ஓம் படைவீட்டம்மா துணை. நண்பர்களுக்கு வணக்கம். மகள் எப்போது " மங்களமகள் ", ஆவாள்? ஜோதிடவியலின் விளக்கம். ...................... பாரம்பரிய முறை................ இந்த பதிவு பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும்,
ஆறுதலையும் தரும் என்ற நம்பிக்கையுள்ளது..
பல திருப்பங்கள் நிறைந்தது வாழ்க்கை.
அதுவும் பெண்களுக்கு அதிக திருப்பங்களை அவர்களது வாழ்க்கை தருகிறது. அத்தகைய திருப்பங்களில், இயற்கை தரும் மகிழ்ச்சிகரமான
பரிசு ருது மங்களயோகமாகும். இந்த பதிவில்
மகள் எப்போது மங்களமகளாவாள்?, விரைவிலா? அல்லது தாமதமாகவா? இந்த நிகழ்வு சிறப்பாக நல்ல நாளில், நல்ல நேரத்தில்
அமைய வழிபடவேண்டிய தெய்வம் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது.
மகளிர்களுக்கு மாதந்தோறும்
நிகழும் மாதப்பிரவிடை பற்றி ஸ்ரீவராஹிமிஹிரர் தன் பிருஹத்ஜாதத்தில் எடுத்து சொல்லியிருக்கிறார். இதற்கு காரணமாக இருக்கும் கிரகங்கள் என சந்திரனையும்,
செவ்வாயையும் சுட்டிக்காட்டுகிறார். கோசரப்படி
மாதப்பிரவிடை நிகழும் காலம் அறிவதற்காகவும் ஒரு கணிப்பையும் தந்திருக்கிறார். அது போல் வாழ்க்கையில் முதன்முதல் நிகழும் ருதுமங்களத்தை
தசாபுக்தியின் கணிப்பு மூலம் அறிந்துகொள்ள முடியும். கோசரத்தின் மூலம் சந்திரனும் செவ்வாயும், தங்கள்
மாதாந்திர சுழற்சியின் மூலம், மகளிர்களுக்கு மாதப்பிரவிடையை உருவாக்குகிறார்கள். அதுபோல், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நிகழும் பூப்பெய்தும்
மங்கள நிகழ்வை, சந்திரனும் செவ்வாயும் தங்கள் தசை, புக்தி, அந்தரத்தின் மூலம் தருகிறார்கள். இவர்களது இந்த மங்கள நிகழ்வை தரும் தசை, புக்தி,
அந்தரமானது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியது. சந்திரனும், செவ்வாயும், இந்த நிகழ்வுக்கு எவ்வாறு?
காரணகர்த்தாக்களாகிறார்கள் என்பதை சற்று ஜோதிடவியலின் படி பார்க்கலாம்.
செவ்வாய் ரத்தத்தை உருவாக்கும்
மூல காரகன். சந்திரன் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்
காரகன் என்பதுடன், உடற்காரகன் என்பது மிக முக்கியமானது. இவ்விரு காரகத்துவமும் இணைந்து ருதுமங்களம் நிகழ்கிறது. நம் முன்னோர்கள் ருதுமங்களத்திற்குரிய தெய்வமாக
ஸ்ரீபாலாம்பிகையை அடையாளம் காட்டியுள்ளனர்.
குழந்தை எனப்படும் பாலபருவத்தின் காரகத்துவ கிரகம் செவ்வாய். அம்பிகைக்குரிய காரகத்துவ கிரகம் சந்திரன். இவ்விரு கிரகங்களின் காரகத்துவங்கள் இணைந்து அருள்
தரும் தெய்வமாக ஸ்ரீபாலாம்பிகை விளங்குகிறாள். , தமிழ்நாட்டிலுள்ள பல சிவஸ்தலங்களில்
ஸ்ரீபாலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை எழுந்தருளியிருக்கிறாள். ஒரு ஜோதிடர் மூலம் மகள் பூப்பெய்தும் காலத்தை முன்பே
அறிந்து, அச்சமயத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீபாலாம்பிகைக்கு, அபிஷேக ஆராதனைகள்
செய்வதன் மூலம், ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில், தன் மகள் பூப்பெய்தும் அருளை பெற்றோர்கள்
பெறலாம். இப்படி சந்திரனும் செவ்வாயும் இணைந்து
ருதுமங்கள நிகழ்வை உருவாக்கும் போது, கிரகங்களுக்கெல்லாம் தலைமையாக விளங்கும் சூரியனும்
இவர்களோடு இணைந்துகொள்கிறார். சூரியன் உஷ்ண
காரகனல்லவா! உடலில் ரத்தத்தின் உஷ்ணம் அதிகரிக்கும்
போது மகளிர்களுக்கு ருது மங்களம் நிகழ்கிறது.
