உலக தமிழ் ஜோதிடர்கள்
மஹாசபையின் 5 ஆவது கருத்தரங்கில் வெளியிடப்பட்ட விழா மலரில் இடம் பெற்ற எளியேனின் கட்டுரை
இது. ................... பகுதி.
2....................
மேலும் ஜோதிட பலன் கணிப்பதில்,
குருவுக்கு சில முக்கியமான கடமைகள் இருப்பதாக நமது சாஸ்த்திரம் சொல்கிறது. அதையும் சற்று விரிவாகவே கவனிக்க வேண்டியிருக்கிறது. ஜோதிட பலன் சொல்ல தொடங்கும்போது, லக்னத்தை முதல்ஸ்தானமாக
கொள்கிறோம். இந்த லக்னத்தை, குரு, அல்லது,
புதன், அல்லது லக்னாதிபதி ஆகியோரில் யாராவது ஒருவர் பார்வையிடவேண்டும். பார்வையிடும் கிரகம் நீசம், அஸ்தங்கம் அடைந்திருக்கூடாது அல்லது மேற்குறிப்பிட்டவர்களில் யாராவது ஒருவர்
லக்னத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் லக்னம்
வலுவுடையதாகும். இவைகளில் ஒரு தகுதி கூட லக்னத்திற்கு
கிடைக்கவில்லை என்றால், குறைந்த பட்சம், லக்னாதிபதி, எங்கிருந்தாலும் நீசம் அஸ்தங்கம்
ஆகியவைகளை அடையக்கூடாது. அப்போதுதான் லக்னம்
வலுவுடையதாகும். லக்னம் வலுவாக இல்லையென்றால்,
லக்னத்தை முதலாக வைத்து சொல்லப்படும் பலன்கள் அனைத்தும் வலுவில்லாமல், பலனளிக்காதவைகளாக
அமையும். இப்படிப்பட்ட சூழ்னிலையில் ஜோதிட
பலனை லக்னத்திற்கு அடுத்தபடியாக லக்ன அந்தஸ்து பெறும் சந்திராலக்னம் எனப்படும் ராசியை
முதலாவதாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்
ஸ்தானங்களை எண்ணி பலன் சொல்ல வேண்டும். ராசியை
ஜோதிடபலன் சொல்ல முதலாவது ஸ்தானமாக தேர்வு செய்யுமுன், இது சந்திராலக்னம் எனப்படுவதால்
சந்திரன் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்திரன் நீசம் அடையக்கூடாது. நீசபங்கம் பெற்றிருக்கலாம். அல்லது தனது சுபத்தன்மையால் வலிமை பெற்றிருக்க வேண்டும். அதுபோல், தனது பாபத்தன்மையால் வலிமை இழந்திருக்கக்கூடாது. [ உதாரணத்திற்கு அமாவாசை திதி. ] அவ்வாறு இருப்பின் ஸ்தான பலத்தால் வலிமை பெற்றிருக்க
வேண்டும். லக்னாதிபதிக்கு அஸ்தங்க தோஷம் இருக்கிறாதா?
என்று பார்ப்பது போல் சந்திரனுக்கு பார்க்க வேண்டியதில்லை. சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் கிடையாது. எவ்வகையிலும் வலிமை பெறாத சந்திரனாக இருப்பின்,
சந்திராலக்னம் எனப்படும் ராசி வலுவற்றதாகிவிடும்.
எனவே ராசியை முதலாக வைத்து சொல்லப்படும் பலனும் வலிமையற்று பலனளிக்காமல் போகும். பெரும்பாலும் இம்மாதிரியான வலிமையற்ற நிலை சந்திரனுக்கு
ஏற்படுவதில்லை. ஏதாவது ஒரு வகையில் சந்திரன்
வலிமை பெற்றதாகவே ஜாதகத்தில் அமைந்திருக்கும்.
ஒரு வேளை சந்திராலக்னமும் வலிமையிழந்த நிலையில் ஜோதிட பலன் சொல்ல வேண்டுமானால்
நமது சாஸ்த்திரம் என்ன வழி சொல்கிறது?
லக்னமும், சந்திராலக்னமும்
வலுவிழந்த நிலையில் உள்ள ஜாதகங்களுக்கு, காரகர்கள் இருக்கும் ஸ்தானத்தை முதலாக வைத்து,
ஜாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இம்மாதிரியாக ஜோதிட பலன் சொல்லும் முறைக்கு ஆதாரமும்
உள்ளது. திரு. கீரனூர் நடராசனார் அவர்கள்
" ஜாதக அலங்காரம் ", என்னும் ஜோதிட சாஸ்த்திர நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வடமொழியிலுள்ள பல மூலநூல்களின் தமிழ்வழி
கருத்துத்தொகுப்பாகும். இதற்கு ஸ்ரீதெய்வசிகாமணி
ஜோதிடர் எனும், சமஸ்கிருத பண்டிதர் விளக்கமும், விருத்தியுரையையும் எழுதியிருக்கிறார். இவரது விளக்கம், சமஸ்கிருத நூல்களின் மூலவரிகளோடு,
மணிப்பிரவாள நடைகொண்ட விளக்கமாக அமைந்திருக்கும்.
இதனால் இவரது விளக்கம் சிலருக்கு புரிவதில்லை. இவரது விளக்கமும், விருத்தியுரையும் அமைந்த ஜாதக
அலங்கார நூலின் 435 ஆவது பக்கம் முதல் 438
ஆவது பக்கம் வரை, உள்ள விளக்கங்களை ஆதாரமாக சமர்ப்பிக்கின்றேன். துவாதச பாவக பலன், ......... முதல் பாவகப்படலம்......பாவ
காரகர்கள் பகுதியில், மேன்மைமிகு, ஸ்ரீ பராசரரால் இயற்றப்பட்ட, பிருகத் பராச்சாரியத்திலிருந்து,
மூல சமஸ்கிருத ஸ்லோகங்களை வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார் ஸ்ரீ தெய்வசிகாமணி ஜோதிடர். லக்னமும், சந்திராலக்னமும் வலுவிழந்த நிலையில் பாவகாரகர்களை
கொண்டு பலன் சொல்லும் முறையை இன்னும் சற்று விரிவாக சிந்திக்கலாம்.
உதாரணத்திற்கு, ஒரு ஜாதகருக்கு,
அவரது குடும்ப நிதிப்புழக்கம், மற்றும் அதன் நிர்வாக நிலை குறித்து பலன் சொல்ல வேண்டியிருக்கிறது
என்று கொள்வோம். லக்னம் வலுவிழந்துள்ளது. எனவே, லக்னத்திற்கு 2 ஆமிடமும் வலுவிழந்துவிட்டது
என்று பொருள். அடுத்து சந்திராலக்னத்தை எடுத்துக்கொள்வோம். முன் குறிப்பிட்ட விதிகளின் படி சந்திராலக்னமும்
வலுவிழந்திருந்தால், ராசிக்கு 2 ஆமிடமும் வலுவிழந்து விட்டது என்று பொருள். ( இதன்
தொடர்ச்சியை நாம் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
நன்றி. வணக்கம். )
.......................தொடரும்.............................
No comments:
Post a Comment