ஓம் நமசிவாய. அனைவருக்கும் வணக்கம். கிரகங்களில் நட்பு, பகை கண்டறியும் சூத்திரம். ஜோதிடம் பயில்பவர்க்கான பதிவு. கிரகங்களில் மற்றும் அவற்றின் வீடுகளில் நட்பு,
பகை நிர்ணயிப்பதில் சத்யாச்சாரியாருக்கு முன் ஒரு கொள்கையாகவும், அவருக்கு பின் வேறு
கொள்கையாகவும் மாறுபட்டுள்ளது. கிரகங்களில்
உச்ச, நீச, மூலத்திரிகோண, ஆட்சி வீடுகள் அறிவதில் எல்லோரும் ஒத்த கருத்துடையவர்களாக
இருந்தனர். மிக பழமையான நூல்களில் கிரகங்க்ளின்
நட்பு, பகை, மற்றும் அவற்றின் வீடுகள் அறிவதில் முரண்பாடுகள் இருந்தன. உதாரணத்திற்கு, சில நூல்களில் சிம்மத்தில் சந்திரன்
நட்பு எனவும், சில நூல்களில் பகை எனவும் வாதிடும் வகையில் உள்ளது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில் சத்தியாச்சாரியார்
தனது ஜோதிட நூலாகிய சத்தியாச்சாரியத்தில், ஒரு சூத்திரத்தை வகுத்து தந்திருக்கிறார். தற்காலத்தில் ஒரு சில பஞ்சாங்கங்களை தவிர மற்ற அனைத்து
பஞ்சாங்கங்களும் இந்த சூத்திரத்தையே பின்பற்றுகின்றன. திருக்கணிதம் முழுக்க முழுக்க நட்பு, பகையை இந்த
சூத்திரம் கொண்டே தீர்மானிக்கிறது.
சத்தியாச்சாரியாரின் சூத்திரம்........................."
ஒரு கிரகம் தான் மூலத்திரிகோணம் அடையும் ராசியிலிருந்து, 2. 4. 5. 8. 9. 12 ஆம் வீடுகளை
நட்பாகவும், அதன் ராசியதிபதிகளை நண்பர்களாகவும் கொள்ளும். அது போல் 3. 6. 7. 10. 11 ஆம் வீடுகளை பகை வீடாகவும்,
அதன் ராசியதிபதிகளை பகைவர்களாகவும் கொள்ளும். " ...........................
இதன்படி சந்திரனின் மூலத்திரிகோண
வீடாகிய ரிஷபத்திலிருத்து சூரியனின் வீடாகிய
சிம்மம் 4 ஆவது வீடு என்பதால் சந்திரனுக்கு சிம்மம் நட்புவீடு, அதன் அதிபதி
சூரியன் நட்புக்கிரகம். அதுபோல் சூரியனின்
மூலத்திரிகோண வீடாகிய சிம்மத்திலிருந்து, சந்திரனின் வீடாகிய கடகம் 12 ஆவது வீடு என்பதால்
சூரியனுக்கு கடகம் நட்பு வீடு. அதன் அதிபதி
சந்திரன் நட்புக்கிரகம். இதுபோல் மற்ற கிரகங்களுக்கும் கணிக்கலாம். சூரிய சந்திரர்களுக்கு முறையே ஒவ்வொரு வீடு மட்டுமே
உள்ளது. இரு வீடுகள் கொண்ட கிரகங்களின் நட்பு,
பகை எவ்வாறு கணிப்பது?
மேற்கண்ட கேள்விக்கு விடை
தேடும்போதுதான் கிரகங்களில் " சமம் " என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. சத்தியாச்சாரியாருடைய நூலுக்கு முன்னால் இந்த சமம்
என்பது கிடையாது. நட்பு, பகை மட்டுமே இருந்தன. உதாரணத்துக்கு இரு வீடுகள் கொண்ட செவ்வாயை கொண்டு
சுக்கிரனுக்கு செவ்வாய் எவ்வகை என கணிப்போம். சுக்கிரனின் மூலத்திரிகோண வீடாகிய துலாத்திலிருந்து
மேஷம் 7 வது வீடு என்பதால் பகை. ஆனால் விருச்சிகம்
2 வது வீடு என்பதால் நட்பு. இப்படி பகை, நட்பு
என இரண்டாக வரும் போது, இரண்டுக்கும் பொதுவாக சமம் என கொள்ள வேண்டும். எனவே சுக்கிரனுக்கு விருச்சிகமும், மேஷமும் சம வீடுகள். அவைகளின் அதிபதி செவ்வாய், சுக்கிரனுக்கு சம கிரகம்.
இப்படியாக பிற்காலத்தில்
சமம் என்ற ஒரு புதிய வகை உருவாக்கப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டது. இந்த புதிய முறையை சில வாக்கிய கொள்கையாளர்கள் இன்று
வரை ஏற்றுகொள்ளவில்லை. ஒரு சில வாக்கிய கொள்கையாளர்களும்,
முழுக்க, முழுக்க திருக்கணித கொள்கையாளர்களும் இந்த புதிய முறையை ஏற்றுக்கொண்டு, தற்போது
பஞ்சாங்கங்களை வெளியிட்டு வருகிறனர். தற்போது
இந்த புதிய முறையே பெரும்பான்மையாக உள்ளது.
திருக்கணித முறையை பின்பற்றும் நாம் அனைவரும் இதையே பின்பற்றுவோம். நன்றி.
No comments:
Post a Comment