்த தோஷமுடைய,
இளமையில் திருமணமான தம்பதியரை கேட்டால், இல்லற சுக தடையை பற்றி வருத்தத்தோடு சொல்லுபவர்களை
அனுபவத்தில் பார்க்கலாம். எனவே இவ்வகை தோஷமுடையவர்கள் 30/25 வயதுக்கு மேல் திருமணம்
செய்து கொள்வது நல்லது. இவ்வாறு 30/25 வயதுக்கு
மேல் திருமண ஏற்பாடு செய்யும்போது, நாகதோஷ பரிகார வழிபாடுகளை செய்துகொள்வது நல்லது. இதனால் பொருத்தமான துணை கிடைத்து சுகமாய வாழ இறைவன்
அருள் புரிவார்.
இனி ஒரு உதாரணத்தோடு நிரந்தர
தோஷம் ஒன்றை பார்க்கலாம். எந்த தோஷமாக இருந்தாலும்,
அது நிவர்த்தியடைய வேண்டுமானால், அதற்கு பாக்கிய ஸ்தான ஒத்துழைப்பு இருக்கவேண்டும். சென்ற பிறவியில் நாம் செய்த பாவமானது, இப்பிறவி
ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானத்தை பாபக்கிரகங்களால் பாதிப்படைய செய்துவிடும். இதைத்தான் ஜோதிடர்கள் " கர்மபலன் " என்கிறனர். சுபபலன், அசுபபலன் என்பது வேறு. கர்மபலன் என்பது வேறு. கர்மபலனை நாம் அனுபவித்தே ஆகவேண்டும். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், இதில் சிக்கிக்கொள்ளும்
தோஷங்களில் ஒன்று புத்ரபாக்ய தோஷமாகும். சிலருக்கு
குழந்தையே இல்லை என்பது இந்த காரணத்தால் ஏற்படுவதுதான். அதிலும் கணவன், மனைவி இருவருக்கும் கர்ம பலன் பாதிப்பு
இருந்துவிட்டால், தத்துப்பிள்ளை கூட நல்ல முறையில் அமையாமல் போவதுண்டு. இவ்வகை ஜாதகர்களுக்கு எவ்வித பரிகாரவழிபாடுகளும்
கை கொடுக்காமல் போய்விடுகிறது.
எனவே தோஷம் என்றாலே நிவர்த்தி
செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் தவறானதாகும். நிவர்த்தி செய்தால் எல்லா பாவங்களும் நீங்கி தோஷனிவர்த்தி
அடைந்துவிடலாம் என்பது மெய்யானதென்றால், எல்லோரும் அவரவர் குறைகளுக்கேற்ப பரிகாரவழிபாடுகளை
செய்துகொண்டு, அனைவரும் நலமாக இருந்துவிடலாமே.
இதனால் உலகத்தில் கஷ்டப்படுபவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகலாமே. மொத்தத்தில் பொதுவாக தோஷங்களிலிருந்து விடுதலை பெற,
பாபகாரியங்களை செய்யாமல், புண்ணியகாரியங்களை செய்துவருவதே நல்ல வழியாகும். இவ்வகையான வழிகாட்டிகளாக விளங்குபவர்கள், நல்லெண்ணம்
கொண்ட, திறமையான, அனுபவசாலியான ஜோதிடர்களே என்பதில் சந்தேகமேயில்லை. நன்றி.
[:::::::::முக்கிய குறிப்பு::::::::::::::
] பரிகாரவழிபாடுகள் செய்யும் போது, திருக்கோவில் வழிபாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல்,
இவ்வுலக ஜீவராசிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும், என்பது எனது தாழ்மையான கருத்து. கிரக, பாவ காரகத்துவங்களில் அதற்கான வழிமுறைகள்
அடங்கியுள்ளன. ஜோதிடர்கள் பரிகாரவழிபாடுகளை
சொல்லும்போது, இது விடுபட்டுப்போனாலும் ஜாதகர்களாக இதை கேட்டறிந்து சமூக நலச்செயல்களை
செய்வதில் தவறில்லை. இதுவும் ஒரு புண்ணியகாரியமே. ஒருமுறை சந்திரதசை, புதன்புக்தியால் பாதிக்கப்பட்ட
ஒருவருக்கு, திருக்கோவில் பரிகாரவழிபாடுகளை பற்றி சொன்னதோடு மட்டுமல்லாமல், ஒரு ஏழை பெண்ணுக்கு கல்வி உதவி செய்யுங்கள் என்று அறிவுருத்தினேன். இது கிரக காரகத்துவப்படி சரியானதாகும். திடீரென்று ஒரு நாள், ஒரு பெண் " நீங்கள் சொன்ன
பரிகார அறிவுரையால் ஜாதகர் என்னுடைய இந்த ஆண்டின் கல்வி செலவுக்கு உத்திரவாதம் அளித்துள்ளார்.
உங்களுக்கு நன்றி ", என்று கூறியபோது எதிர்பாராத மகிழ்ச்சியடைந்தேன். .
No comments:
Post a Comment