ஓம் படைவீட்டம்மா துணை. ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம். " கிரகங்களின் இரட்டை வேஷம் ", ........... பகுதி எண் 01 [ யோகாதிபத்யமும், பாதகாதிபத்யமும்
] ............. பாரம்பரிய முறையிலான பதிவு. ஒரு கிரகம் சுபம் , அசுபம் ஆகிய இரண்டு வகையான ஆதிபத்யங்கள்
பெற்று, ஒரே நேரத்தில் நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருந்து செயல்படுவது இரட்டை வேஷமாகும். யோகாதிபத்யம் என்ற சுப ஆதிபத்யம் பெற ஒரு கிரகம்,
ஒரே நேரத்தில், கேந்திராதிபத்யமும், திரிகோணாதிபத்யமும் பெற வேண்டும். அந்த வகையில் ரிஷப, துலாத்திற்கு சனியும், கடக,
சிம்மத்திற்கு செவ்வாயும், மகர, கும்பத்திற்கு சுக்கிரனும் யோகாதிபதியாகிறார்கள். அதே நேரம் ரிஷபம், சிம்மம், கும்பம் ஆகியன ஸ்திர
ராசிகள் என்பதால், அதன் ஒன்பதாமிட ஆதிபத்யம் பெறும் கிரகங்கள் முறையே சனி, செவ்வாய்,
சுக்கிரன் ஆகியோர் பாதகாதிபதியும் ஆகிறார்கள்.
இவற்றில் கேந்திராதிபத்யம், திரிகோணாதிபத்யம் ஆகியவை அடிப்படையிலேயே கிரகங்கள்
பெறுகின்ற சுபஸ்தானங்கள். எனவே இவை அடிப்படை
ஸ்தானாதித்யங்களாகிறன. ஆனால் யோகாதிபத்யமும்,
பாதகாதிபத்யமும், அவைகளுக்கு வாய்த்த துணை ஆதிபத்யங்களாகும். இப்படி சுபம், அசுபம் ஆகிய இருவகை ஆதிபத்யங்களையும்
பெறும் இக்கிரங்கங்கள் எப்போது? சுபமாகவும், எப்போது? அசுபமாகவும் செயல்படும் என்பதே
சூட்சுமமாகும். புரியாத வரை சூட்சுமம். புரிந்துவிட்டால் பகிரங்கம்.
........................ புரிந்துகொள்வோம்.
அடிப்படை ஆதிபத்யங்களை
இந்த கிரகங்கள் தனித்து நின்று செயல்படுத்தும்.
ஆனால் துணை ஆதிபத்யங்களை இந்த கிரகங்கள் ஒரு துணையோடுதான் செயல்படுத்தும். இதை சற்று விரிவாக பார்க்கலாம். ............
ரிஷபலக்னத்திற்கு சனி எவ்வாறு செயல்பட்டு பலன் தருவார்? சனி கெடாமல், அதாவது அசுபஸ்தானங்களை அடையாமலும்,
அசுபஸ்தானாதிபத்யம் பெற்ற சூரியனிடம் அஸ்தங்தம் அடையாமலும் இருக்கும்போது, 9, 10 ஆமிடத்து
அதிபதியாக செயல்படுவார். ரிஷபலக்னத்திற்கு சனி, ,ரிஷபம், மிதுனம், கன்னி, மகரம், கும்பம் மீனம்
ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் போது 9, 10 ஆமிடத்து அதிபதியாக செயல்படுவார். 9, 10 ஆமிடத்ததிபதி என்பது அடிப்படை ஆதிபத்யங்கள். எனவே ஜனன ஜாதகத்தில் இங்கெல்லாம் சனி தனித்திருக்கும்போது
சுபபலன் தரக்கூடியவராகிறார். சனி திசை, சனி
புக்தியின் போதும் இந்த ராசிகள் சனியிடமிருந்து சுபபலன்களையே பெற்றுத் தருகின்றன.
