ஓம் படைவீட்டம்மாதுணை. எல்லோருக்கும் வணக்கம். நீண்ட ஆயுளா? அல்லது நிம்மதியான வாழ்க்கையா? 2 ஆம் பாகம்.
.............. பாரம்பரிய முறை............ பொதுவாக ராசிக்கட்டத்தின் கட்டமைப்பே, நீண்ட ஆயுள்
அல்லது நிம்மதியான வாழ்க்கை ஆகிய இரண்டிம் ஒன்று கிடைக்கும் என்பது போல அமைந்திருக்கிறது. இதை விரிவாக சென்ற பதிவில் பார்த்தோம். இறைவன் இவ்விரண்டையும் ஒரு சேர அனுபவிக்கும், பாக்கியம்
மிகச்சிலருக்கு மட்டுமே அபூர்வமாக கொடுத்திருக்கிறான். பெரும்பாலானவர் வாழ்க்கை, இந்த பதிவின் தலைப்பை
போல கேள்விக்குறியாகவே அமைந்திருப்பதை எல்லா ஜோதிடர்களும் தங்கள் அனுபவத்தில் பார்த்திருப்பார்கள். இதை மாற்றியமைக்கு வழி ஜோதிடத்தில் இருக்கிறதா?
என்று சிந்தித்து பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.
இங்கு நிம்மதி என்று குறிப்பிடப்படுவது, பஞ்சமில்லாத உணவு, குடும்ப நிர்வாகத்திற்கு
தேவையான நிதி, குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சி, நோய் மற்றும் கடனில்லா வாழ்க்கை
ஆகியவையாகும். சொத்து சேர்க்கை, பெட்டி நிரம்பி
வழியும் பணம் ஆகியன இதில் சேராது.
நீண்ட ஆயுளில்லாமல், நிம்மதியான
வாழ்க்கை அமைந்த ஜாதகர்களை ஜோதிடர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பே இது தெரிந்துவிட்டால், இளைஞர்கள்
கலங்க வேண்டியதில்லை. நீண்ட ஆயுளுடன், தீர்க்க
சுமங்கலியாக இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதன் மூலம், இளைஞர்கள் தங்கள்
ஆயுளை வளர்த்துக்கொள்ளலாம். அவர்களின் சொந்த
ஜாதகப்படி, நிம்மதியான வாழ்க்கையும் வாழ முடியும். ஒரு பெண் தீர்க்கசுமங்கலியாக இருக்க வேண்டும் என்றால்
அவள் ஆயுள் முடியும் வரை கணவன் வாழ்ந்தாக வேண்டும். அத்துடன் அந்த பெண்ணுக்கு நீண்ட ஆயுளும் அமைந்திருந்தால்,
அவள் ஆயுள் முடியும் வரை கணவனும் இருந்தாக வேண்டும். இந்த தத்துவத்தை உணர்ந்த ஜோதிடர் ஒருவரால், இவ்விருவர்
ஜாதகங்களையும் இணைத்து வெற்றி காண முடியும்.
நீண்ட ஆயுளுடைய தீர்க்கசுமங்கலியின் ஜாதகத்தை இனம் காண பல கிரக அமைப்புகளை சொல்லலாம். உதாரணத்திற்கு ஒன்று. எட்டாமிடம் சுபமாக இருக்க வேண்டும். எட்டாமதிபதி லாபஸ்தானத்தில் கெடாமல் இருக்க வேண்டும்.
