ஓம் படைவீட்டம்மா துணை. எல்லோருக்கும் வணக்கம். " தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம்.............
[ விசாகம், கேட்டை. ].
................. பாரம்பரிய முறையிலான
பதிவு. ஆயில்யம், மூலம் நக்ஷத்திர பெண்களின்
திருமணம் பற்றி ஏற்கனவே சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் விசாகம், கேட்டை நக்ஷத்திர பெண்களின்
திருமணம் பற்றிய விபரங்களை பார்க்கலாம். மாப்பிள்ளைக்கு
தம்பி இருந்தால், அந்த வீட்டுக்கு விசாக நக்ஷத்திர பெண் மருமகளாக வரக்கூடாது என்று
விசாக ஜாதகத்தை ஒதுக்குகிறார்கள். அதுபோல்
மாப்பிள்ளைக்கு அண்ணன் இருந்தால், கேட்டை நக்ஷத்திர பெண் வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது
என்றும் கேட்டை ஜாதகத்தை ஒதுக்குகிறார்கள்.
சில விதிவிலக்குகளை கையாண்டு, சாஸ்த்திரத்தை அனுசரித்து, சில சம்பிரதாயங்களை விட்டுவிடுதல் அல்லது மாற்றியமைத்துக் கொள்ளுதல்
மூலமாக இவ்விரு நக்ஷத்திர பெண்களையும் நம் வீட்டுக்கு நாம் மருமகளாக்கிக்கொள்ளலாம். சில தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில், வேறு வழியின்றி,
இவ்விரு நக்ஷத்திரப்பெண்கள், புகுந்த வீட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டால், கீழ்கண்ட சிலவழிமுறைகளை
கடைபிடித்து அவளை புகுந்த வீட்டில் வரவேற்கலாம்.
01. ஆண் வாரிசு இல்லாத அல்லது, மாப்பிள்ளையை விட மூத்த
வயதுடைய மகன் இல்லாத பெற்றோர்களை தேர்வு செய்து, மாப்பிள்ளைக்கு தாய், தந்தையராக மணவறையில்
அமர வைத்து, கன்னிகாதானம் என்ற முறையில், கேட்டை நக்ஷத்திர பெண்ணை தாரை வார்த்து கொடுக்கச்சொல்லி
பெற்றுக்கொள்ளலாம். இவ்வகையில், சித்தப்பா,
பெரியப்பா, தாய்மாமன் போன்ற தம்பதியர்கள், மாப்பிள்ளையின் பெற்றோராக சங்கல்பம் செய்துகொண்டு
மணவறையில் அமர்ந்து, சாஸ்த்திரப்படி சம்பிரதாயங்களை நிறைவேற்றலாம். பெற்றோராக மணவறையில் அமர்ந்திருக்கும் தம்பதியர்கள்,
மாப்பிள்ளையின் சார்பில், கன்னிகாதானம் பெற்று, பெண்ணை தன் குடும்பத்துக்கு உரிமையாக்கி
கொள்கிறார்கள். இதனால் மாப்பிள்ளையின் அண்ணன்
இல்லாத வீட்டுக்கு பெண் மருமகளாக ஆகிறாள்.
மேலும் வீட்டுக்கழைத்தல் என்னும் கிரகப்பிரவேசம், கன்னிகாதானம் பெற்றுக்கொண்டவர்களின்
வீட்டில் நடக்க வேண்டும். புதுமண தம்பதியர்கள்
தங்கள் வாழ்க்கையை [ முதலிரவு ] அந்த வீட்டிலேயே தொடங்க வேண்டும். அதன்பின் தான் வாழ வேண்டிய வீட்டுக்கு, அதாவது,
மாப்பிள்ளை அண்ணன் இருக்கும் வீட்டுக்கு செல்லலாம். இதே வழிமுறையை பின்பற்றி, விசாக நக்ஷத்திர பெண்ணையும்
மருமகளாக்கி கொள்ளலாம். அதாவது கன்னிகாதானம்
பெறும் பெற்றோர்களுக்கு, மாப்பிள்ளையை விட இளைய வயதுடைய ஆண்வாரிசு இருக்ககூடாது. அல்லது ஆண்வாரிசே இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லது. கேட்டை நக்ஷத்திர பெண்ணுக்கு குறிப்பிடபட்டுள்ள
மற்ற எல்லா சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தபின் உண்மையில் மாப்பிள்ளைக்கு தம்பி இருக்கும்
புகுந்தவீட்டிற்கு சென்று விசாக நக்ஷத்திர பெண் குடும்பம் நடத்தலாம்.