ஒரு கிரகம் தன் துணை ஆதிபத்யத்தை
செயல்படுத்த முனையும் போது, துணைக்கு இன்னொரு ஆதிபத்யமுள்ள கிரகத்துடன் இணைந்துகொள்ளும். ரிஷபலக்னத்திற்கு சனி தன் துணை ஆதிபத்யமான பாதகாதிபத்யத்தை,
செயல்படுத்த இன்னொரு அசுப ஆதிபத்ய கிரகத்துடன் இணையும். பாதகாதிபத்யம் அசுப ஆதிபத்யம் என்பதால், துணைக்கு
வருவது அசுப ஆதிபத்யம் கொண்ட கிரகமாகவே இருக்கும். அதன்படி ரிஷபலக்னத்திற்கு சனிக்கிரகம் திசை, அல்லது
புக்தி நடத்தும்போது, சனிக்கு துணையாக இணையும் திசானாதன், அல்லது புக்தினாதன் 6,
8, 12 ஆகிய ஸ்தானாதிபத்யம் கொண்டவராக அமைந்தால், சனி பாதகாதிபதியாக செயல்பட்டு சொல்லொணாத
துன்பத்தையும் துயரத்தையும் தந்துவிடுவார்.
இதே பாதகாதிபத்யத்தை சனி தனித்திருந்து செயல்படுத்தாது. ஜனன ஜாதகத்தில் ரிஷபலக்னத்திற்கு சனி, 6, 8, 12
ஆகிய ஸ்தானாதிபதிகளுடன் இணைந்திருந்தால், சனி பாதகாதிபதியாகவும், கேந்திர திரிகோணாதிபதிகளுடன்
இணைந்திருந்தால், யோகாதிபதியாகவும் செயல்படுவார்;
சனி 6, 8, 12 ஆகிய இடங்களில் தனியாகவோ, அல்லது வேறு கிரகத்துடன் இணைந்தோ இருந்தாலும்,
அதன் பாதகாதிபத்யம், யோகாதிபத்யம் எனப்படும் இரு துணை ஆதிபத்யங்களும் கெட்டுப்போகும். அடிப்படை ஆதிபத்யங்களான, 9 மற்றும் 10 ஆகிய ஆதிபதியங்கள்
சனி இருக்கும் அசுப ஸ்தானத்திற்கு தக்கவாறு எதிர்மறையாக செயல்படும். இதே விதிமுறைபடி சிம்மத்திற்கு செவ்வாயும், கும்பத்திற்கு
சுக்கிரனும் செயல்படுவர். இனி ரிஷபலக்னத்திற்கு,
சனி இரட்டை வேஷம் போடும், ஒரு உதாரண ராசிக்கட்டத்தை பார்க்கலாம். ...........
சனி கெடாமல் தனித்திருக்கிறார். 9, 10 ஆம் ஸ்தானாதிபதியாகி, லாபத்தில் இருப்பதால்,
சனி நற்பலனை அள்ளி வழங்குவார். சனிதிசை, சனிபுக்தியிலும்
இதேபலன் நடக்கும். சனி யோகாதிபத்யம் என்னும்
துணை ஆதிபத்யம் பெற்று, தனக்கு துணையாக வரும், சுபஸ்தான புக்தினாதர்கள் மூலமும் நற்பலனை
அள்ளி வழங்குவார். சனிதிசையில், புதன், சந்திரன்,
சூரியன் ஆகியோருடைய புக்திகள் யோகமுடையதாக இருக்கும். அதுபோல் சனி பாதகாதிபத்யம் என்னும் துணை ஆதிபத்யம்
பெற்று, தனக்கு துணையாக வரும் அசுபஸ்தானாதிபதிகள் மூலம் கெடுதல் செய்ய தவறமாட்டார். சனிதிசையில் சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகியோருடைய
புக்திகளில் அசுப பலன்கள் அதிகம் விளையும்.
இந்த அசுபங்களை, சனி மற்றும் புக்திநாதர்களுக்குரிய வழிபாட்டு தெய்வங்களின்
பரிகார வழிபாடுகளை செய்துகொண்டு எளிதில் நிவாரணம் அடையலாம். சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகியோருக்கு, சுபஸ்தானாதிபத்யமும்
இருக்கிறதே! என்ற கேள்வி எழும். சுக்கிரன்,
குரு, செவ்வாய் ஆகியோரின் இரட்டை வேஷதன்மை பற்றி பின்னர் வரும் கட்டுரைகளில் விரிவாக
பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம். நன்றி வணக்கம். ............... தொடரும்.
............... .
No comments:
Post a Comment