இதற்கு மாறாக மாங்கல்யதோஷம் உடைய ஒரு பெண்ணை
அந்த இளைஞனோடு இணைத்து விட்டால் வேறு வினையே வேண்டாம். இளைஞன் நிம்மதியான வாழ்க்கையை மேலுலகத்தில் தேடுவது
போலாகிவிடும். பெண்ணின் ஜாதகத்தில் எட்டாமிடத்தில்
பாபகிரகங்களின் ஆதிக்கம் இருந்தால் அது மாங்கல்ய தோஷமாகும். அதே நேரம் இந்த பாப கிரகங்களின் ஆதிக்கமானது, பெண்ணுக்கு
குறைவில்லாத நீண்ட ஆயுளை தந்துவிடும். அவள்
கணவனை இழந்து, தனக்கு அமைந்த ஆயுளின் வாழ்நாள் முழுதும், வருந்தி வாழ நேரிடும். எனவே ஜாதகங்களை இணைப்பதில் ஜோதிடர் மிகுந்த கவனத்துடன்
செயலாற்ற வேண்டியுள்ளது.
சரி.............. நீண்ட ஆயுளில்லாமல், நிம்மதியான வாழ்க்கை அமைந்த
ஒரு பெண்ணின் ஆயுளை நீட்டிக்க வழி இருக்கிறதா?
ஆணின் ஜாதகத்தில் மனைவியின் ஆயுளை நிர்ணயிப்பது களத்திரஸ்தானம். இந்த ஸ்தானம் கெடாமல் இருக்க வேண்டும். அத்துடன் ஸ்தானாதிபதி லக்னத்தில் இருப்பது நல்லது. ஸ்தானாதிபதி சுபாவசுபராக இருப்பின் இன்னும் நல்லது. களத்திரஸ்தானமும், லக்னமும் பரிவர்த்தனை அடைவதும்
நன்மையே., இந்த அமைப்பு ஆணின் ஜாதகத்தில் இருந்தால்
மனைவியின் ஆயுள் கூடும். இத்தகைய ஆணின் ஜாதகத்தோடு,
ஆயுள் குறைந்த பெண்ணின் ஜாதகத்தை இணைக்கும் போது அவள் நீண்ட ஆயுள் பெற்று, நிம்மதியாக
வாழமுடியும்.
சரி......... திருமணமாகி விட்டது. சென்ற பதிவில் பார்த்தமாதிரி, கணவனுக்கோ அல்லது
மனைவிக்கோ நீண்ட ஆயுள் இருந்தும், நிம்மதியற்ற வாழ்க்கை இல்லையென்றால் என்ன செய்வது? இதை சரி செய்துகொள்ள ஒரே வழி மட்டுமே உண்டு. கணவன், மனைவி இருவர் ஜாதகமும் ஆராய்ந்து, எதில்
2 ஆமிடமும், 8 ஆமிடமும் சுபத்தன்மை அதிகமாக கொண்டதாக இருக்கிறதோ, அந்த ஜாதகரிடம், குடும்பம்
நடத்தும் நிர்வாக உரிமையை பரிபூரணமாக தந்துவிடவேண்டும். மீண்டும் அதில் தலையிடக்கூடாது. யாருடைய ஜாதகத்தில், 2 ஆமிடமும், 8 ஆமிடமும் அசுபத்தன்மை
அதிகமாக பெற்றிருக்கிறதோ, அந்த அசுபகிரக திசைபுக்தி காலத்தில் பரிகார வழிபாடுகளை மேற்கொண்டு,
இறைவனை வேண்டி நிம்மதி அடையலாம். சிலருக்கு
பரிகார வழிபாடு செய்தாலும் பலிக்காத நிலை, ஜாதகத்தில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ
அமைந்திருக்கும். அதற்கேற்றவாறு ஜாதகத்தை ஆராய
வேண்டியுள்ளது. இவ்வாறு ஜாதகங்கள் ஆராயும்
போது தசாபுக்தி, கோசரம் இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, இறைவழிபாடுடன்
கூடிய வாழ்க்கை நடத்தும்போது, அந்த குடும்பத்தில் நிச்சயம் நிம்மதி குடிபுகும். அத்தகைய நல்வாழ்வை இறைவன் நம் அனைவருக்கும் அருள்வானாக
என்று வேண்டிக்கொள்வோம். நன்றி. வணக்கம்.
No comments:
Post a Comment