ஓம் படைவீட்டம்மா துணை. அனைவருக்கும் வணக்கம். ... " அக்ஷயதிரிதியை ", ஒரு குசேல பார்வை.
........... பாரம்பரிய முறையிலான ஜோதிட பதிவு.
........... பல பெண் குழந்தைகளை பெற்று, கட்டிக்கொடுக்க
கடுகளவு கூட தங்கம் இல்லாமல் கவலைப்படும் கலியுக குசேலர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். ............. அக்ஷயதிரிதியை அன்று தங்கம் வாங்கினால், அது ஆண்டாண்டு
காலமாக பெருகிக்கொண்டே இருக்கும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதைபற்றி சிந்திக்கும் போது பின்னணியில் சில கேள்விகள்
எழுகிறன. அக்ஷய திரிதியைக்கு சொர்ண அக்ஷய
திரிதியை என்று ஏதாவது சிறப்பு பெயர் உள்ளதா?
{ அக்ஷய என்றால் குறைவின்றி வளரும். என்ற பொருள் உள்ளது. } குண்டுமணி அளவுகூட தங்கம் வாங்க முடியாதவர், அக்ஷயதிரிதியை
அன்று தங்கம் வாங்காவிட்டால், அவர் வாழ்க்கையில் தங்கமே சேராதா? அப்படியானால் ஸ்ரீமஹலக்ஷ்மியின் அருள் அக்ஷயதிரிதியை
அன்று தங்கம் வாங்கும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா? தெய்வம் தங்கத்துக்கு மயங்கி அடிமையாகிவிடுமா? இவையெல்லாம் இல்லையென்றானால் உண்மையில் அக்ஷயதிரிதியையின்
பொருள்தான் என்ன? {{ ஒரு முதிர்கன்னியின் கேள்வி
இது ............ அக்ஷயதிரிதியை அன்று நல்ல
முஹூர்த்தனாளாக இருக்கும். பிற்காலத்தில் பெருகும்
என்பதற்காக, இப்போது குண்டுமணி தங்கத்துடன் என்னை திருமணம் செய்துகொள்ள யாராவது தயாரா? மன்னனாக வாழும் கண்ணன் வேண்டாம். மரவுரி தரித்த ராமன் போதும். }}
............. ஜோதிட ரீதியாக விடை காண்போம். .....................
அக்ஷயதிரிதியை அன்று தங்கம்
வாங்கினால் அது வருஷம் முழுதும் மென்மேலும் பெருகும் என்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் பரமாத்மா குசேலருக்கு செல்வத்தை அள்ளி
வழங்கிய நாள். அதுபோல் நமக்கும் பரமாத்மா செல்வத்தை
அள்ளி வழங்குவார். இதிலும் சில கேள்விகள் முளைக்கிறன. குசேலருக்கு 27 குழந்தைகள். திருமணமாகி கிட்டத்தட்ட இருபத்திரண்டரை ஆண்டு காலம்
பஞ்சத்திலேயே வாழ்ந்திருக்கிறார் என்று குழந்தைகளின் பிறப்பை வைத்து கணக்கிட்டுவிடலாம். இத்தனை ஆண்டில் எத்தனை திரிதியைகள் வந்துபோயிருக்கும். ஒன்றுகூடவா பரமாத்மாவின் கவனத்திற்கு வராமல் போனது. குசேலர் பஞ்சப்பராரி என்று பரமாத்மாவுக்கு தெரியாதா? அருள் தர இவ்வளவு தாமதமா? அல்லது குசேலர் பரமாத்மாவை மறந்தே போய்விட்டாரா? இவ்வளவு கேள்விகளுக்கும் விடை காண்பதே இப்பதிவின்
நோக்கம். ஒரு ஜாதகத்தில் தங்கக்கொடுப்பினை
இல்லையென்றால், அந்த ஜாதகப்படி ஸ்ரீமன் நாராயாணனே அவதரித்தாலும், தங்கம் அவருக்கு உடைமையாகிவிடாது. ஒரு ஜாதகத்தில் தங்கயோகம் அமைந்துவிட்டால், பரமதரித்திரன்
குசேலன் கூட குபேரனாகிவிடுவான். இதில் அக்ஷயதிரிதியை
எவ்வாறு சம்பந்தப்படுகிறது? இனி விரிவாக ஜோதிடத்திற்குள்
செல்வோம்.
ஒரு ஜாதகத்தில் நாலாமிடம்
என்று சொன்னால், அது சொத்துஸ்தானம் என்று உடனே சொல்லிவிடலாம். அந்த ஸ்தானம் சுபமாக நல்ல முறையில் அமைந்திருந்து,
தங்ககாரகன் குரு கெடாமல் இருந்தால், தங்கம் நிறைய வாங்கி சேர்க்க முடியும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு அமைய வேண்டும் என்பது
பலரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் பரமாத்மாவின்
அருளால், ஐஸ்வரியம் பெருக வேண்டும் என்றால், அந்த ஜாதக அமைப்பு வேறு விதமாக அல்லவா
அமைகிறது. இதே சொத்து ஸ்தானத்தை குசேலபார்வை
கொண்டு பார்த்தால் அது நட்புஸ்தானமாக தெரியும்.
