ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். ஜாதகத்தில் வெளினாட்டு யோகம். [ அன்றும், இன்றும் ]. பாரம்பரிய முறையிலான பதிவு. லக்னம் சரஸ்தானமாகி, லக்னாதிப்தி, வேறு சரஸ்தானத்தில்
நின்றால், அதன் ஜாதகர் நிச்சயம் வெளினாடு சென்றுவிடுவார். இப்படி ஒரு எளிமையான ஜோதிட விதியை முற்காலத்தில்
அதிகமாக பயன்படுத்தி பலன் கூறி, அதில் ஜோதிடர்கள் வெற்றி பெற்று வந்தனர். தற்போது பரந்து விரிந்து கிடக்கும் இந்திய தேசம்,
முற்காலத்தில் பல குறுகிய நிலப்பரப்புகளாக பிரிந்து, அவைகள் பல மன்னர்களால் ஆளப்பட்டு
வந்தன. ஒரு மன்னனுடைய நாட்டிலிருந்து ஒரு பிரஜை,
இன்னொரு மன்னன் நாட்டுக்கு சென்றால் அது அயல்தேசமாகிவிடும். உதாரணத்திற்கு, புதுக்கோட்டையிலிருந்து ஒருவர்,
தஞ்சாவூர் வந்தாலே, அவர் அயல்னட்டுக்கு வந்துள்ளார் என்று பொருளாகிவிடும். புதுக்கோட்டை பாண்டியனாடாகவும், தஞ்சாவூர் சோழனாடாகவும்
இருந்த காலமது. எனவே மேலே சொல்லப்பட்ட ஜோதிடவிதி
அக்காலத்தில் மிக பரவலாக ஜோதிடர்களால் கையாளப்பட்டு வந்தது.
இதே விதியை இக்காலத்தில்
பயன்படுத்தினால் அதை எவ்வாறு? பொருள் கொள்வது என்று சிந்திக்கவேண்டியிருக்கிறது. மேற்கண்ட விதிப்படி ஜாதகம் அமைந்தவர்கள், வெளினாடு சென்றாக வேண்டும் என்றால் அவர், அண்டை
நாடுகளுக்காவது செல்லவேண்டும். ஆனால் அனுபவத்தில், மேற்கண்ட விதிப்படி ஜாதகம் அமைந்த
ஜாதகர்கள், மதுரையில் பிறந்தவர், பெங்களூர், மைசூர் தாண்டி, இன்னும் சொல்லப்போனால்
மும்பை தாண்டி செல்லாத நிலையை பார்க்கமுடிகிறது.
லக்னம் சரமாக இருந்தால், தொழில்ஸ்தானம் சரமாக இருக்கும். எனவே அவர் தொழிலுக்காக அவ்விடம் செல்வார். அதுபோல் லக்னம் சரமாக இருந்தால் களத்திரஸ்தானமும்
சரமாக இருக்கும். எனவே அவருக்கும் அமையக்கூடிய
மனைவி அவ்விடத்திலிருந்து அமைவாள். லக்னம்
சரமாக இருந்தால் இருப்பிடத்தை குறிக்கும் ஸ்தானமும் சரமாக இருக்கும். எனவே அவரது வாழ்க்கை மேற்கூறப்பட்ட ஊர்களில் அமையும். அக்காலத்தில் இவ்வாறு அமைவதையே, அயல்தேசதொழில்,
அயல்தேசமனைவி, அயல்தேசவாசம் என்று கூறிக்கொண்டனர். ஆனால் இக்காலத்தில் அயல்தேசமனைவி என்று சொல்லிக்கொள்ள
வேண்டுமானால் அவள் அடையாளமே வேறு. குறைந்தபட்சம்,
அண்டைனாடுகளான நேபாளத்திலோ அல்லது இலங்கையிலோ பிறந்தவளாக இருக்க வேண்டும். நம் அத்தை, மாமனுக்கு பிறந்திருந்தாலும், அவள் பிறப்பு
இந்திய எல்லைக்குள் நடந்திருக்கக்கூடாது. இப்படி
எல்லாமே பெரும் மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது.
எனவே நாம் நமது ஜோதிடவிதியிலும், இக்காலத்திற்கேற்ப உள்ள விதியை முதன்மையாக
கொண்டு, அக்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட விதியின் பொருளிலும் சில மாற்றங்களை
செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
என் அனுபவத்தில் நான் கடைபிடிக்கும்
விதியை விளக்க விரும்புகிறேன்.
