ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். அஷ்டமஸ்தானத்தால் ஏற்படும் சாதகத்தை விளக்கும் பதிவு
இது. [ பாரம்பரிய முறை ]. அஷ்டமசனி, சந்திராஷ்டமம், அஷ்டமி திதி...............என்றெல்லாம்,
அஷ்டமத்தோடு தொடர்புடைய பெயர்களை கேட்டாலே கிடுகிடுத்துப்போகும் அளவுக்கு, ஒரு உருவகத்தை
நம் ஜோதிட உலகம் உருவாக்கி வைத்திருக்கிறது.
அஷ்டமத்தில் கிரகம் இருப்பின், அது தன் சுபாவ தன்மையாலும், ஸ்தானாதிபத்தியத்தாலும்,
நிச்சமயமாக கெடுதலை தந்தே தீரும். எனவே அஷ்டமத்தில்
எந்த கிரகமும் இல்லாமல், அந்த ஸ்தானம் காலியாக இருப்பது நல்லது என்று ஒரு பொதுவான கருத்து
நிலவுகிறது. அஷடமாதிபதி என்று ஒருவர் இருப்பாரல்லவா!. அவரால் கெடுதல் விளையுமே, என்றாலும், இந்த அஷ்டமாதிபதியை
தவிர்க்க இயலாது. [ இவரே 6. 12 ஆகிய இடங்களில்
மறைந்தால் அது வேறு விஷயம். ]. இவர் எந்த ஸ்தானத்தில்
இருந்தாலும் கெடுதலே. சுபக்கிரகங்களின் பார்வையால்
இவர் கெடுதல்கள் குறையும், அல்லது தடுக்கப்படும்.
நிச்சயமாக நன்மை விளையப்போவதில்லை.
இவைகள் ஒரு புறம் இருக்க
அஷ்டமஸ்தானத்தாலும், யோகங்களை தந்து, ஜாதகரின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முடியும் என்பதையும்
நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். அஷ்டமம் பணபர ஸ்தானனகளில்
ஒன்று. எனவே ஜாதகரின் நிதினிலையை நிர்ணயித்து,
அவருக்கு அதில் செழிப்பை தரும் கடமையும் இந்த ஸ்தானத்திற்கு உண்டு. மேலும் கிரகங்களின் இணைவுகள் எனப்படும் யோகங்கள்
தரக்கூடிய நற்பலன்களும் இந்த ஸ்தானத்தின் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும். மேற்கண்ட இந்த விளக்கத்தை, தனது உத்திரகாலாம்ருதத்தில்,
4 வது அத்தியாயம், 22 வது ஸ்லோகத்தின் மூலம், மஹாகவி காளிதாசர் உறுதிப்படுத்துகிறார். அந்த ஸ்லோகத்தின் சாராம்சத்தை தமிழில் கீழே கொடுத்திருக்கிறேன்.
அசுபஸ்தானங்கள் என்று சொல்லப்படும்,
6, 8, 12 க்குரிய ஸ்தானாதிபதிகள், தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ வெவ்வேறு அசுபஸ்தாங்களில்
இடம் பெறவேண்டும். அல்லது, மேற்கண்ட ஸ்தானாதிபதிகள்
ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாகி இருக்கவேண்டும்.
அல்லது மேற்கண்ட ஸ்தானாதிபதிகள், குறைந்தபக்ஷம் இருவராவது ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு இருக்கும்போது, மற்ற கிரகங்களின் பரிவர்த்தனையோ
அல்லது பார்வையோ பெறக்கூடாது. இவ்வகை அமைப்பு
உடைய ஜாதகர், நாடாளும் யோகம், உலகளாவிய புகழ், பெயர், மற்றும், கணக்கற்ற திரண்ட செல்வம்,
ஆகியவைகளை பெறுவார். இம்மூன்றும் ஒருசேர கிடைக்கவில்லையாயினும்,
நிச்சயம் இவற்றில் ஒன்றை அவர் அனுபவிப்பார்.
இவைகள், இந்த யோகம் தரும் ஸ்தானாதிபதிகளின் தசாபுக்தி காலங்களில் நிகழும். இந்த யோகத்திற்கு ' விபரீத ராஜயோகம் ' என்று பெயர். [ முக்கிய குறிப்பு...................யோகம்
தரும் கிரகம் எந்த வகையிலும் தன் பலத்தை இழக்ககூடாது. அவ்வாறு பலமிழந்தால் யோகம் பங்கப்பட்டுவிடும். ]
இனி அஷ்டமத்திற்கு வருவோம். அஷ்டமத்தில் முழுபலத்துடன் 6, 12 ஆம் அதிபதிகள்
தனியாகவோ இணைந்தோ இருக்கலாம். அஷ்டமாதிபதியுடன்
6, 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை மற்றும் பார்வை பெறலாம். அதே நேரம் மற்ற கிரகங்களின் பரிவர்த்தனையோ, பார்வையோ
பெறக்கூடாது. இவ்வகை அமைப்புடன் இருக்கும்
அஷ்டமஸ்தானம் சிறந்த ராஜயோகம் தரும் என்பதில் ஐயமில்லை.
இந்த ஜோதிடவிதியின் அடிப்படையில்
அஷ்டமஸ்தானம், ஒரு சிறந்த ராஜயோகம் தரும் ஸ்தானமாகிறது. இப்படிப்பட்ட கிரக அமைப்பு கொண்ட யோகத்தால், தமிழ்னாட்டை
ஆட்சி செய்து, உலகளாவிய அளவில் பெயரும், புகழும் அடைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜாதக
கட்டத்தை உங்கள் பார்வைக்காக இணைத்திருக்கிறேன்.
அஷ்டமாதிபதி சூரியனுடன், சத்ருஸ்தானாதிபதி புதன் இணைவாலும், அதுபோல் விரையாதிபதி
குரு இணைவாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகி, அவருக்கு, நாடாளும் சிறப்பையும், உலகளாவிய
புகழையும் பெருமையையும் தந்தது. வேறொரு வகையில்
சத்ருஸ்தானாதிபதி புதனுடன், விரையாதிபதி குரு இணைவு என்று கூட கொள்ளலாம். இதுபோல் இந்த யோகத்த்தால், வாழ்க்கையின் சிகரத்தை
தொட்டவர்கள் நிறைய பேர்கள் உண்டு. உதாரணத்திற்கு,
திரு.சச்சின் டெண்டுல்கர், திரு. அமிதாப்பச்சன், திரு. நர்கிஸ் [ பழம்பெரும் இந்தி
நடிகை ], திரு. ராஜ்கபூர், திரு. ஐஸ்வர்யாராய் பச்சன், திரு. ரஜினிகாந்த், திரு. லதாமங்கேஷ்கர்,
திரு. ரவீந்திரனாத் டாகூர், திரு. ராம்கிருஷண டால்மியா, திரு. ஜுகல் கிஷன் பிர்லா ஆகியோரும்
விபரீத ராஜயோக ஜாதகர்களே. [ இந்த பட்டியல்
இணையதளத்திலிருந்து பெறப்பட்டது. ].
எனவே அஷ்டமத்தில் கிரகங்கள்
இருப்பின், அவைகள் யோகத்தை தருகின்றனவா? என்று முதலில் ஆராய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மட்டுமே, அந்த கிரகங்களால்
அஷ்டமஸ்தானத்திற்குரிய தீய பலன்கள் நடக்குமென்று உறுதி செய்துகொள்ள வேண்டும். நன்றி. வணக்கம்.
அருமை, அருமை அய்யா
ReplyDeleteSupper
ReplyDelete