02. சென்ற பதிவில் விவரிக்கப்பட்ட ஆயில்ய, மூல நக்ஷத்திர
பெண்களின் திருமண வழிமுறையை கடைபிடித்தால் இன்னும் நிம்மதி. எந்த சந்தேகத்திற்கும் இடமிருக்காது. சென்ற பதிவில் கன்னிகாதான சம்பிரதாயம் நடைமுறைபடுத்தாமல்
நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு திருக்கோவில் சன்னதி திருமணம் மிக உகந்தது என்றும்
விவரிக்கப்பட்டிருந்தது.
03. கேட்டை நக்ஷத்திர பெண்ணை, தன்னுடைய தம்பிக்கு திருமணம்
செய்து வைக்கும், அண்ணனே, தம்பிக்கு பெற்றோராக சங்கல்பம் செய்துகொண்டு, மணவறையில் அமர்ந்து,
மாப்பிள்ளை என்னும் தன் தம்பியை மகனாக பாவித்து அனைத்து சாஸ்த்திர சம்பிரதாயப்படி திருமணத்தை
நிறைவேற்றலாம். இதற்கு மஹாபாரதம் நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நடைமுறைபடி அண்ணன் தந்தையாகிறான். அண்ணி தாயாகிறாள். அண்ணி தாய்க்கு சமம் என்று நம் பெரியோர்களின் பொன்மொழியை
இங்கு நினைத்து பார்க்க வேண்டும். நம் முன்னோர்கள்
எதையும் அர்த்தமில்லாமல், நமக்காக சொல்லி வைத்ததில்லை. இனி மஹாபாரத சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.
மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கும்,
சுபத்திரைக்கும் திருமணம். சுபத்திரை பகவான்
ஸ்ரீகிருஷ்ணரின் தங்கை. திருமணத்தில் கன்னிகாதான
நிகழ்ச்சி நடக்க வேண்டும். அப்படியென்றால்
அர்ஜுனனுக்கு பெற்றோர் மணவறையில் அமர வேண்டும்.
தாயார் குந்தியோ விதவை. எனவே பெற்றோராக,
வேறு வழியின்றி தருமரும், பாஞ்சாலியும் அமரும் நிலை வந்தது. தருமர் அர்ஜுனனுக்கு அண்ணன். பாஞ்சாலி ஒருவகையில் மனைவி இன்னொரு வகையில் அண்ணி
முறை. இருவரும் அர்ஜுனனுக்கு பெற்றோராக அமர
சங்கல்பம் செய்துகொண்டு, கன்னிகாதானமும் பெற்றனர். மனைவியே / அண்ணியே தாயாக இருந்து நடத்திய திருமணம்
இது. எனவே அன்றுமுதல் அர்ஜுனன் பாஞ்சாலியை
தாயாகவும், தருமரை தகப்பனுமாகவே பாவித்து வந்தான். அர்ஜுனன் பாஞ்சாலியை நெருங்கவே இல்லை. மனைவி என்ற உரிமை கொண்டாடவும் இல்லை. சுபத்திரையோடு வாழ்க்கை நடத்தி அபிமன்யுவை மகனாக
பெற்றான். இவ்வாறு திருமணத்தில் சாஸ்த்திரப்படி,
சங்கல்பம் செய்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மாப்பிள்ளைக்கு பெற்றோராகிவிடுகிறனர். இவ்வகையில் அண்ணன், தகப்பனாக சங்கல்பம் செய்துகொண்டு,
கேட்டை நக்ஷத்திர பெண்ணை கன்னிகாதானமாக பெறும் போது, அந்த அண்ணன், பெண்ணுக்கு மாமனாராகிவிடுகிறார். ஜேஷ்டனுக்கு ஆகாது என்ற தோஷம் செயல்படாது.
04. மாப்பிள்ளைக்கு மூத்த, இளைய சகோதரர்கள், நிலையாக
தொலைதூரத்திலோ அல்லது வெளினாட்டிலோ வசிக்கும் நிலை இருப்பினும் கேட்டை, விசாக பெண்
தோஷம் செயல்படாது. காரணம், தோஷ நக்ஷத்திர பெண்கள்
வாழ்க்கை நடத்தும் குடும்பத்தோடு, மாப்பிள்ளை சகோதரர்கள் இருக்கப்போவதில்லை. தொடர்பும் அடிக்கடி நிகழாத வண்ணம் அரிதாகி தொலைதூரமாகி
விடுகிறது. இதே போல் மாப்பிள்ளை, தன் குடும்பத்தை
விட்டு தொலைதூரத்திலோ, அல்லது வெளினாட்டிலோ குடும்பம் நடத்தினாலும், தோஷம் செயல்படாது.
இப்படிப்பட்ட ஒரு சில மாற்றங்களை
திருமணத்தின் போது மேற்கொள்வதன் மூலமாக, விசாக, கேட்டை நக்ஷத்திர பெண்களுக்கும் நம்மால்
ஒரு இனிய இல்லறத்தை, இறைவன் திருவருளால் அமைத்துதர முடியும். சிந்திப்போமாக. நன்றி.
வணக்கம்.
No comments:
Post a Comment