...................... " லக்னாதிபதி
இருக்கும் பாவத்திற்கு, விரையாதிபதி, லக்னாதிபதிக்கு பகையாகவோ, அல்லது அஸ்தங்கமாகவோ,
நீசமாகவோ, அல்லது வேறு வழிகளில் வலுவிழந்தோ இருந்தால், ஜாதகர் வெளினாடு சென்றுவிடுவார். லக்னாதிபதி சரஸ்தானாதிபதியாக இருந்தால் ஜாதகர் குடும்பத்தோடு நிலையாக வெளினாட்டில் தங்கிவிடுவார். லக்னாதிபதி ஸ்திரஸ்தானாதிபதியாக இருந்தால், அவர்
குடும்பம் இந்தியாவில் இருக்க, ஜாதகர் மட்டும் வெளினாட்டுக்கு செல்வார். லக்னாதிபதி உபயஸ்தானாதிபதியாக இருந்தால், ஜாதகர
குடும்பத்தோடு, வெளினாட்டிலும், இந்தியாவிலும், மாறி, மாறி வாழ்னாளை கழிப்பவராக இருப்பார். இதில் இன்னும் நாம் கொஞ்சம் நுணுக்கத்தை கையாண்டால்,
செல்லும் நாடு உள்ள திசை, ஜாதகர் வெளினாடில் இருக்கப்போகும், இடத்தின் தன்மை ஆகியனவும்
கண்டுகொள்ளலாம். அதுபோல் வெளினாடு செல்லும்
காலம், இருக்கும் காலம் ஆகியனவும் அறியலாம்.
வெளினாட்டுக்கு செல்லவேண்டுமென்றால்,
அதற்குரிய யோகமான தசாபுக்தி வரவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இத்தகைய நேரங்களில் வெளினாடு சென்றால், செல்லும்
செலவுக்கு கடன் வாங்காமல், மகிழ்ச்சியாகவும், நல்லதொழில் புரிந்து, பெருந்தொகையை சம்பாதிக்கும்
வாய்ப்பை தரும் பயணமாக அது அமையும். சிலருக்கு
இது நேர் எதிர்மறையாக நடக்கும். கடன் வாங்கி,
மனவேதனையுடன், குடும்பத்தைவிட்டு பிரிந்து, நல்ல தொழில் அமையாமல், வாங்கிய கடனை அடைக்கவும்
முடியாமல் திணறுபவராகவும் இருப்பதுண்டு. இப்படி
எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கவும் கிரகங்களே காரணம். இத்தகையோருக்கு வெளினாடு செல்லும்வாய்ப்பு இருக்கும். அந்த வாய்ப்பானது, ஏழரைசனி காலத்திலோ, அல்லது
2, 8 ஆகிய ஸ்தானங்களில் ராகு, கேது, சனி அமையும் காலத்திலோ, அமைந்துவிடும். இக்காலகட்டத்தில் இந்த கிரகங்களானது, வெளினாடு சென்று
அவஸ்தைபடட்டும் என்றே, ஜாதகரை வெளினாட்டுக்கு இழுத்து சென்று தள்ளி விட்டுவிடும். முற்காலத்தில் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில், அரசதண்டனையாக
மனைவி, மக்களை பிரித்து, ஜாதகரை கிரகங்கள் நாடு கடத்த வைத்துவிடும். இக்காலத்தில் இந்த பலனை ஜாதகருக்கு நாம் சொல்ல முடியாது.
முற்காலத்த்ல் நிலவழி போக்குவரத்து
அதிகமாக இருந்தது. அதற்கடுத்து நீர்வழி போக்குவரத்து
இடம் பெற்றது. நீர்வழி போக்குவரத்து பெரும்பாலும்
ஆறுகள் வழியே நடந்தன. பெரும் செல்வம் படைத்த
வணிகர்கள் மட்டும், கடல் கடந்து, இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள, தீவுகளுக்கும், பர்மா,
தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று வணிகம் புரிந்து வந்தனர. வான்வழி போக்குவரத்து இல்லாமலிருந்த காலம் அது. வெளினாட்டு பயணம், நீர்வழியா? நிலவழியா> என்பதை
பஞ்ச பூத கிரகங்களில் நிலம், நீர்கிரகங்களையும், நில, நீர் ராசிகளையும் வைத்து சொல்லிவந்தனர். இக்காலத்தில் இவைகளோடு, வாயு கிரகங்கள், வாயு ராசிகள்
ஆகியவற்றை இணைத்து சொல்லி வருகிறோம். தற்போது
வான்வழிபோக்குவரத்து எளிதாகிவிட்டது. ஆக காலத்திற்கேற்பவும்,
பலனையும், அதற்கான விதிகளின் பொருளையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஜோதிடமானது, கால, தேச, வர்த்தமான மாற்றங்களுக்கு
உட்பட்டது என்பதை எல்லோரும் அறிவோம். ஆகவே
அம்மாற்றங்களையும் சிந்தித்து ஜோதிட பலன் உரைத்து வெற்றி பெறுவோமாக. இறைவன் திருவருள் புரியட்டும். நன்றி.