அதே ஆர்வத்துடன் இந்த ஸ்தானத்தை பார்த்தால் அது பரமாத்மாவின் ஸ்தானமாகவும் தெரியும். கேந்திர ஸ்தானங்களை, பராசரர் தாம் இயற்றிய பிருகத்பராசர
ஹோரையில் விஷ்ணு ஸ்தானங்கள் என்றும், திரிகோணங்களை லக்ஷ்மி ஸ்தானங்கள் என்றும் கூறுகிறார். ஜோதிடவிதிப்படி, 5 ஆம் அதிபதி 4 ஆம் இடத்தில் இருந்தால்,
அந்த ஜாதகர் துவாரகாதிபதியின் [ மஹாவிஷ்ணு ] பக்தராக இருப்பார். இதுவே மகளிர் ஜாதகமாக இருப்பின் 9 ஆம் அதிபதி 4
ல் இருக்க வேண்டும். 5 தெய்வபக்திக்குரிய ஸ்தானம். 4 நட்பு மற்றும் நாராயணன் ஸ்தானம். குசேலர் விஷ்ணுபக்தர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். ஜோதிடப்படி 5 என்னும் தெய்வபக்தியை 4 என்னும் நட்பு
உணர்வாக கொண்டு நாராயணன் என்னும் 4 ஐ 4 என்னும் தனது உடைமையாக்கிக் கொண்டார். இது நடந்தது அக்ஷய திரிதியை அன்று. ஜோதிட விதிப்படி, 5 க்குரியவன் திசை புக்தி நடக்கும்
போது இது நடக்கும். குசேலருக்கு திருமணமாகி
தாமதமாக இந்த திசைபுக்தி வந்திருக்கலாம்.
5 என்னும் வித்யாதிபதி 4 என்னும் இடத்தில் இருந்தால், அவர் கல்வி கேள்விகளில்
மிக சிறந்தவராக இருப்பார். குருகுலத்தில் பயின்றபோது,
ஸ்ரீகிருஷ்ணருக்கு தோன்றும் சந்தேகங்களையெல்லாம் குசேலர் தீர்த்துவைத்திருக்கிறார். அதுபோல் 5 என்னும் புத்ரஸ்தானாதிபதி, 4 என்னும்
கேந்திரத்தில் இருந்தால், குழந்தைகளுக்கு பஞ்சமிருக்காது. குசேலருக்கு பஞ்சமில்லாமல் குழந்தைகள் இருந்தன.
இதே 5 ஐ 7 என்னும் கேந்திர,
விஷ்ணுஸ்தானத்தோடு பொருத்திப்பார்த்தால் இன்னொரு உணமையும் புரியவரும். ஜோதிட விதிப்படி 5 ஆம் அதிபதி 7 ஆமிடத்தில் இருந்தால்
காதல் வரும். ஆண்டாளும், மீராவும், 7 என்னும்
காதலால் 7 { விஷ்ணுஸ்தானம் } நாராயணனை 5 என்னும் தெய்வ பக்தியால் அடைந்தவர்கள். இவ்வுலகில் பிறந்த ஜீவாத்மாக்கள் தெய்வபக்தியோடு
{ 5 } தன் கர்மவினைகளை { 10 } நிறைவேற்றுவதன் மூலம் பரமாத்மாவை { 10 } ஐ அடைகிறன. பகவத் கீதையின் கர்மாத்யாயம் படித்தால் இந்த தத்துவம்
நன்றாக விளங்கும். இந்த உண்மை தத்துவங்களை
புரிந்துகொண்டால், அக்ஷயதிரிதியைதங்கம் ஒரு தூசாக தோன்றும்.
நமக்கு 5 { தெய்வபக்தி
} ஐ பற்றிய கவலை கிடையாது. 4 { சொத்து, தங்கம்
} மட்டும் தன்வசமாகிவிட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. இப்படிப்பட்ட பேராசையால் அக்ஷய திரிதியை அன்று வருகின்ற
4 { தங்கம் } பெருகி வளர்கிறதா? அல்லது உருகி கரைகிறதா? என்பது வாங்கியவர்களுக்கே வெளிச்சம். இதில் கடன்பட்டு வாங்குபபவர்கள் வேறு இருக்கிறார்கள். ஜாதக கொடுப்பினையும், இறைவன் அருளும் இன்றி நம்
வாழ்வில் எதுவும் மேன்மையடையாது என்று எல்லோரும் உணரும் நாள் வரவேண்டும். அக்ஷயதிரிதியை அன்று பரமாத்மாவை நாம் உடைமையாக பெற
வேண்டும் என்ற பக்திபெருக்கு பெருக வேண்டும்.
நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment