ஓம் நமசிவாய.
அனைவருக்கும் வணக்கம். பெற்ற பிள்ளையை
தத்து கொடுக்கும் பெற்றோர்க்கான பதிவு இது.
இக்கட்டுரையில் பிள்ளையை எதனால் தத்து தர வேண்டும்? யாரிடம் தர வேண்டும்? தந்த பின் நம் கடமை என்ன? ஆகியவைகளை பற்றிய விளக்கம் உள்ளது. ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஒரு பிள்ளையின் ஜனன ஜாதகத்தில்,
தாய் ஸ்தானம், தந்தை ஸ்தானம் ஆகியன இரண்டும் ஒரு சேர பாதிக்கப்பட்டிருந்தால் தத்து
தர வேண்டும். இந்த ஸ்தானங்ளில் அசுப ஸ்தானாதிபதிகள்
இருப்பதாலும், பாப கிரக பார்வை விழுவதாலும், இவ்விரு ஸ்தானங்களுக்குரிய அதிபதிகள் அசுப
ஸ்தானகளில் இருப்பதாலும், அவை அஸ்தங்கம், நீசம், பகை போன்ற தன்மைகளை அடைவதாலும், அசுப
கிரகங்களின் சாரம் பெறுவதாலும், தாய் தந்தை ஸ்தானங்கள் பாதிப்படைகிறன. இதனால் பிள்ளைகள் மூலம் பெற்றோர்களுக்கு தீய பலன்
நடக்கும். பெற்றோரின் கனிவான ஆதரவும் பிள்ளைக்கு
கிடைக்காமல் போகும். இது வாழ்னாள் முழுதும்
தொடரக்கூடியது. இத்தகைய தீமைகளிலிருந்து விடுபட்டு,
பிள்ளையும், பெற்றோரும் நிம்மதி அடையும் வழியே தத்து கொடுப்பதாகும். அதாவது பெற்றோர் பிள்ளை என்ற உறவுமுறையையும், உரிமையையும்
மற்றவரிடம் விட்டு கொடுப்பதாகும். இப்படி உறவும்,
உரிமையும் விட்டு போகும் போது பிள்ளையால் பெற்றோருக்கும், பெற்றோரால் பிள்ளைக்கும்
நிகழவிருந்த தீய பலனும் விட்டுப்போய்விடுகிறது.
பிள்ளை நம்மிடமே இருக்கும். விட்டுப்போவதில்லை.
சிலர் பிள்ளைக்கு கடுமையான
சுகவீனம் ஏற்பட்டு தவிக்கும் போது தத்து கொடுக்க வேண்டும் என்பர். தற்சமயம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளையானது,
பிறந்த பின் அக்குடும்பம் சிறந்த முன்னேற்றம் கண்டிருக்கும். அதற்கு காரணம் பிள்ளையின் யோக ஜாதகமே. தத்து தந்தால் அந்த யோகமும் சேர்ந்து தத்து பெறுபவரிடம்
போய்விடும். ஜனன ஜாதகத்தில் நோயிடமிருந்து
மீள்வதற்கு, அதற்கான பரிகார வழிமுறைகளுக்கு நிச்சயம் இடம் இருக்கும். அதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். பரிகார வழிபாடுகள் மேற்கொள்வதற்கும் தந்தை ஸ்தானம்
எனப்படும், பாக்கிய ஸ்தானம் சுபகரமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வழிபாடுகளும் செல்லுபடியாகாது. அந்த நிலையில் தத்து கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே தத்து கொடுக்க முக்கிய காரணமாக தாய் தந்தை
ஸ்தானங்களை கவனிக்க வேண்டும்.
தத்து கொடுப்பது என்று
முடிவாகிவிட்டால், குலதெய்வத்திடமோ அல்லது பிள்ளையின் ஜாதகப்படி இஷ்ட தெய்வத்திடமோ
தத்து தரவேண்டும். இப்படி கொடுப்பதால், அப்போது
முதல் அந்த பிள்ளைக்கு பெற்றோராக தெய்வம் ஆகிவிடும். பிள்ளையின் ஜாதக பலன் பெற்றோராக இருக்கும் தெய்வத்தை
பாதிக்காது. மனிதர்களிடம் தத்து தந்துவிட்டால்
அதன் பாதிப்பு வளர்க்கும் பெற்றோரை தொற்றிக்கொள்ளும். அக்காலத்தில் தாய்மாமனிடமும், உறவினர்களிடமும் தத்து
தந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. தத்து பெறுவோருக்கு
புத்ரபாக்கியம் இருந்திருக்காது. ஆகவே வம்ச
விருத்திக்காக பிள்ளையை தத்தெடுப்பது வழக்கம்.
மேலும் சொத்து அன்னியரிடம் வீணாக போய்விடக்கூடாது என்பதற்க்காகவும் நெருங்கிய
உறவுப்பிள்ளைகளை தத்தெடுத்துகொண்டனர். இவ்வகை
தத்துக்களில் பிள்ளையின் ஜாதகம் ஆராயப்படும்.
பெற்றோர் ஸ்தானமும், ஆயுளும், நிறைவாக இருந்தால் மட்டுமே தத்து பெற்றுக்கொள்வர். ஆகவே தெய்வத்திடம் தத்து தருவதற்கும், மனிதர்களிடம்
தத்து தருவதற்கும் காரணங்கள் வெவ்வேறானவை.
தெய்வத்திடம் தத்து தந்த
பின் அந்த பிள்ளை தெய்வத்தின் உரிமையாகிவிடுகிறது. எனவே தத்துப்பிள்ளையை நாம் வளர்த்தால் கூட அதன்
உரிமை தெய்வத்திடம் உள்ளது என்பதை மறக்கக்கூடாது.
ஆகவே அப்பிள்ளையின் வாழ்க்கையில் நாம் நடத்தும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும்
தெய்வத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும். நம்மை
மறந்து நம் பிள்ளை என்ற உரிமையோடு செயல்பட்டு விடக்கூடாது. முக்கியமாக, பெண் பிள்ளையின் திருமணத்தின் போது
தாரை வார்த்து கொடுக்கும் உரிமையை நாம் நம் கையில் எடுத்துகொண்டுவிடக்கூடாது. எனவே இந்த சம்பிரதாயம் இடம் பெறாத வகையில் திருக்கோவில்களில்
திருமணத்தை நடத்த வேண்டும். ஆண் பிள்ளை விஷயம்
வேறு வகை. அப்பிள்ளை பெற்றோருக்கு ஈமக்கிரியைகள்
செய்யக்கூடாது. ஏனென்றால் பிள்ளையின் பெற்றோர்
தெய்வமல்லவா? பிள்ளை எப்படி மனைதனுக்கு ஈமக்கிரியையகள்
செய்ய முடியும். இவ்விஷயத்தில் சாஸ்த்திரங்களில்
விதிவிலக்கு சொல்லப்பட்டுள்ளனவா? என்று ஆராய வேண்டியுள்ளது.
எனவே தத்து தருவதின் உண்மையான
காரணமறிய ஒரு நல்ல ஜோதிடரை கலந்தாலோசிக்க வேண்டும். தெய்வத்துக்கு தருவதா? மனிதருக்கு தருவதா? என்ற
முடிவுக்கு பின்பு வரவேண்டும். குலதெய்வம்
அல்லது ஜாதகப்படி இஷ்ட தெய்வம் அறிந்து தத்து தரவேண்டும். இவ்வழியை பின்பற்றினோமானால் பெற்றோர், பிள்ளை என
இரு தரப்பினரும் நிம்மதியுடன் ஆனந்தமாய் வாழலாம்.
அதற்கு இறைவன் திருவருள் புரிவானாக...........நன்றி வணக்கம்.