இது அறிவியல். சூரியன் இல்லையேல் மற்ற
கிரகங்களின் செயல்பாடுகள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனவே சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின்
தசை, புக்தி, அந்தர காலத்தில் ருதுமங்களம் நிகழ்கிறது. சில பெண்கள் விரைவில் ருது அடைவதும், சில பெண்கள்
காலம் கடந்து மிக தாமதமாக ருது அடைவதும், இந்த தசை புக்தி அந்தரங்களாலேயேயாகும். இந்த தசை புக்தி அந்தரங்களால் தாமதமாக ருது அடைய
இருக்கும் பெண்ணின் பெற்றோர்கள், இதை புரிந்துகொள்ளாமல், வீணாக மன வருத்தம் அடைகிறனர். மேலும்,
அதிக செலவுடன் கூடிய மருத்துவமுறை மூலம், தன் மகளை ருது அடைய செய்யவும் முயற்சி
செய்கிறனர். இனி மகள் " மங்களமகள்
" ஆகும் காலம் எப்போது? என்று கணக்கிடும் முறை பற்றி பார்க்கலாம்.
உதாரணத்திற்கு................. சூரிய தசை தொடக்கத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்கு,
ருதுமங்களயோகமானது, சந்திர திசை, சூரியபுக்தி, செவ்வாய் அந்தரத்தில் அமையலாம். அப்போது அந்த பெண்ணுக்கு கிட்டத்தட்ட 15 ஆவது வயது
நடப்பிலிருக்கும். அதுபோல் சுக்கிர திசை தொடக்கத்தில்
பிறந்த ஒரு பெண்ணுக்கு, ருதுமங்கள யோகமானது, சூரியதிசை, சந்திரபுக்தி, செவ்வாய் அந்தரத்தில்
அமையலாம். அப்போது அந்த பெண்ணுக்கு வயது கிட்டத்தட்ட
21 நடப்பிலிருக்கும். இப்படி சிலருக்கு விரைவிலும்,
சிலருக்கு தாமதமாகவும், இந்த யோகம் வாய்க்கிறது.
ஜாதகம் கணிக்கும்போது, சரியான பிறந்த நேரம் கொண்டு, சரியான வழிமுறையில் கணிக்கப்பட்டிருந்தால்
மட்டுமே இந்த கணிதம் துல்லியமாக ஒத்து வரும்.
ஜாதகம் சற்று முன்னுக்கு பின்னாக நேரம் கொண்டு, கணிதததிலும் சிறு குறைகள் இருந்தால் இந்த கணக்குகள்
மாறிவிட வாய்ப்பு உண்டு. ருது மங்கள யோகம்
தாமதமாகிக் கொண்டுவரும், மகளை பெற்ற பெற்றோர்கள், தேவையற்ற மனக்கவலையை விடுத்து, ஒரு
ஜோதிடர் மூலம், மகள் மங்களமகளாகும் காலகட்டத்தை, சற்று முன்பின்னாவகவாவது அறிந்து ஆறுதல்
பெறலாம். அத்துடன் ஸ்ரீபாலாம்பிகையை ருதுமங்கள
யோகம் வாய்க்கும் காலகட்டத்தில் வழிபட்டு, தன் மகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி
வகுத்துக்கொள்ளலாம். ஸ்ரீபாலாம்பிகை அருள்வாளாக. நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment